மு.சிவலிங்கம் வலையகம்

நான் எழுதிய நூல்கள்

நான் எழுதிய நூல்கள்

நான் எழுதிய புத்தகங்களின் பட்டியல், நூல்களைப் பற்றிய சிறு குறிப்புடனும், நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களின் முகவரியுடனும் இங்கு தரப்பட்டுள்ளது. நூல்களை வாங்க விரும்புவோர் வெளியிட்ட பதிப்பகங்களைத் தொடர்பு கொள்ளவும். சில நூல்கள் இணைய அங்காடிகளிலும் கிடைக்கின்றன.

 நெட்வொர்க் தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் பயிலும் கல்லூரி மாணவர்க்கும், கம்ப்யூட்டர் நெட்வொர்க் பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படும் அரிய நூல் எளிய தமிழில்!

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2012 டிசம்பர் 28-30 தேதிகளில் நடைபெற்ற, 11-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில், இந்த நூல் வெளியிடப்பட்டது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ அவர்கள் வெளியிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் ஆர். மீனாட்சிசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்த நூல், கம்ப்யூட்டர் நெட்வொர்க் தொழில்நுட்பம் பற்றி, எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், எளிய தமிழில் எழுதப்பட்ட ஒரு முழுமையான நூல். தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள், நவீனக் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேறுவதற்கு, ஆங்கிலம் ஒரு தடைக்கல்லாக அமைந்துவிடக் கூடாது என்கிற நோக்கில், தமிழில் எழுதப்பட்டுள்ள தரமான நூல். எந்தவோர் ஆங்கில நூலிலும் இல்லாத அளவுக்கு விரிவாகவும், விளக்கமாகவும், எளிமையாகவும், முழுமையாகவும், உலகத் தரத்துடன் எழுதப்பட்டுள்ள உயர்கல்விப் பாடநூல். அதுமட்டுமின்றி, எத்தகைய கடினமான அறிவியல் தொழில்நுட்பக் கருத்தாக்கங்களையும், ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழில், எளிமையாகப் புரியும் வண்ணம் எடுத்துக்கூற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் நூல்.

இந்த நூல், அப்ளிகேஷன் லேயர், டிரான்ஸ்போர்ட் லேயர், நெட்வொர்க் லேயர், டேட்டா-லிங்க் லேயர், ஃபிசிக்கல் லேயர் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றியும் அவற்றில் செயல்படும் புரொட்டக்கால்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. டீசிபீ/ஐபீ பற்றி வேறெந்த நூல்களிலும் இல்லாத அளவுக்கு விளக்கமான பாடங்கள் உள்ளன. சிசிஎன்ஏ தேர்வுக்குத் தேவைப்படும் அளவுக்கு, ஐபீ-வி4, ஐபீ-வி6 புரொட்டக்கால்கள், அவற்றின் முகவரி அமைப்புகள் பற்றிய விவரங்களைத் தருகிறது. வயர்லெஸ் நெட்வொர்க்குகள், புளூடூத், வைஃபி, வைமாக்ஸ், வயர்லெஸ் பிராட்பேண்ட், வர்ச்சுவல் லேன் ஆகிய தொழில்நுட்பங்களை விரிவாக விளக்குகிறது. 2-ஜி, 3-ஜி, 4-ஜி மொபைல் தகவல்தொடர்புத் தொழில்நுட்பங்கள், மொபைல் ஐபீ பற்றிய பாடங்களையும் கொண்டுள்ளது. மல்ட்டிமீடியா நெட்வொர்க்குகள் பற்றித் தனியாக ஓர் அத்தியாயத்தில் ஏழு பாடங்கள் அமைந்துள்ளன. கிரிப்டோகிராஃபி, டிஜிட்டல் சிக்னேச்சர், ஆதன்டிகேஷன் புரொட்டக்கால்கள், ஐபீ-செக், எஸ்எஸ்எல், ஃபயர்வால் இவைபோன்ற நெட்வொர்க் பாதுகாப்பு பற்றிய அனைத்து நுட்பங்களையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. நெட்வொர்க் மேலாண்மை பற்றிய பாடங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த நூல், பி.இ. கணிப்பொறியியல் அல்லது பி.டெக். தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் வகுத்துள்ள பாடத்திட்டத்தின்படி, கம்ப்யூட்டர் நெட்வொர்க் தாளுக்குரிய அனைத்துப் பாடங்களையும் முழுமையாகக் கொண்டுள்ளது. கிரிப்டோகிராஃபியும் நெட்வொர்க் பாதுகாப்பும், மொபைல் தகவல்தொடர்பு ஆகிய தாள்களுக்குரிய பெரும்பாலான பாடங்களையும் இந்த நூல் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, எஃப்டீபீ, எஸ்எம்டீபீ, டிஎன்எஸ், ஹெச்டீடீபீ, டீசிபீ/ஐபீ ஆகிய புரொட்டக்கால்களைப் பயன்படுத்திப் பல்வேறு நெட்வொர்க் அப்ளிகேஷன்களை உருவாக்கி, நடைமுறையில் செயல்படுத்தி வருகின்ற, நெட்வொர்க் புரோகிராமர்களுக்குப் பயன்படும் கட்டளைகளும், பதிலுரைகளும், பிழைசுட்டும் குறிமுறைகளும் விரிவாக இந்த நூலில் தரப்பட்டுள்ளன. ஆங்கில மொழியில் வெளிவந்துள்ள பொதுவான நெட்வொர்க் பாட நூல்களில் இத்தகைய தகவல்களைக் காண முடியாது.

இந்த நூல், பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில், பயிற்சியகங்களில் கம்ப்யூட்டர் நெட்வொர்க் பயிலும் மாணவர்களுக்குப் பாட நூலாகவும் (Text Book), கற்றுத்தரும் ஆசிரியர்களுக்குக் குறிப்பு நூலாகவும் (Reference Book) பயன்படும். ஆசிரியர், மாணவர்கள் மட்டுமின்றி, ஆர்வமுள்ள எவரும் இந்த நூலைப் படித்து, கம்ப்யூட்டர் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.

நூல் வெளியீடு:
பாரதி பகத் பதிப்பகம்
கே-2, இராஜேந்திரா குடியிருப்பு
எண்-11, பாபு இராஜேந்திர பிரசாத் முதல்தெரு,
சென்னை – 600 006.
தொலைபேசி: (044) 23713344, 9444152535
பக்கங்கள் 960. விலை ரூ.550/-

மேற்கண்ட முகவரியில் இந்நூலைப் பெறலாம்.                       [உச்சிக்கு]

 டி’பேஸ் வழியாக சி-மொழி

1980-களில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த டி’பேஸ் நிரலாக்கத்தில் (dBase Programming) அனுபவம் பெற்றவர்கள் சி-மொழியை எளிதாகக் கற்றுக் கொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல். டி’பேஸுடன் சி-மொழியை ஒப்பிட்டு எழுதப்பட்ட முதல் நூல். சி-மொழி பற்றித் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல். 1994-95 இல் ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழில் இதே பெயரில் தொடராக வெளியிடப்பட்டது.

நூல் வெளியீடு:
வளர்தமிழ் பதிப்பகம்
37, அஜீஸ் முல்க் இரண்டாம் தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006.
தொலைபேசி: (044) 28292390, 28293230
பக்கங்கள் 304. விலை ரூ.90/-

குறிப்பு: இந்த நூலின் அச்சுப் பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. மறுபதிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டு மாவட்டக் கிளை நூலகங்களில் இந்த நூல் இடம் பெற்றுள்ளது.         [உச்சிக்கு]

 வருங்கால மொழி சி#

சி# மொழியின் அடிப்படைகள் பற்றிய முழுமையான நூல். சி# மொழியின் மூலக் கூறுகள் அனைத்தையும் விளக்கும் ஒரே நூல். சி# மொழியின் அடிப்படைக் கருத்துரு (basic concept) ஒவ்வொன்றையும் விளக்கும் எடுத்துக்காட்டு நிரல்களைக் (Programs) கொண்டது. எம்.சி,ஏ., எம்.எஸ்சி., பி.இ. மாணவர்களுக்குப் பாட நூலாகப் பயன்படும் நூல். ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் சி# மொழியின் கருத்துருவை சி, சி++, ஜாவா ஆகிய மொழிகளோடு ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளது. இந்நூலைப் படிப்பவர்கள் ஜாவா மொழியையும் சேர்த்துக் கற்கின்ற பலனைப் பெறுவர். ஏற்கெனவே ஜாவா மொழி கற்றவர்கள் மிக எளிதாக சி# மொழியைக் கற்றுக் கொள்ள இந்த நூல் உதவும். ஆங்கில மொழியில்கூட இதுபோன்ற ஒரு நூல் வெளிவரவில்லை என நூல் ஆய்வாளர்களால் பாராட்டப்பட்ட நூல்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாட்நெட் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மொழிக்கான வரையறுப்புகளை உருவாக்கியிருந்தது. அந்த மொழிக்கான கம்ப்பைலரை உள்ளடக்கிய மென்பொருள் இன்னும் வெளியிடப்படாதபோதே ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழில் இதே தலைப்பில் கட்டுரைத் தொடர் வெளிவந்தது. அப்போது ஆங்கில மொழியில்கூட சி# மொழி பற்றிய நூல்கள் எதுவும் கிடையாது. கட்டுரைத் தொடர் வெளிவந்து சில மாதங்கள் கழித்தே சி# மொழிக்கான கம்ப்பைலரின் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டது.

நூல் வெளியீடு:
வளர்தமிழ் பதிப்பகம்
37, அஜீஸ் முல்க் இரண்டாம் தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006.
தொலைபேசி: (044) 28292390, 28293230
பக்கங்கள் 720. விலை ரூ.290/-

மேற்கண்ட முகவரியில் இந்நூலைப் பெறலாம்.                       [உச்சிக்கு]

 கம்ப்யூட்டர் இயக்க முறைகள்
 டாஸ், யூனிக்ஸ், விண்டோஸ் கையேடு

இந்த நூலின் முதல் பகுதியில் கணிப்பொறி இயக்க முறைமை (Operating System) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? என்பதை எளிதாகப் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது. அடுத்த பகுதியில் டாஸ் இயக்க முறைமையின் அகக் கட்டளைகள், புறக் கட்டளைகள் விளக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து யூனிக்ஸ் இயக்க முறைமையின் அடிப்படையான கட்டளைகள் விளக்கப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியில் விண்டோஸ் இயக்க முறைமையின் நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இந்த நூலைப் படிப்பவர் கணிப்பொறி இயக்க முறைமை பற்றி அறிந்து கொள்வதுடன் டாஸ், யூனிக்ஸ், விண்டோஸ் இயக்க முறைமைகளில் செயல்படும் முறைகளையும் தெரிந்து கொள்கிறார். இந்த நூலின் முதல் பதிப்பு 2001-இல் வெளியிடப்பட்ட சில மாதங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாம் பதிப்பு 2003-இல் வெளியிடப்பட்டது.

நூல் வெளியீடு:
பழனியப்பா பிரதர்ஸ்
கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை,
இராயப்பேட்டை, சென்னை – 600 004.
தொலைபேசி: +91-44-28131863
பக்கங்கள் – 200. விலை ரூ.60/-

மேற்கண்ட முகவரியில் இந்நூலைப் பெறலாம்.                       [உச்சிக்கு]

 மின்-அஞ்சல்

மின்–அஞ்சல் பற்றிய முழுமையான நூல். 2003-இல் வெளியிடப்பட்டது. இணையம் வழங்கும் மின்னஞ்சல் சேவையின் சிறப்புப் பற்றியும், ஹாட்மெயில், யாகூ, ரெடிஃப் போன்ற இலவச மின்னஞ்சல் சேவைகளில் கணக்குத் தொடங்குவது பற்றியும், தமிழில் மின்னஞ்சல் அனுப்பும் முறை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. வெப் மெயில், பாப் மெயில் இடையிலான வேறுபாடும், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்ற அஞ்சல் நுகர்வி மென்பொருள் மூலம் பாப் வகை மெயிலைப் பயன்படுத்தும் முறையும் விளக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் எவ்வாறு செயல்படுகிறது என்கிற தொழில்நுட்ப விளக்கமும் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலச் சொற்களைக் கலக்காமல் முழுக்க முழுக்கத் தமிழ்க் கலைச்சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நூல். தமிழ்க் கலைச்சொற்களின் பட்டியல், இணையான ஆங்கிலச் சொற்களுடன் நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ளது. இந்துப் பத்திரிகையின் நூல் மதிப்புரைப் பகுதியில் மிகவும் பாராட்டப்பட்ட நூல்.

நூல் வெளியீடு:
பழனியப்பா பிரதர்ஸ்
கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை,
இராயப்பேட்டை, சென்னை – 600 004.
தொலைபேசி: +91-44-28131863
பக்கங்கள் – 143. விலை ரூ.50/-

மேற்கண்ட முகவரியில் இந்நூலைப் பெறலாம்.                       [உச்சிக்கு]

 டாஸ் கையேடு

டாஸ் இயக்க முறைமையின் அகக் கட்டளைகள் (Internal Commands) புறக்கட்டளைகள் (External Commands) அனைத்தும் எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. டாஸின் மூன்று முக்கிய முறைமைக் கோப்புகள் (System Files) பற்றி விளக்கப்பட்டுள்ளது. பேட்ச் (BAT) கோப்புகள் உருவாக்கிச் செயல்படுத்தும் முறை அவற்றின் பயன்பாடு பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. நூலின் இறுதிப் பகுதியில் பயனர்களுக்கு அடிக்கடி ஏற்படும் ஐயங்கள் கேள்வி-பதில் வடிவில் தரப்பட்டுள்ளன.

நூல் வெளியீடு:
கலைஞன் பதிப்பகம்,
எண்-19, கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை – 600 017.
தொலைபேசி: +91-44-24345641
பக்கங்கள் – 180. விலை ரூ.50/-

மேற்கண்ட முகவரியில் இந்நூலைப் பெறலாம்.                       [உச்சிக்கு]

 IQ தேர்வுகள் எழுதுவது எப்படி?

வங்கி, இரயில்வே போன்ற துறைகளில் பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் அளவுமுறைப் பகுப்பாய்வு (Quantitative Analysis), பண்புமுறைப் பகுப்பாய்வு (Qualitative Analysis) நோக்கிலான நுண்ணறிவுச் சோதனை வினாக்கள் இடம்பெறுவதுண்டு. அவை தொடர்வரிசை எண் கண்டறிதல், ஜோடி அறிதல், தனித்திருப்பதைத் தள்ளுதல், பொருத்தமான படத் தேர்வு போன்று பல வகைப்பட்டவை. இத்தகைய போட்டித் தேர்வுகளுக்கென ஆங்கிலத்தில் ஏராளமான வழிகாட்டி நூல்கள் உள்ளன. அதுபோன்ற நூல்கள் தமிழில் இல்லை. இக்குறையைப் போக்கும் வகையில் 1993-94 இல் தினமலர் வேலைவாய்ப்புக் கல்வி மலரில் 'IQ தேர்வுகள் எழுதுவது எப்படி?’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதினேன். அக்கட்டுரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த நூல். எடுத்துக் காட்டுப் பரிசோதனை வினாக்களும் அவற்றுக்கு விடை காண்பதற்கான வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அத்தியாயத்திலும் மாதிரி வினாத்தாள் தரப்பட்டுள்ளது. அவற்றுக்கான விடைகள் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன.

நூல் வெளியீடு:
கலைஞன் பதிப்பகம்,
எண்-19, கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை – 600 017.
தொலைபேசி: +91-44-24345641
பக்கங்கள் – 80. விலை ரூ.40/-

மேற்கண்ட முகவரியில் இந்நூலைப் பெறலாம்.                       [உச்சிக்கு]

 +1 கணிப்பொறியியல் பாடப் புத்தகம் (தொகுதி-2)

பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக் கணிப்பொறியியல் பாடத்திட்டத்தை வரையறுக்க 2004-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அந்நாளைய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. பாலகுருசாமி தலைமையில் 15 பேர் கொண்ட ஒரு பாடத்திட்டக் குழு (Sylabus Committee) அமைக்கப்பட்டது. அக்குழுவில் நான் உறுப்பினராக இடம் பெற்றிருந்தேன். அக்குழுவில் என்னைத் தவிரப் பிறர் அனைவரும் பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்கள், கணிப்பொறித் துறைத் தலைவர்கள், முனைவர்கள். நான் மட்டுமே கல்வித்துறை சாராத வெளியாள். 2005-ஆம் ஆண்டுக்கான பதினோராம் வகுப்புப் பாடத்திட்டமும், 2006-ஆம் ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டமும் வரையறுக்கப்பட்டது. தமிழ்வழிக் கல்விக்கான பாடப் புத்தகத்தின் இரண்டாம் தொகுதியை எழுதும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நூலில் விண்டோஸ் எக்ஸ்பீ, லின்க்ஸ் இயக்க முறைமைகள், சி-மொழி மற்றும் வலைப்பக்க வடிவாக்கம் தொடர்பான பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் 2005-ஆம் ஆண்டு முதல், மாநிலக் கல்விமுறையில் தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.

நூல் வெளியீடு:
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
டிபீஐ வளாகம், கல்லூரிச் சாலை
நுங்கம்பாக்கம், சென்னை – 600 006.
பக்கங்கள் – 336. விலை ரூ.30/-

மேற்கண்ட முகவரியில் இந்நூலைப் பெறலாம்.                       [உச்சிக்கு]

 +2 கணிப்பொறியியல் பாடப் புத்தகம் (தொகுதி-2)

இந்த நூல் 2006-ஆம் ஆண்டு முதல், மாநிலக் கல்விமுறையில் தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் லினக்ஸ் இயக்க முறைமை, சி++ மொழி, ஹெச்டிஎம்எல் மொழி மற்றும் இணையம் தொடர்பான பாடங்கள் இடம் பெற்றுள்ளன.

நூல் வெளியீடு:
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
டிபீஐ வளாகம், கல்லூரிச் சாலை
நுங்கம்பாக்கம், சென்னை – 600 006.

மேற்கண்ட முகவரியில் இந்நூலைப் பெறலாம்.                       [உச்சிக்கு]

 ரெட்ஹேட் லினக்ஸ், ஓப்பன் ஆஃபீஸ் கையேடு

மும்பையிலுள்ள ரெட்ஹேட் இந்தியா நிறுவனத்துக்காக எழுதப்பட்ட நூல். அந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஒரு திட்டப்பணியை நிறைவேற்ற இருந்தது. ரெட்ஹேட் லினக்ஸ் மற்றும் ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருள்களின் தமிழ்ப் பதிப்பை தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் அது. மேற்கண்ட மென்பொருள்களைக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கான கையேடாக இந்த நூல் தமிழில் எழுதப்பட்டது. ஒவ்வொரு பாடத்திலும் திரைகாட்சிப் படங்களுடன் (Screen Shots) விளக்கங்களும் செய்முறைப் பயிற்சிகளும் இடம் பெற்றிருந்தன. என்ன காரணத்தாலோ இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த நூல் அச்சிடப்படவும் இல்லை. இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது.                       [உச்சிக்கு]

 தகவல் தொழில்நுட்பம் - ஓர் அறிமுகம்

வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களும், ஆர்வமுள்ள பிற வெளிநாட்டினரும் தமிழ்மொழியைக் கற்பதற்கு வசதியாகத் தமிழ்நாடு அரசு தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை (Tamil Virtual University) நிறுவியது. அது, தற்போது, தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டினர் மிகக் குறைந்த அளவு கட்டணம் செலுத்தி, இணையம் வழியாகவே தமிழ்மொழியைக் கற்றுக் கொள்ள முடியும். மழலை, சான்றிதழ், பட்டயம், மேற்பட்டயம், பட்டம் ஆகிய நிலைகளில் பாடங்கள் வழங்கப்படுகின்றன. பட்டப் படிப்பாக பி,ஏ. (தமிழியல்) கற்றுத் தரப்படுகிறது. பட்டப் படிப்புக்கு ஒரு தாளாகத் ‘தகவல் தொழில்நுட்பம் - ஓர் அறிமுகம்’ என்னும் பாடத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது. அப்பாடத்திட்டப்படி எழுதப்பட்ட இந்த நூலின் சில பாடங்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வலையகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.     [உச்சிக்கு]

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
 (ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்)

1888-ஆம் ஆண்டு ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ் ‘லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்’ (Ludwig Feuerbach and The End of Classical German Philosophy) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். ஹெகல், ஃபாயர்பாக் ஆகியோரின் கோட்பாடுகள் பற்றிய விமர்சனம், பொருள்முதல்வாதக் கோட்பாடு பற்றிய விளக்கம், மார்க்சியத்தின் அடிப்படை குறித்த விளக்கம் ஆகியவை இந்நூலில் அடங்கியுள்ளன. ஃபாயர்பாக் பற்றி மார்க்ஸ் எழுதிய ஆய்வுரை இந்நூலில் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளது. மார்க்சியத் தத்துவம் என அறியப்படும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படைகளைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துரைக்கும் நூல். மார்க்சியத் தத்துவம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டோர் முதலில் படிக்க வேண்டிய நூல்.                  [உச்சிக்கு]

கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
 (ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்)

1847-ஆம் ஆண்டு ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ் ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ (Principles of Communism) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூல் 1848-இல் மார்க்சும் ஏங்கெல்சும் சேர்ந்து தயாரித்த கம்யூனிஸ்டு அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது. கேள்வி-பதில் வடிவில் கம்யூனிசத்தின் கோட்பாடுகளை விளக்கும் நூல்.                  [உச்சிக்கு]

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
 (மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்)

ஜெர்மனியில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்டு கழகத்துக்காக அதன் கொள்கைகளையும் லட்சியங்களையும் வகுத்துரைக்கும் பொருட்டு, 1848-இல் கார்ல் மார்க்ஸ், ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ் இருவரும் கம்யூனிஸ்டு அறிக்கையை (Communist Manifesto) தயாரித்துக் கொடுத்தனர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் காலத்திலேயே இந்த நூல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. தாமஸ் மூர் மொழிபெயர்த்த ஆங்கிலப் பதிப்பு ஏங்கெல்ஸின் மேற்பார்வையில் ‘Manifesto of the Communist Manifesto' என்ற பெயரில் 1888-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கடந்த 160 ஆண்டுகளில் ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியல் நூல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.     [உச்சிக்கு]

கூலியுழைப்பும் மூலதனமும்
 (மார்க்ஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்)

மார்க்சின் இச்சிறு நூல் முதலில் 1849 ஏப்ரல் 4 தொடங்கிப் புதிய ரைனிஷ் செய்தித்தாளில் தலையங்கக் கட்டுரைத் தொடர் வடிவில் வெளிவந்ததாகும். 1847-இல் பிரஸ்ஸல்சில் ஜெர்மன் தொழிலாளர் கழகத்தில் மார்க்ஸ் நிகழ்த்திய விரிவுரைகளிலிருந்து இக்கட்டுரைத் தொடர் தயாரிக்கப்பட்டது. ”கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற பெயரில் நூல் வடிவில் தனி வெளியீடாகப் பல பதிப்புகளில் வெளிவந்துள்ளது. 1891-இல் ஏங்கெல்ஸ் சில திருத்தங்கள் செய்து தன்னுடைய முன்னுரையுடன் வெளியிட்ட பதிப்பே, இன்றைக்கு உலகெங்கும் புழக்கத்தில் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பும் அதனை அடிப்படையாகக் கொண்டதே.

இந்த நூலில் மார்க்ஸ், கூலி என்பது என்ன, அது எவ்வாறு எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? ஒரு பண்டத்தின் விலை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? ஆகிய கேள்விகளுக்கு விடையளிக்கிறார். மூலதனத்தின் இயல்பு, அதன் வளர்ச்சி, கூலியுழைப்புக்கும் மூலதனத்துக்குமுள்ள உறவு, கூலி, இலாபம் இவற்றின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும் பொது விதி, உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி கூலியின் மீது ஏற்படுத்தும் விளைவுகள், முதலாளித்துவ வர்க்கம், நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம் இவற்றின் மீது முதலாளித்துவப் போட்டியின் விளைவு - ஆகியவற்றை மார்க்ஸ் எளிமையாக விளக்கிச் சொல்கிறார். இந்நூலை மூலதனம் நூலுடைய முதல் பாகத்தின் சாரம் எனச் சொல்லலாம்.                  [உச்சிக்கு]

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்
 (ஏங்கெல்ஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்)

1875-ஆம் ஆண்டுவாக்கில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த டாக்டர் இ.டூரிங், ஜெர்மன் மக்களுக்கு ஒரு விரிவான சோஷலிசக் கோட்பாட்டை மட்டுமின்றி, சமுதாயத்தின் மறுசீரமைப்புக்கு ஒரு முழுமையான செயல்முறைத் திட்டத்தையும் முன்வைத்தார். அவரின் முன்னோடிகளோடு முரண்பட்டார். அனைவரையும்விட மார்க்சின்மீது தம் கடுங்கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்து, மார்க்சுக்குப் பெருமை சேர்த்தார். அவருடைய கருத்துகளை மறுதலித்து, திரு. ஒய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் செய்த புரட்சி என்னும் நூலை எழுதினார். பின்னாளில் இந்நூல் டூரிங்குக்கு மறுப்பு என்னும் பெயரில் பல பதிப்புகள் வெளிவந்தது.

இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. கடைசி மூன்று அத்தியாயங்களைக் கொண்ட மூன்றாவது பகுதியை, நண்பர் திரு. பால் லஃபார்க்கின் வேண்டுகோளுக்கு இணங்க, ஏங்கெல்ஸ் ஒரு தனி நூலாக ஒழுங்கமைத்தார். அதனை பால் லஃபார்க் கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (Socialisme utopique et Socialisme scientifique) என்ற பெயரில் 1880-இல் ஃபிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1883-இல் மூல ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. 1892-இல் இதன் ஆங்கிலப் பதிப்பு எட்வர்டு எவிலிங் மொழிபெயர்ப்பில் ஏங்கெல்ஸின் முன்னுரையோடு இலண்டனில் வெளியிடப்பட்டது. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தமிழாக்கம் அமைந்துள்ளது.

இந்த நூலில் திரு.சான்-சிமோன், திரு.ஃபூரியே, திரு. இராபர்ட் ஓவன் ஆகியோரின் கற்பனாவாத சோஷலிசக் கோட்பாடுகளையும், மார்க்சின் விஞ்ஞான சோஷலிசக் கோட்பாடுகளையும் எங்கெல்ஸ் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறார். அதுமட்டுமின்றி, இந்நுலின் இரண்டாவது பகுதி, இயக்கவியல் தத்துவத்தின் அடிப்படைகளையும், வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் அடிப்படைகளையும் சுருக்கமாக விளக்கிக் கூறுகிறது.                  [உச்சிக்கு]

தமிழாக்கம் செய்யப்பட்ட மேற்கண்ட ஐந்து மார்க்சிய நூல்களும் கீழ்க்காணும் அமைப்புகளின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன:

(1) மார்க்சியச் சிந்தனை மையம்
(2) மார்க்சிஸ்ட் இணைய ஆவணக் காப்பகம்
(3) ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக் கழகம்
(4) வெர்ஜீனிய தொழில்நுட்பக் கழகம்
(5) கேட்புல் இணையச் சேவை

கூடிய விரைவில் இந்த நூல்கள் அச்சிலும் வெளியிடப்படும்.                  [உச்சிக்கு]

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்