|
|||||||||
|
வன்முறையை வேரறுப்போம் வா! 1970 அல்லது 1971-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். நான் அப்போது சிவகாசிக் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். தமிழ்நாடு அரசு சார்பில் தமிழரசு என்னும் பெயரில் மாத இதழ் ஒன்று வெளிவந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். அந்த இதழில் வெண்பாப் போட்டி நடத்தி வந்தார்கள். இதழ்தோறும் ஈற்றடி தந்து வெண்பா எழுதச் சொல்லி இருப்பார்கள். தேர்ந்தெடுக்கப்ப்பட்ட 40 வெண்பாக்களை அடுத்த இதழில் பிரசுரிப்பார்கள். அவற்றுள் சிறந்த ஒரு வெண்பாவைத் தேர்ந்தெடுத்துப் பரிசு பெற்ற வெண்பா என்ற அறிவிப்புடன் முதல் வெண்பாவாக, எழுதியவரின் முழு முகவரியோடு வெளியிடுவர். அதற்குரிய பரிசு தமிழரசு இதழின் ஓராண்டுச் சந்தா ஆகும். தொடர்ந்து 12 இதழ்கள் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். ஈற்றடியை நிறைத்து வெண்பா பாடுவது எனக்குக் கைவந்த கலை என்பதால் தமிழரசு நடத்திய வெண்பாப் போட்டியில் நான் தொடர்ந்து கலந்து கொள்வதுண்டு. என்னுடைய பல வெண்பாக்கள் வெளிவந்துள்ளன. கல்லூரி நண்பர்கள் அஞ்சலட்டை கொண்டுவந்து நான் சொல்லும் வெண்பாவை எழுதி அவர்கள் பெயரில் அனுப்பி வைப்பர். அவ்வாறு அனுப்பிய வெண்பாக்கள் சிலவும் நண்பர்கள் பெயரில் வெளியாகியுள்ளன. அக்கால கட்டத்தில் கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். அவரின் திருச்சி மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது அவர் செல்லவிருந்த பாதையில் குடமுருட்டி ஆற்றுப் பாலத்தில் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்தவர்கள் நக்சலைட்டுகள் என அரசு கூறியது. பொதுவாகக் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும், குறிப்பாக நக்சலைட்டுகளுக்கு எதிராகவும், வன்முறைக்கு எதிராகவும் ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வெளிவந்தன. அந்த மாதத்துத் தமிழரசு இதழ் வெண்பாப் போட்டியில் வன்முறையை வேரறுப்போம் வா என்னும் ஈற்றடி தரப்பட்டது. அப்போட்டிக்கு நானும் சில வெண்பாக்களை அனுப்பி வைத்தேன். வன்முறையை எதிர்த்தும், கம்யூனிசத் தீவிரவாதக் கொள்கைகளை எதிர்த்தும் பாடப்பட்ட வெண்பாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. ஆச்சரியம் என்னவெனில் கம்யூனிசக் கொள்கையையே வலியுறுத்தி எழுதப்பட்ட என்னுடைய வெண்பா பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது வெண்பாவாக வெளியிடப்பட்டிருந்தது. பரிசு பெற்ற அந்த வெண்பா:
கோட்டை குடிசையென்று கூறுகின்ற வேற்றுமையேன்? போட்டியை நடத்தியோர் எத்தகைய கருத்துக் கொண்டிருந்த போதிலும், வெண்பாவில் நான் பயன்படுத்தியிருந்த சொல் விளையாட்டின் சிறப்பு காரணமாக, சமூக அமைப்புமுறையை அடியோடு மாற்றியமைக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுக்கும் பொருளில் அமைந்த வெண்பாவுக்குப் பரிசு தந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். குறிப்பு: இதே ஈற்றடியை வைத்து வாசகர்களும் வெண்பாக்களை அனுப்பி வைக்கலாம். சிறந்தவற்றை இங்கே பிரசுரிப்பேன். |
|
|||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||