மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்

என் வரலாறு
சுருக்கமாக | விரிவாக

 பிறப்பு:    சுருக்கமாக | விரிவாக

இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில், வேடசந்தூர் வட்டத்தில், வேடசந்தூருக்கு வடக்கே எட்டு கி.மீ. தொலைவில் இருக்கும் கூவக்காபட்டி என்னும் குக்கிராமத்தில், முனியப்பன், சின்னக் கண்ணம்மாள் என்பாருக்குப் பன்னிரண்டாவது பிள்ளையாக, 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் நாள் (அனேகமாக), ஒரு புதன்கிழமை மாலை ஆறு மணிக்குப் பிறந்தேன்.

 தொடக்கப் பள்ளிக் கல்வி   சுருக்கமாக | விரிவாக

ஊருக்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள வெள்ளைய கவுண்டனூர் தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலும், கூவக்காபட்டித் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு இரண்டு ஆண்டுகளும் படித்து முடித்தேன்.

 உயர்நிலைப் பள்ளிக் கல்வி   சுருக்கமாக | விரிவாக

வேடசந்தூர் கழக உயர்நிலைப் பள்ளியில் (அரசு பள்ளி) ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்புவரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாகவே படித்து முடித்தேன். அப்போது பதினோராம் வகுப்பு வரைதான் பள்ளிக் கல்வி. பிறகு கல்லூரியில் பியுசி படிக்க வேண்டும். அதன் பிறகே பட்டப் படிப்பு. பதினோராம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறினேன்.

 கல்லூரிக் கல்வி   சுருக்கமாக | விரிவாக

சிவகாசியில் உள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுரியில் பியுசியும், பிஎஸ்சி கணிதமும் படித்து முடித்தேன். பதினோராம் வகுப்பில் நான் எடுத்த அதிக மதிப்பெண்ணின் பயனாக, என்னுடைய கல்விச் செலவு முழுவதையும் அய்ய நாடார் அறக்கட்டளையே ஏற்றுக் கொண்டது.

 பல்கலைக் கழகக் கல்வி   சுருக்கமாக | விரிவாக

மதுரைப் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறையில் எம்.எஸ்சி. சிறப்புக் கணிதம் பயின்றேன். உலகத் தரம் வாய்ந்த கணிதப் பேராசிரியர்களிடம் கணிதம் கற்றேன். பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, தேர்வு முறை எல்லாமே அமெரிக்க, இங்கிலாந்துப் பல்கலைக் கழகங்களில் உள்ளது போன்றே இருந்தது. எங்கள் வகுப்பில் பயின்ற சரிபாதிப்பேர் தாக்குப் பிடிக்க முடியாமல் பாதியிலேயே போய்விட்டனர். நான் நன்றாகப் படிக்கும் மாணவன் எனப் பெயரெடுத்தேன். முதல் வகுப்பும், இரண்டாம் ரேங்கும் எடுத்துத் தேறினேன் (1974).

 கல்வித் தகுதி   சுருக்கமாக | விரிவாக

என்னுடைய இன்றைய கல்வித் தகுதி:

எம்.எஸ்சி. (கணிதம்)
எம்.ஏ. (தமிழ் இலக்கியம்)
எம்.எல். (தொழிலாளர் சட்டம்)
எம்.பி.ஏ. (மனித வள மேலாண்மை)
எம்.சி.ஏ. [முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாடு]

மதுரைப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.ஃபில். (தொழிலாளர் மேலாண்மை) படித்து, எழுத்துத் தேர்வுகள் தேறிய போதும் ஆய்வுக் கட்டுரை (Thesis) சமர்ப்பிக்க முடியாமல் போனதால் பட்டம் பெறவில்லை.

 பணி அனுபவம்   சுருக்கமாக | விரிவாக

இந்திய அரசின் தொலைதொடர்புத் துறையில் (தற்போது பி.எஸ்.என்.எல்.) 1974 ஜூன் முதல் 2007 மே வரையில், இளநிலைப் பொறியாளர், இளநிலைத் தொலைதொடர்பு அதிகாரி, உதவி இயக்குநர், கணிப்பொறி விரிவுரையாளர், பொறியியல் அதிகாரி, துணக்கோட்டப் பொறியாளர், முதுநிலைத் துணைக்கோட்டப் பொறியாளர், கோட்டப் பொறியாளர் ஆகிய பணிப் பொறுப்புகளில் 33 ஆண்டு காலம் பணிபுரிந்துவிட்டு (முழுப் பணிக்காலமும் சென்னை நகரிலேயே) 2007 மே 20-இல் விருப்ப ஓய்வு பெற்றேன்.

 இலக்கிய அனுபவம்   சுருக்கமாக | விரிவாக

பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் படித்த காலங்களில் நான் ஓர் இலக்கியவாதியாகவே அடையாளம் காணப்பட்டுள்ளேன். இலக்கிய ஆர்வலனாகவும், படைப்பாளியாகவும், விமர்சகனாகவும் இருந்துள்ளேன். கவிஞனாக வாழ்ந்திருக்கிறேன். யாப்பிலக்கணத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். மரபுக் கவிதைகளின் நீள, அகல, ஆழங்களைக் கண்டிருக்கிறேன். வெண்பாவில் விளையாடி இருக்கிறேன். எண்சீர் விருத்தங்களில் இழைந்திருக்கிறேன். புதுக்கவிதை என்று சொல்லப்படும் இக்காலக் கவிதையையும் விட்டு வைக்கவில்லை. கவியரங்குகளிலும், கருத்தரங்குகளிலும், பட்டி மன்றங்களிலும் முழங்கியுள்ளேன். சிலகாலம் ஓர் இலக்கிய இதழை (சகாப்தம்) நடத்தியுள்ளேன். அதன்மூலமாக அக்கால முன்னணித் தமிழ் இலக்கியவாதிகளின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறேன்.

  கணிப்பொறித் துறை அனுபவம்   சுருக்கமாக | விரிவாக

ஓர் இலக்கியவாதியாகப் பரிணமித்த நான் காலப்போக்கில் ஒரு கணிப்பொறி வல்லுநராய் மாறிப் போனேன். கணிப்பொறி அறிவியலைச் சொந்தமாகவே கற்றுக் கொண்டு அதில் கரை கண்டிருக்கிறேன். பல மென்பொருள்களை உருவாக்கியுள்ளேன். பத்திரிகைகளில் கணிப்பொறி தொடர்பாக நிறைய எழுதியுள்ளேன். ’கணிப்பொறிப் பாடங்களைத் தமிழில் எழுதிய முன்னோடி’ எனப் பெயர் பெற்றுள்ளேன். கணிப்பொறி அறிவியலின் உயர்நிலைத் தொழில்நுட்பங்களை எளிதில் புரியும்படித் தமிழில் எழுதியுள்ளேன். அவற்றை நூலாகவும் வெளியிட்டுள்ளேன். கணிப்பொறி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளேன். பல்கலைக்கழக எம்சிஏ மாணவர்களுக்குப் பாடம் எடுத்துள்ளேன். தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் எழுதியுள்ளேன். கணிப்பொறி அறிவியலில் ஏராளமான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கியுள்ளேன்.

 என் குடும்பம்   சுருக்கமாக | விரிவாக

துணைவியார் சாரதா. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கோட்டப் பொறியாளராகப் பணிபுரிகிறார். மகள் ஜென்னி சினேகலதா. மகன் லெனின் ரவீந்தரநாத். ஜென்னியும், கணவர் பாலச்சந்தரும் அமெரிக்காவில், வாஷிங்டன் மாநிலத்தில் ரெட்மாண்டில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரிகின்றனர். பேத்தி சிந்தனா பாரதி - முதல் வகுப்புப் படிக்கிறாள். பேரன் ஆதவ் பகத் - கின்டர் கார்டன் சேர்ந்துள்ளான். லெனின் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் எம்.ஐ.டீ-யில் பி.எச்டி. பட்டத்துக்கு ஆய்வு செய்து வருகிறார். லெனினின் துணைவியார் தங்கம் அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரிகிறார்.

என்னுடன் பிறந்தவர்கள்: ஒரேவோர் அக்காள் தவமணி. பிள்ளைகள், பேரன், பேத்திகளுடன் கிராமத்தில் வசிக்கிறார். ஒரேவோர் அண்ணன் தங்கவேல். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். தமிழ்நாடு அரசுக் கருவூலத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றபின் செல்பேசிக் கடை நடத்துகிறார். துணையார் தனலட்சுமி. இவர்களின் மூத்த மகன் கண்மணி ராஜா சென்னையில் டெர்பி நிறுவனத்திலும், இளைய மகன் ஏங்கெல்ஸ் இளஞ்செழியன் அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் பெய்லி நிறுவனத்திலும், மகள் லெனினா தேவி அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகத்திலும் பணிபுரிகின்றனர். மூவருக்கும் திருமணமாகிப் பிள்ளைகள் உள்ளன.

வரலாறு இன்னும் தொடரும்...

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்