மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

வாழ வகுப்போம் வழி!

[1994-இல் நான் பணிபுரிந்த அலுவலகத்தில் முத்தமிழ் மன்றம் ஈற்றடி வெண்பாப் போட்டி நடத்தியது. என் முன்கதை அறிந்த என்கீழ்ப் பணிபுரிந்த அலுவலர்கள் என்னை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கேட்டுக் கொண்டனர். கவிதை எழுதுவதை நிறுத்தி 20 ஆண்டுகள் ஆன நிலையில் முதலில் மறுத்த நான் அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கினேன். கடகடவென நான் வெண்பாக்களைக் கூற என் உதவியாளர் எழுதி, எடுத்துச் சென்று போட்டியில் சேர்த்தார். முதல் வெண்பாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. அனைத்துமே சிறந்த வெண்பாக்கள் என முத்தமிழ் மன்றப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது]

காடு வளர்த்திடுவோம்! காற்று,நீர் மாசுபடும்
கேடு களைந்திடுவோம்! கேள்தோழா! - நாடுநகர்ச்
சூழல் எழில்காத்துத் தூய்மை நலம்பெருக்கி,
வாழ வகுப்போம் வழி!

இல்லாரும் கல்லாரும் இல்லாமல் செய்திடுவோம்!
’எல்லார்க்கும் எல்லாம்’ எனவுரைப்போம்! - பொல்லாங்கு
மாள வகைசெய்வோம்! மக்கள் சரிசமமாய்
வாழ வகுப்போம் வழி!

பாரதத்தை துண்டாடும் பாதகத்தைக் கண்டறிந்து
வேரறுப்போம்! ஐக்கியத்தை வென்றெடுப்போம்! - தாரணியில்
நாளும் அமைதியிலே நல்லொருமைப் பாட்டுடனே
வாழ வகுப்போம் வழி!

ஊழா? வினையா? உறுத்துவந்(து) ஊட்டுமா?
தாளா துழைப்போர்க்குத் தாழ்வில்லை! - தோழா!நாம்
ஆழக் குழியில் அறியாமையைப் புதைத்து,
வாழ வகுப்போம் வழி!

’சாதி’ ‘இனம்’சொல்லும் சண்டாளர் சூழ்ச்சிகளை
மோதி மிதித்து முறியடிப்போம்! - நீதிக்குக்
காலம் துணையிருக்கும்! காதலரே, நாமிணைந்து
வாழ வகுப்போம் வழி!

சுட்டு விரலாகிச் சுட்டவிழி நீர்துடைப்போம்!
கொட்டு மழைக்குக் குடையாவோம்! - ஒட்டுறவாய்
ஈழத் தமிழ்மக்கள் என்றும் அமைதியிலே
வாழ வகுப்போம் வழி!

குறிப்பு: இதே ஈற்றடியை வைத்து வாசகர்களும் வெண்பாக்களை அனுப்பி வைக்கலாம். சிறந்தவற்றை இங்கே பிரசுரிப்பேன்.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்