மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்

வருங்காலத் தகவல் தொடர்பு எப்படி இருக்கும்?

[மனோரமா 2006 தமிழ் இயர்புக்கில் வெளிவந்த ‘தகவல் தொடர்பின் புதிய பரிமாணங்கள்’ என்ற என் கட்டுரையின் மூன்றாம் பகுதி]

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பேருந்து அப்போது எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறது. அதே வடிவமைப்பு அதே தொழில்நுட்பம், ஓட்டுநரும் நடத்துநரும் கூட மாறவில்லை. பயணிகளின் நெரிசல் மட்டும் அதிகமாகி இருக்கிறது. ஆனால் இதே முப்பது ஆண்டுகளில் தொலைபேசியின் வளர்ச்சியைப் பாருங்கள். கணிப்பொறியின் வளர்ச்சியைப் பாருங்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் ஏன் உலகிலேயே எந்த அலுவலகத்திலும் மேசை மீது கணிப்பொறியைப் பார்த்திருக்க முடியாது. இன்றைக்குக் கையோடு எடுத்துச் செல்லும் கணிப்பொறிகளே வந்துவிட்டன.

செல்பேசி, இணையம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி (SMS) என்பதெல்லாம் புதிய கண்டுபிடிப்புகள். ஆக, உலகிலேயே வேறெந்த தொழில்நுட்பங்களையும்விட தகவல் தொடர்புத் தொழில்நுட்பமும், கணிப்பொறித் தொழில் நுட்பமும் வெகுவேகமாய் வளர்ச்சிபெற்று வருகின்றன. கண்மூடித் திறப்பதற்குள் இவை புதிய பரிமாணங்களை எட்டிவிடுகின்றன. ஒன்றையொன்று முந்தி இரண்டும் ஒருபுள்ளியில் சங்கமிக்கப் போகின்றன. அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன. வரப்போகும் ஐந்து ஆண்டுகளில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களின் போக்கு எப்படி இருக்கும்?

1. வாய்ப் (VoIP) தொலைபேசி

இன்டர்நெட்டில் தகவலை டிஜிட்டல் டேட்டாவாக அனுப்பி வைக்கிறோம். 'இன்டர்நெட்' என்பது ஏராளமான கணிப்பொறி நெட்ஒர்க்குகள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு மாபெரும் நெட்ஒர்க் ஆகும். நெட்ஒர்க்கில் தகவல் பரிமாற்றத்தை நெறிமுறைகள் (Protocols) என்னும் நிரல்கள் ஒழுங்குபடுத்துகின்றன. இன்டர்நெட் தகவல் பரிமாற்றத்தின் உயிர்நாடியாக விளங்குவது ஐபீ (IP-Internet Protocol) எனப்படும் நெறிமுறையாகும். இது எந்தத் தகவலையும் சிறுசிறு பாக்கெட்டுகளாகப் பிரித்து ரூட்டர்கள் வழியே சிறந்த பாதையைத் தேர்ந்தெடுத்து மறுமுனைக்கு அனுப்பி வைக்கிறது. தகவலின் ஒவ்வொரு பாக்கெட்டும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டிய தேவையில்லை. அப்போதைக்கப்போது நெரிசல் இல்லாத சிறந்த பாதை எதுவெனக் கண்டறிந்து ரூட்டர்கள் ஐபீயின் உதவியுடன் பாக்கெட்டுகளை மறுமுனைக்கு அனுப்பி வைக்கின்றன. மறுமுனையில் அனைத்துப் பாக்கெட்டுகளும் வரிசை மாறாமல் ஒன்று சேர்க்கப்பட்டு மூலத் தகவல் சிதைவின்றிப் பெறப்படுகிறது. ஆனால் தொலைபேசி உரையாடலில் முதலில் இருமுனைக்கும் இடையே நிலைத்த இணைப்பு ஏற்படுத்தப்பட்டு அந்த இணைப்பின் வழியே குரல் அனுப்பிவைக்கப்படுகிறது.

தொலைபேசி உரையாடலையும் சிறுசிறு பாக்கெட்டுகளாகப் பிரித்து இன்டர்நெட் வழியே ஐபீ (IP) நெறிமுறையின் உதவியுடன் ரூட்டர்கள் வழியே அனுப்பிவைத்தால் என்ன என்ற கேள்விக்கான பதிலே வாய்ப் (VoIP – Voice Over IP) தொழில்நுட்பம் ஆகும். ஏற்கெனவே இத்தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. உங்கள் வீட்டிலுள்ள கணிப்பொறியை இன்டர்நெட்டில் இணைத்துக் கொண்டு, அமெரிக்காவில் உள்ள உங்கள் நண்பரின் தொலைபேசி எண்ணை (செல்பேசியாக இருந்தாலும்) கணிப்பொறி வழியாகவே டயல்செய்து பேசலாம். கணிப்பொறியில் இணைக்கப்பட்ட ஒலிவாங்கியும் (Mike), ஒலிபெருக்கியும் (Speaker) இதற்கு உதவும். தொலைபேசி உரையாடல் இன்டர்நெட் வழியாகவே பயணம் செய்கிறது. மறுமுனையில் இறுதி நிலையிலேயே, தொலைபேசி நெட்ஒர்க் வழியாகப் பயணிக்கிறது. இத்தகைய வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளுக்குக் கட்டணம் மிகவும் குறைவு.

இதன் அடுத்தகட்ட வளர்ச்சியே 'வாய்ப்' தொலைபேசிகள். வீட்டில் இப்போதுள்ள தொலைபேசி போலவே இருக்கலாம். மறுமுனையில் உள்ள உங்கள் நண்பரும் 'வாய்ப்' தொலைபேசி வைத்திருப்பதாகக் கொள்வோம். இருவரும் இப்போதைய தொலைபேசி நிலையங்களின் துணையின்றியே முற்றிலும் முற்றிலும் இன்டர்நெட் வழியாகவே உரையாடலாம். மிகப்பெரும் செலவில் உள்ளூர்த் தொலைபேசி நிலையங்களையும், அதைவிட அதிகச் செலவில் தொலைதகவல் தானியங்கு தொடர்பகங்களையும் (Trunk Automatic Exchanges) நிறுவுகின்ற செலவு மிச்சமாகும். தொலைபேசி நெட்ஒர்க் வழியே கணிப்பொறி, மோடம் மூலமாக இன்டர்நெட்டை அணுகும் நிலைமை தலைகீழாக மாறி, இன்டர்நெட் வழியாகத் தொலைபேசித் தகவல் தொடர்பு என்கிற நிலைமை வரப்போகிறது.

2. வைஃபி செல்பேசி (WI-FI Cellphone)

வாய்ப் தொலைபேசியே வயர்லெஸ் தொலைபேசியாக இருந்தால்? அதுதான் வைஃபி செல்பேசி. ஏற்கெனவே நாம் பயன்படுத்தும் கார்டுலெஸ் தொலைபேசி, 'வாய்ப்' தொலைபேசியாக மாறி, வைஃபி செல்பேசியாக பரிணமிக்கும். சாதாரணமான செல்பேசியில் உரையாடல் எப்படி நடைபெறுகிறது? அருகிலுள்ள செல்பேசிக் கோபுரத்திலுள்ள டிரான்ஸ் ரிசீவர் (தளநிலையம்) வழியாக செல்பேசித் தொடர்பாக்க மையம் வழியே அழைக்கப்பட்டவர் இருக்கும் பகுதியிலுள்ள கோபுரத்துக்கு (தள நிலையத்துக்கு) அனுப்பப்பட்டு அவரது செல்பேசியை அடைகிறது. அவர் அதே கூட்டத்தில் வேறு அறையில் இருந்தால்கூட இப்படித்தான் அழைப்பு திசைவிக்கப்படும். இதுவே, வைஃபி செல்பேசியின் அழைப்பு எனில் அந்த அறையிலுள்ள வைஃபி அணுகு முனை (Access Point) மூலமாக அதே கட்டடத்தில் உள்ள ரூட்டரின் உதவியுடன் அழைக்கப்பட்டவர் இருக்கும் அறையிலுள்ள அணுகு முனைக்கு அனுப்பப்பட்டு உரையாடல் நடைபெறத் தொடங்கும். அழைக்கப்பட்டவர் நகரின் வேறுபகுதியில் இருப்பின், வழக்கம்போலச் செல்பேசிக் கோபுரங்கள், மைய நிலையம் வழியாக அழைப்பு சென்று சேரும்.

வைஃபி செல்பேசியில், செல்பேசிக்கான தொழில்நுட்பமும், வைஃபி மற்றும் 'வாய்ப்' தொழில்நுட்பத்துக்கான வன்பொருளும், மென்பொருளும் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கும். இது வைஃபி நெட்ஒர்க்கில் செயல்படும் வாஃய்ப் தொலைபேசியாகும். வைஃபி நெட்ஒர்க்கின் பரப்புக்குள் இல்லாதபோது சாதாரண செல்பேசி நிலையங்கள் வழியாகவும் இல்லாமல், செல்பேசி நெட்ஒர்க்கின் வழியாகவும் இல்லாமல் வைஃபி நெட்ஒர்க் வழியே திசைவிக்கப்படுவதால் செலவு மிக மிகச் சிக்கனமாகும். வைஃபி செல்பேசிக்கு இரு எண்கள் இருக்கும். ஒன்று 'வாய்ப்' எண். மற்றது செல்பேசி எண். அனைத்து 'வாய்ப்' எண்களும் 'வாய்ப்' நுழைவியில் (gateway) சேமிக்கப்பட்டிருக்கும். அழைப்பு, 'வாய்ப்' எண்ணுக்கு எனில், அதுவே கொண்டு சேர்க்கும். வைஃபி செல்பேசியைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனம் வைஃபி நெட்ஒர்க்கைக் கொண்டிருக்க வேண்டும். அதனுடைய கிளைகள் அனைத்தும் இன்டர்நெட்டின் வழியே இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

செல்பேசி மற்றும் வயர்லெஸ் அகல்கற்றை (வைஃபி) தொழில்நுட்பங்களின் சங்கமமே வைஃபி செல்பேசி. பரவலான பயன்பாட்டுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் வந்துவிடும் என நம்பலாம்.

3. நிகழ்படத் தொலைபேசி (Video Phone)

செல்பேசியில் பேசுவதோடு மட்டுமின்றி, படங்களையும் பரிமாறிக் கொள்ள முடிகிறது. வயர் இணைப்புத் தொலைபேசிகளில் அத்தகைய வசதிகள் பரவலாக இன்னும் பயன்பாட்டில் இல்லை. ஆனால், சாதாரணத் தொலைபேசியின் அதே பழைய செப்புக் கம்பிகளூடே டிஎஸ்எல், ஏடிஎஸ்எல் போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் அதிவேக அகல்கற்றைச் சேவையை வழங்க முடிகிறது. ஏடிஎஸ்எல் 2+ தொழில்நுட்பத்தில் வீடியோ மல்ட்டி காஸ்டிங், வீடியோ ஆன் டிமாண்டு, கேபிள் டீவி. ஆடியோ/வீடியோ கலந்துரையாடல் இவற்றுடன் 'வாய்ப்' தொலைபேசியும் சாத்தியம். கணிப்பொறி முன்னே அமர்ந்து 'வாய்ப்' மூலம் உரையாடும் போதும் ஒருவரையொருவர் கணிப்பொறித் திரையில் பார்த்துக் கொள்ள முடிகிறது.

கணிப்பொறியின்மேலே ஒரு வெப் கேமராவைப் பொருத்திக் கொண்டால் போதும். இத்தகைய தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பில், தொலைபேசி என்றாலே, அது செல்பேசி ஆயினும், வயரிணைப்புத் தொலைபேசி ஆயினும் பேசிக் கொள்வோர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே பேசிக் கொள்ளமுடியும். தொலைதூரத்திலிருந்து பேசுவோரின் முகபாவங்களைக் கவனித்துக் கொண்டே உரையாடலாம். அதன் காரணமாய் மனித உறவுகள் யாவும் மேம்பட்ட நிலையை அடையும்.

4. மொபைல் டீவி (Mobile TV)

ரயில்நிலையத்தில் உங்கள் நண்பரை வரவேற்கக் காத்திருக்கிறீர்கள். ரயில் நிலையத் தொலைக்காட்சியில் அறிவிப்புகளும் விளம்பரப் படங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன. ரயில் வரத் தாமதமாகிறது. சலிப்படைகிறீர்கள். உங்கள் செல்பேசியை எடுக்கிறீர்கள். மூன்று பொத்தான்களை அழுத்துகிறீர்கள். நீங்கள் விரும்பும் தொலைக்காட்சி அலைவரிசை உங்கள் செல்பேசியின் சின்னத்திரையில் விரிகிறது. உங்கள் நண்பர் வரும்வரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்குகிறீர்கள்.

இது கற்பனையல்ல. நடக்கப்போகும் நிகழ்ச்சிதான். இப்போதே [இந்தியா உட்பட] பல நாடுகளில் செல்பேசிகளில் 3G தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதன்மூலம் நிகழ்நேர வீடியோக் காட்சிகளைச் செல்பேசியில் காணமுடியும். இதற்காக, 3G மொபைல் சேவையாளர் ஒவ்வொரு செல்பேசிக்கும் தனியாக வீடியோ ஸ்ட்ரீம்களை அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான செலவும் நேரமும் மிகவும் அதிகம்.

மொபைல் சேவையாளர்கள் வீடியோ ஸ்ட்ரீம்களை குறைந்த செலவில் மிக எளிதாக செல்பேசிகளுக்கு அனுப்ப, ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்ட்-ஹாண்ட்ஹெல்டு (DVB-H) என்பது இதன் பெயர். தொலைக்காட்சி நிலையம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அலைபரப்புவது போன்றே செல்பேசிகளுக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அலைபரப்ப டிவிபி-ஹெச் தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஃபின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனம் அண்மையில் ஹெல்சின்க்கியில் நடைபெற்ற உலகத் தடகளப்போட்டியில் இதனைச் செயல்படுத்திக் காட்டியது. ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இதற்கான தளப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

2010 ஆண்டில் உலகெங்கும் 300 கோடிப்பேர் செல்பேசியைப் பயன்படுத்துவார்கள். என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்குள்ளாக, 'மொபைல் டீவி' தொழில்நுட்பம் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அப்படி வருமெனில் செல்பேசிப் பயனர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம். வருங்காலத்தில் மக்கள் வேறெந்த சாதனங்களை விடவும் மொபைல் சாதனங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவர். அவற்றை தகவல் தொடர்புக்காக மட்டும் பயன்படுத்த மாட்டார்கள். தொலைக்காட்சி போன்ற பொழுது போக்குச் சாதனமாகவும் பயன்படுத்தத் தொடங்குவர்.

5. விமானத்தில் செல்பேசி, இன்டர்நெட்

இப்போதெல்லாம் பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், செல்பேசிகளை அணைத்துவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விமானம் எழும்பும்போதும், பறக்கும்போதும், இறங்கும்போதும் பயணிகள் செல்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது. செல்பேசிக்கான வயர்லெஸ் சிக்னல்கள் விமானக் கட்டுப்பாட்டு அறை சிக்னல்களில் ஊடுருவிச் சிக்கல் ஏற்படுத்தலாம் என்கிற அச்சத்திலேயே இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஆனால் இனி அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட உள்ளது. விமானத்தில் பயணம் செய்பவர்கள் தாராளமாகச் செல்பேசிகளைப் பயன்படுத்தலாம்.

வானத்தின் உச்சியில் பறந்து கொண்டிருக்கும்போது அதற்கும் மேலாக பறந்து கொண்டிருக்கும் செயற்கைக் கோளின் வழியாக வீட்டாருடன் பேசலாம். விமானத்தின் கூரையில் நானோ-ஜிஎஸ்எம்/ஜிபீஆர்எஸ் தள நிலையம் பொருத்தப்படும். இதிலிருந்து பரப்பப்படும் வயர்லெஸ் சிக்னல் விமானம் முழுக்கவும் பரவியிருக்கும். உலகிலேயே இதுதான் மிகச்சிறிய செல்லுலர் டிரான்ஸ்மிட்டராக இருக்கும். இந்த டிரான்ஸ்மிட்டர் செயற்கைக்கோள் வழியிலான இன்டர்நெட் இணைப்பில் தரை நிலையத்துக்குச் சிக்னல்களை அனுப்பி வைக்கும். உலகிலேயே முதன்முதலாக 'ஏர்பஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் இந்த வசதியைப் பெற இருக்கின்றன. போயிங் விமானத்திலும் இத்தகைய வசதியைத் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அடுத்து வரப்போகும் தொழில்நுட்பம் விமானப் பயணிகளுக்கு அகல்கற்றை இன்டர்நெட் இணைப்பாகும். இதற்கான திட்டத்தை 'கனெக்ஷன்' ஏற்கெனவே அறிவித்துள்ளது. விமானப் பயணிகள் தமது மடிக் கணிப்பொறிகளை தங்களது இருக்கையிலுள்ள ஈதர்நெட் போர்ட்டில் இணைத்துக் கொள்வார்கள். அல்லது 802.11b தொழில்நுட்ப அடிப்படையில் வயர்லெஸ் இணைப்பைப் பெறுவர், விமானத்தில் இன்டர்நெட் இணைப்பு என்பது பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் என அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் நீதிமன்றம் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தீவிரவாதிகள் சேய்மையிலிருந்து இன்டர்நெட் இணைப்பு வழியே விமானத்திலுள்ள குண்டை வெடிக்கச் செய்யலாம். இதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

6. வைஃபி நகரங்கள் (Wi Fi Cities)

ஹாட்ஸ்பாட் எனப்படும் வைஃபி மண்டலங்களில் வந்து போகும் பயனர்கள் தத்தமது மடிக்கணிப்பொறி, கையகக் கணிப்பொறிகளிலிருந்து வயர்லெஸ் முனையில் அகல்கற்றை இன்டர்நெட் இணைப்பைப் பெற்றுப் பயனடைய முடியும் என அறிவோம். விமான நிலையம், ரயில் நிலையம், ஓட்டல், பெரிய நிறுவன வளாகம், பல்கலைக்கழக வளாகம், மருத்துவமனை, பூங்கா போன்ற பொதுமக்கள் கூடுகின்ற-குறிப்பாகப் பொதுமக்கள் வந்து காத்திருக்க வேண்டிய இடங்களில் வைஃபி மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் பல்வேறு நகரங்களில் வைஃபி வளாகங்கள் உள்ளன. சென்னை உள்நாட்டு வெளிநாட்டு விமான நிலையங்களில் இவ்வசதி உள்ளது. பிற விமான நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் இச்சேவை வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு ஒரு நகரத்தில் மிகச்சில இடங்கள் மட்டும் வைஃபி மண்டலங்களாக இல்லாமல், முழு நகரமும் வைஃபி நகரமாக இருந்தால் எப்படி இருக்கும்? நகர் முழுவதும் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான அக்செஸ் பாயின்டுகளை (வயர்லெஸ் டிரான்ஸ்ரிசீவர்கள்) நிறுவி, நகரின் எந்த இடத்திலிருந்தும் வயரிணைப்பின்றி இன்டர்நெட்டை அணுகும் வசதி ஏற்படுத்தித் தரப்படுமாயின் அந்நகரம் வைஃபி நகரம் (WiFi City) என்றழைக்கப்படும். உலகம் முழுவதிலும் வைஃபி நகரங்கள் உருவாகி வருகின்றன.

அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் மாநிலத்தில் கிராண்டு ஹேவன் நகரம்தான் உலகிலேயே முதல் வைஃபி நகரம் என்ற பெருமையைப் பெறுகிறது. வேறு நாடுகளிலுள்ள நகரங்களும் முதல் வைஃபி நகரம் எனக் கூறிக் கொள்கின்றன. அமெரிக்காவில் நியூயார்க், சிகாகோ, சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள சான்ஜோஸ், டெக்சாஸிலுள்ள ஆஸ்டின், வாஷிங்டனில் உள்ள சியாட்டில் மற்றும் லஸ்டன், டோக்கியோ, பாரிஸ், ‎ஹாங்காங்., பெர்லின், ஆகிய நகரங்களும் வைஃபி நகரங்களே. ஜெரூசலேம், ஆம்ஸ்டர்டாம், ஜமோரா ஆகிய நகரங்களும் வைஃபி நகரங்களாகி விட்டன. இந்தியாவில் புனே, முதல் வைஃபி நகரமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அடுத்து, அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் வைஃபி மாநிலங்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. வருங்காலத்தில் வைஃபி நாடுகள் உருவானாலும் வியப்பில்லை. இப்போதே சிங்கப்பூரை அப்படித்தான் கூறுகின்றனர்.

7. வீட்டு நெட்ஒர்க் (Home Network)

வருங்காலத்தில் உங்கள் வீட்டில் எப்படிப்பட்ட வசதி இருக்கும் என்பது பற்றிய ஒரு கற்பனை. உங்கள் வீட்டில் கம்யூனிக்கேட்டர் (Communicator) என்கிற ஒரு சாதனம் இருக்கும். (இது ஒரு கற்பனைப் பெயர்தான்!). வீட்டிலுள்ள கணிப்பொறி, தொலைக்காட்சி, தொலைபேசி, செல்பேசி, ஆடியோ சிஸ்டம், வாஷிங் மெஷின், ஏசி, கூலர், ஹீட்டர், ஃபிரிட்ஜ், எலெக்ட்ரிக் குக்கர், மைக்ரோவேவ் ஓவன் ஆகிய அனைத்து மின்சார, மின்னணு சாதனங்களும் கம்யூனிக்கேட்டருடன் வயர்லெஸ் முறையில் இணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டமைப்பு, வீட்டு நெட்ஒர்க் என்றழைக்கப்படுகிறது.

கம்யூனிக்கேட்டர் சாதனம் வயரிணைப்பின்றியே அருகிலுள்ள வைஃபி அக்செஸ் பாயிண்டுடன் தொடர்பு கொண்டிருக்கும். அதாவது, உங்கள் வீட்டு நெட்ஒர்க் இன்டர்நெட்டின் ஓர் அங்கமாக இருக்கும். இந்த அமைப்பினால் என்ன பயன்களையெல்லாம் பெறலாம்?

• உங்கள் வீட்டின் எந்த மூலையில் இருந்துகொண்டும் ஏசி, கூலர், ஹீட்டர், ஓவன், குக்கர் போன்ற சாதனங்களை இயக்கலாம், அணைக்கலாம். உங்கள் கையிலுள்ள செல்பேசியே இதற்கு உதவும்.

• ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் காய்கனி அல்லது குளிர்பானம் தீர்ந்து போய்விட்டால், ஃபிரிட்ஜில் உள்ள உணரி, சிறப்பங்காடிக்குத் தானாகவே தகவல் தெரிவித்து தீர்ந்துபோன பொருட்களை வரவழைக்கும்.

• உங்கள் செல்பேசி 'வாய்ப்' தொலைபேசியாகவும் இருக்கும். இன்டர்நெட் வழியாகத்தான் தொலைபேசி உரையாடல் பரிமாறிக் கொள்ளப்படும். உள்ளூர்த் தொலைபேசி அழைப்புகள் கூட 'ரூட்டர்கள்' வழியாகத்தான் திசைவிக்கப்படும். உங்கள் வீட்டுக் கம்யூனிக்கேட்டரும் ஒரு ரூட்டராகச் செயல்படும்.

• நீங்கள் வெளியே சென்றிருக்கும்போது உங்கள் வீட்டில் அத்துமீறி எவரும் நுழைந்து விட்டால், உங்கள் செல்பேசியில் எச்சரிக்கை மணி ஒலிக்கும். அதே வேளையில் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கும் தகவல் போகும்.

• அலுவலகக் கணிப்பொறியிருந்து இன்டர்நெட் வழியாக உங்கள் வீட்டுச் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும். அணைக்க மறந்த ஏசியை அணைத்துவிடலாம்.

• வீட்டுக் கணிப்பொறியிலிருந்து அலுவலகக் கணிப்பொறியையும், அலுவலகக் கணிப்பொறி யிலிருந்து வீட்டுக் கணிப்பொறியையும் அணுகித் தகவல் பெறலாம்/அனுப்பலாம்.

• கணிப்பொறியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்கலாம். தொலைபேசி உரையாடல் நிகழ்த்தலாம். தொலைக்காட்சியில் இன்டர்நெட் உலாச் செல்லலாம். செல்பேசியில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம்; மின்னஞ்சலும் பார்க்கலாம். ஒவ்வொரு மின்னணு சாதனமும் ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளாகப் பயன்படும்.

• பள்ளிக்குச் சென்ற உங்கள் குழந்தை சட்டையில் செருகியுள்ள அடையாள அட்டை சூட்டிகை அட்டையாக (ஸ்மார்ட் கார்டு) இருக்கும். உங்கள் குழந்தை இப்போது எங்கே இருக்கிறது என்பதை அவ்வப்போது அறிவித்துக் கொண்டே இருக்கும்.

• உங்கள் அடையாள அட்டைதான் கிரெடிட்கார்டு, டெபிட்கார்டு, ஏடீஎம்கார்டு, வங்கிக்கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, நூலக அட்டை, தொலைபேசி அட்டை எல்லாமே.

தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் நாள்தோறும் புதிய புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது. 'நாளை இப்படி நடக்கும்' என்று கணித்துக் கூறினால் நம்ப இயலாது. ஆனால் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை அப்படியே நடந்துவிடும் என்பதுதான் நடைமுறை உண்மை.

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்