மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்

செல்பேசிகளில் தரப்படுத்தப்பட்ட தமிழ் இடைமுகம்

[2010 ஜூன் மாதம் இந்தியா, தமிழ்நாடு, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரை. மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன. 900 பக்கங்களைக் கொண்ட அப்புத்தகம் PDF வடிவில் 28.6 MB அளவுள்ள கோப்பாக http://www.infitt.org/ti2010/TIC2010.pdf என்னும் முகவரியில் கிடைக்கிறது. அதில் எனது இந்தக் கட்டுரை பக்கங்கள் 817 முதல் 821 வரை வெளியாகியுள்ளது.]

வேளாண் புரட்சிக்கும், தொழில்புரட்சிக்கும் அடுத்துபடியாகத் தகவல் புரட்சியின் கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். வல்லுநர்கள் இப்போதைய கால கட்டத்தைத் ‘தகவல் யுகம்’ (Information Era) எனக் கணிக்கின்றனர். உலகமெங்கிலும் இன்றைய தகவல் தொடர்பின் வளர்ச்சி இக்கூற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளது. விரல்நுனியில் தகவல்கள்; விரல்சொடுக்கும் நேரத்தில் தகவல் பரிமாற்றம். பூமிக் கோளத்தில் நாடுகளின் எல்லைகள் மறைந்து போயின. கடல்களின் பரப்பு காணாமல் போனது. தொலைவு என்பது தொலைந்து போயிற்று. உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்டது.

செல்பேசியின் ஊடுருவல்

செல்பேசியின் வருகை தொலைத் தகவல் தொடர்பில் ஒரு புரட்சிக்கு வித்திட்டுள்ளது. இந்தியா உட்பட வளரும் நாடுகளில் செல்பேசியின் வளர்ச்சி புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது. செல்பேசிப் பயனர்களின் எண்ணிக்கையில் இந்தியா உலகிலேயே மூன்றாவது இடம் வகிக்கிறது. 2010 மார்ச் 1-இல் இருந்த நிலவரப்படி இந்தியாவில் மொத்தத் தொலைபேசிப் பயனர்களின் எண்ணிக்கை 60 கோடிக்கும் சற்றே அதிகம். இது மக்கள் தொகையில் 51.05% ஆகும். இவற்றுள் செல்பேசிப் பயனர்களின் எண்ணிக்கை 56 கோடியே 37 லட்சத்து 30 ஆயிரம். இது மக்கள் தொகையில் 47.91% ஆகும்[1]. செல்பேசிப் பயனர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடம் வகிப்பது குறிப்பிடத் தக்கது. (சீனாவில் 76 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரம்).

தமிழ்நாட்டில் 5 கோடியே 22 லட்சத்து 34 ஆயிரம் பயனர்கள் உள்ளனர்[2]. தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடிப்படையில் இது ஏறத்தாழ 70% ஆகும். அதாவது தமிழ்நாட்டில் நூற்றுக்கு 70 பேர் செல்பேசி பயன்படுத்துகின்றனர். மக்கள்தொகை அடிப்படையில் செல்பேசிப் பயனர்களின் சதவீதத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது. சின்னஞ்சிறு கிராமத்திலும் செல்பேசிக் கோபுரங்களைக் காண முடிகிறது. படிப்பறிவு இல்லாத மக்கள்கூடச் செல்பேசி பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் கேபிள் தொலைக்காட்சி இல்லாத ஊர்களே இல்லை எனலாம். அதற்கு அடுத்தபடியாகச் செல்பேசியைச் சொல்லலாம். தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களும் செல்பேசிப் பயனர்களாய் உள்ளனர் என்பதே எதார்த்த உண்மை. 200 ரூபாய்க்குச் செல்பேசி (பழையது) கிடைக்கிறது. வாழ்நாள் ‘சிம்’ அட்டை இலவசமாகக் கிடைக்கிறது. நூற்றுக்கு நூறுபேர் செல்பேசி பயன்படுத்தும் காலம் அதிக தொலைவில் இல்லை.

செல்பேசியில் தமிழில் பயனர் இடைமுகம்

தமிழ்நாட்டில் செல்பேசியின் வளர்ச்சி இவ்வளவு இருந்தும், செல்பேசியில் மக்கள் தமிழைப் பயன்படுத்துவது அரிதாகவே உள்ளது. குறுஞ்செய்தி போன்றவற்றில் தமிழ் பயன்படுத்தப்பட்ட போதிலும், புழக்கத்தில் உள்ள பெரும்பாலான செல்பேசிகளில் தமிழ் இடைமுகம் கிடையாது. நோக்கியா போன்ற நிறுவனங்கள் தமிழில் பயனர் இடைமுகத்தை வழங்கியுள்ள போதிலும் மக்கள் இன்னும் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. பயன்பாட்டில் உள்ள தமிழ் இடைமுகங்கள் ’பயனர் தோழமை’ (User Friendly) உடையதாய் இல்லை என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.

செல்பேசியில் தமிழ் இடைமுகத்துக்கான தேவை

மூன்று விழுக்காட்டுக்கும் குறைவான மக்களே கணிப்பொறி பயன்படுத்துகின்றனர். மேலும் ஓரளவு ஆங்கிலம் அறிந்தவர்களே கணிப்பொறியைப் பயன்படுத்துகின்றனர். எனவே கணிப்பொறியில் தமிழ் இடைமுகத்தின் (Tamil Interface) தேவை இன்னுங்கூட அதிகமாக உணரப்படவில்லை. கணிப்பொறியோடு ஒப்பிடுகையில் செல்பேசியில் தமிழ் இடைமுகத்தின் அவசிய, அவசரத் தேவை அதிகமாகவே உணரப்படுகிறது. அத்தேவைக்கான காரணங்கள் பல. அவற்றுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காரணங்கள் சிலவற்றைக் காண்போம்:

(1) கிராம மக்களிடையே செல்பேசி மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மட்டுமே தெரிந்த சாதாரண மக்களும் செல்பேசியை மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

(2) செல்பேசி குரல்வழித் தொடர்புக்கு மட்டுமின்றி, உரை வடிவிலான குறுஞ்செய்தித் தொடர்புகளுக்கும் மிக அதிகமாகப் பயன்படுகிறது.

(3) செல்பேசி தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமின்றி, சிறந்த பொழுது போக்குச் சாதனமாகவும் பயன்படுகிறது. ஒளிப்படங்கள் (Photos), இசைப் பாடல்கள் (Music), நிகழ்படத் துணுக்குகள் (Video Clips), பண்பலை வானொலி (FM Radio), படப்பிடிப்பி (Camera) மற்றும் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. மக்கள் எண்களை அழுத்தி, பிரியமானவர்களைத் தொடர்புகொண்டு பேசுவதோடு மட்டுமின்றி, பல்வேறு பட்டித் தேர்வுகளை (Menu Options) அழுத்தி மேற்கண்ட பயன்பாடுகளை இயக்கிப் பயன்பெறுகின்றனர்.

(4) வருங்காலத்தில் செல்பேசி என்பது தகவல் தொடர்புக்கு மட்டுமின்றி சாதாரண மக்களின் பல்வேறு வகையான தகவல் தேவைகளுக்கும் பயன்படப் போகிறது. குறைந்த படிப்பறிவு கொண்ட கிராமத்து விவசாயிகள் வானிலை அறிய, விதை, உரம், பூச்சி மருந்து விலை அறிய, தானியங்களின் கொள்முதல் விவரங்கள் அறியச் செல்பேசியைப் பயன்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.

(5) தற்போது செல்பேசியில் தமிழ் விசைத்தளத்தைத் (Tamil Keypad) தரப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அது நடைமுறைக்கு வரும்போது, செல்பேசியில் தமிழின் பயன்பாடு மேலும் பரவலாகும். அப்போது செல்பேசிக் கருவியில் தமிழ் இடைமுகத்தின் தேவை அதிகமாக உணரப்படும்.

தரப்படுத்தலுக்கான தேவை

பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிக் கருவிகளில் பல்வேறுபட்ட வசதிகள் இருக்கின்றன. ஆயிரம் ரூபாயிலிருந்து முப்பத்தையாயிரம் ரூபாய்வரை விலை கொண்ட செல்பேசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள செல்பேசிகளை மூன்று பெரும் பிரிவுகளில் அடக்கலாம். வெறுமனே தொலைபேசி அழைப்புக்கும், குறுஞ்செய்தி அனுப்பவும் பயன்படும் செல்பேசிகள். இவற்றின் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய்க்குள் அடக்கம். இரண்டாவது வகை ஒளிப்படம், இசை, பண்பலை வானொலி, படப்பிடிப்பி போன்ற வசதிகள் கொண்ட செல்பேசிகள். இவை மூவாயிரம் ரூபாயிலிருந்து ஐயாயிரம் ரூபாய்க்குள் கிடைக்கின்றன. 3ஜி, தொடுதிரை, வைஃபி, இணையம் போன்ற வசதிகள் கொண்ட உயர்நிலைச் செல்பேசிகள். இவை ஆறாயிரம் ரூபாயிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாய்வரை விலை கொண்டவை. 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் விலைகொண்ட ஐஃபோன் போன்ற செல்பேசிகளும் உள்ளன.

இவ்வாறு பல்வேறுபட்ட செல்பேசிக் கருவிகள் பயன்பாட்டில் இருந்த போதிலும், அவற்றில் இடம்பெறும் பயனர் இடைமுகங்களில் அதிக வேறுபாடுகள் கிடையாது. இடைமுகங்களின் அமைப்புமுறையில் சிற்சில வேறுபாடுகள் இருந்த போதிலும் அவற்றில் காணப்படும் ஆங்கிலச் சொற்கள் பெரும்பாலும் ஒன்றாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, Menu, Select, Options, Back, Exit, Cancel, On, Off, Yes, No, Switch off, Messages, Inbox, Outbox, Save, Send, Delete, Contacts, Search, Call, Missed Calls, Received Calls, Dialled numbers, Settings, Profile, General, Silent, Tones, Ringing tone, Ringing volume, Vibrating alert, Clock, Alarm போன்ற சொற்கள் அனைத்துவகைச் செல்பேசிகளிலும் அனைத்துவகை இடைமுகங்களிலும் காணப்படுகின்றன. எனவே தமிழ் இடைமுகங்களில் இவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் ஒன்றாகவே இருக்க வேண்டியது அவசியம். இடைமுகங்களில் தமிழ்க் கலைச்சொற்கள் வெவ்வேறு நிறுவனங்களின் கருவிகளில் வெவ்வேறு வகையாக அமையுமெனில் பயனாளர்களுக்குக் குழப்பமே மிஞ்சும்.

குறிப்பாகச் செல்பேசிக் கருவிகளில் தரப்படுத்தப்பட்ட கலைச்சொற்கள் பயன்படுத்த வேண்டிய தேவைக்கு இன்னொரு முக்கியமான காரணமும் உள்ளது. ஒரு செல்பேசிக் கருவியை அதிகப் பட்சமாக ஒருவர் மூன்று ஆண்டுகள் பயன்படுத்துகிறார். அவ்வாறு மூன்றாண்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகச் செல்பேசிக் கருவியை மாற்றிக் கொள்பவர்களே அதிகம். மூன்று மாதத்தில், ஆறு மாதத்தில் செல்பேசியை மாற்றிக் கொள்பவர்களும் பெருகிவிட்டனர். புதிய புதிய வசதிகளைக் கொண்ட செல்பேசிகள் நாள்தோறும் சந்தையில் அறிமுகமாவதும் அவற்றின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போவதும் இதற்குக் காரணமாகும். செல்பேசிகள் தொலைந்து போவதும், களவு போவதும் மற்றொரு காரணமாகும். ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட செல்பேசிகள் வைத்திருப்பதையும் காண முடிகிறது. வாடிக்கையாளர்கள் வேறெந்தப் பயன்பாட்டுக் கருவிகளைக் காட்டிலும் செல்பேசிக் கருவியை அடிக்கடி மாற்றிக் கொள்கின்றனர். எனவே செல்பேசியின் பயனர் இடைமுகங்களில் காணப்படும் கலைச்சொற்கள் ஒன்றுபோல அமைய வேண்டியது அவசியமாகிறது.

ஆங்கில இடைமுகங்களில் கலைச்சொற்கள் அவ்வாறு ஒன்றுபோலவே அமைந்துள்ளன. அதுபோலத் தமிழ் இடைமுகங்களிலும் கலைச்சொற்கள் ஒன்றுபோல அமைய வேண்டும். எனவே செல்பேசிக் கருவிகளுக்கான தமிழ்க் கலைச்சொற்கள் தரப்படுத்தப்பட்டு, பொதுவான தமிழ் இடைமுகம் செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டும். அனைத்துச் செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களும் தமிழ் இடைமுகங்களில் தரப்படுத்தப்பட்ட கலைச்சொற்களைப் பயன்படுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தரப்படுத்தலுக்கான திட்டப்பணி

செல்பேசிகளில் தமிழ் விசைத்தளத்தைத் (Tamil Keypad) தரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் போன்ற நிறுவனங்களும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த மாநாட்டில் இதற்கான பரிந்துரை முன்வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் செல்பேசிகளில் தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைத்தளம் அமையும் வாய்ப்பு உள்ளது. அதுபோலவே அமையவிருக்கும் தமிழ் இடைமுகங்களும் தரப்படுத்தப்பட்ட கலைச்சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். செல்பேசிகளில் தமிழ் விசைத்தளத்தைத் தரப்படுத்தும் திட்டப்பணியின் ஓர் அங்கமாகவே தமிழ் இடைமுகத்தைத் தரப்படுத்துவதற்கான முயற்சியையும் மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும். அதற்கான முயற்சியில் உத்தமம் போன்ற தமிழ் அமைப்புகளும், தமிழ்நாடு அரசும் முன்முயற்சி எடுக்கவேண்டும். இந்த முயற்சியை மேலெடுத்துச் செல்வதற்கான ஒரு குழுவை இந்த மாநாட்டிலேயே அமைக்க வேண்டியது அவசியத் தேவையாகும்.


[1] Information Note to the Press (Press Release No. 15/2010) by Telecom Regulatory Authority Of India

[2] Information Note to the Press (Press Release No. 15/2010) – Annexture-I by Telecom Regulatory Authority Of India


(கட்டுரை முற்றும்)

கட்டுரை முன்வைப்பின் நிகழ்படங்கள்

மாநாட்டில் 25-06-2020 அன்று, அமரர் கோவிந்தசுவாமி அரங்கில் நான் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையின் நிகழ்படங்கள் (videos) Youtube வலைத்தளத்தில் Govindhaswamy Arangam A8, A9, A10, A11 என்னும் தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. தாங்கள் என் உரையை நேரில் கேட்க முடியாது போனாலும் கீழேயுள்ள தொடுப்புகளைப் பார்வையிட்டு என் முழு முன்வைப்பையும் காண முடியும். இவற்றுள் முதல் நிகழ்படத்தில் 3-வது நிமிடத்துக்குப் பின் என் உரை தொடங்குகிறது. இரண்டாவது, மூன்றாவது நிகழ்படங்கள் முழுமையாக என் உரையைக் கொண்டுள்ளன. நான்காவது நிகழ்படத்தில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்வது தொடர்கிறது.

பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

பின்னிணைப்பு

செல்பேசிகளில் தமிழ் இடைமுகத்துக்கான சில கலைச்சொற்கள்

Menu --- பட்டி
Select --- தேர்ந்தெடு
Options --- தேர்வுகள்
Back --- பின்னே
Exit --- நீங்கு
Cancel --- விடு
On --- நிகழ் / நிகழ்த்து
Off --- அகல் / அகற்று
Automatic --- தானே
Go to --- அங்கு போ
Names --- பெயர்கள்
Save --- சேமி
Delete --- அழி
Yes --- ஆம்
Ok --- சரி
No --- இல்லை
Help --- உதவி
Show --- காண்பி
Read --- படி
Switch off --- அணை
Messages --- செய்திகள்
Create message --- செய்தி எழுது
Inbox --- செய்திப் பெட்டி
E-mail mailbox --- மின்னஞ்சல் பெட்டி
Drafts --- வரைவுகள்
Outbox --- செல்மடல்
Sent Items --- அனுப்பியவை
Saved Items --- சேமித்தவை
Send --- அனுப்பு
Dictionary --- அகராதி
Clear text --- உரை அழி
Save message --- செய்தி சேமி
Exit Editor --- தொகுப்பி நீங்கு
Message counter --- செய்தி எண்ணி
Delivery Reports --- சேர்ப்பித்த அறிக்கை
Instant Messages --- உடனடிச் செய்திகள்
Voice Messages --- குரல் செய்திகள்
Picture messages --- படச் செய்திகள்
Info Messages --- தகவல் செய்திகள்
Service Commands --- சேவை ஆணைகள்
Delete Messages --- செய்திகள் அழி
Message Settings --- செய்தி அமைவுகள்
General Settings --- பொது அமைவுகள்
Text Messages --- உரைச் செய்திகள்
Multimedia Messages --- பல்லூடகச் செய்திகள்
E-mail Messages --- மின்னஞ்சல் செய்திகள்
Contacts --- தொடர்புகள்
Search --- தேடு
Add new contact --- புதிய தொடர்பு சேர்
Add new group --- புதிய குழு சேர்
Edit contact --- தொடர்பு திருத்து
Delete contact --- தொடர்பு அழி
Move contact --- தொடர்பு நகர்த்து
Copy contact --- தொடர்பு நகலெடு
Mark --- குறியிடு
Mark all --- யாவும் குறியிடு
Unmark --- குறியெடு
Log --- பதிகை
Call log --- அழைப்புப் பதிகை
Call register --- அழைப்புப் பதிவேடு
Recent calls --- அண்மை அழைப்புகள்
Missed calls --- விடுபட்ட அழைப்புகள்
Received calls --- பெற்ற அழைப்புகள்
Dialled numbers --- அழைத்த எண்கள்
Message recipients --- செய்தி பெறுவோர்
Clear log lists --- பதிவுப் பட்டியல் அழி
Call duration --- அழைப்பு காலம்
Message log --- செய்திப் பதிவு
Settings --- அமைவுகள்
Tone settings --- ஒலி அமைவுகள்
Display settings --- திரைக்காட்சி அமைவுகள்
Time settings --- நேர அமைவுகள்
Call settings --- அழைப்பு அமைவுகள்
Phone settings --- பேசி அமைவுகள்
Security settings --- பாதுகாப்பு அமைவுகள்
Profile --- வரைவாக்கம்
General --- பொது
Silent --- மவுனம்
Discreet --- ஏதேனும்
Loud --- வெளிப்படை
Meeting --- கூட்டம்
Outdoor --- வெளிப்புறம்
Theme --- அழகாக்கம்
Tones --- ஒலிகள்
Ringing tone --- மணி ஒலி
Ringing volume --- ஒலிப்பு அளவு
Vibrating alert --- அதிர்வு உணர்த்து
Msg.alert tone --- செய்தி உணர்த்து ஒலி
Next --- அடுத்து
Change --- மாற்று
Date and time --- தேதி நேரம்
Connectivity --- இணைப்புநிலை
Call --- அழை
Call divert --- அழைப்பு திருப்பு
Anykey answer --- ஏதோவிசை பதில்
Automatic redial --- தானே மறுஅழைப்பு
Speed dialing --- விரைவு அழைப்பு
Call waiting --- அழைப்பு காத்திருப்பு
Send my caller ID --- என் அடையாளம் அனுப்பு
Phone --- பேசி
Language settings --- மொழி அமைவுகள்
Automatic keyguard --- தானியங்கு விசையரண்
Security keyguard --- பாதுகாப்பு விசையரண்
Welcome note --- வரவேற்புக் குறிப்பு
Network selection --- பிணையத் தேர்வு
Start-up tone --- தொடக்க ஒலி
Gallery --- கலைக்கூடம்
Images --- படங்கள்
Video clips --- நிகழ்படங்கள்
Music files --- இசைக் கோப்புகள்
Tones --- ஒலிப்புகள்
Recordings --- பதிவுகள்
Media --- ஊடகம்
Camera --- படப்பிடிப்பி
Radio --- வானொலி
Recorder --- பதிப்பி
Organiser --- ஒழுங்கமைப்பி
Clock --- மணிகாட்டி
Alarm clock --- எழுப்பு மணி
Alarm time --- எழுப்பு நேரம்
Alarm tone --- எழுப்பு ஒலி
Repeat alarm --- திரும்ப எழுப்பு
Speaking clock --- பேசும் மணிகாட்டி
Calendar --- நாட்காட்டி
Notes --- குறிப்புகள்
Calculator --- கணிப்பி
Timer --- நேரங்காட்டி
Stopwatch --- நிறுத்து மணி
Applications --- பயன்பாடுகள்
Games --- விளையாட்டுகள்
Collection --- திரட்டு
Web --- வலை
Home --- முகப்பு
Bookmarks --- நூற்குறி
Go to address --- முகவரிக்குப் போ
Download --- பதிவிறக்கம்
Language --- மொழி
Wallpaper --- முகப்புப் படம்
Screen saver --- திரைக்காப்பு
Power saver --- மின் சேமிப்பி
Charging --- மின்னேற்றல்
Reminders --- நினைவுறுத்திகள்
Extras --- உதிரிகள்
Add new --- புதிது சேர்
Unlock --- திற
Converter --- மாற்றி
Composer --- இசைஅமைப்பி
Demo --- வெள்ளோட்டம்

கலைச்சொற்களின் பட்டியலை PDF கோப்பாக இங்கே பார்வையிடுக. File --> Save As... தேர்ந்தெடுத்துச் சேமித்துக் கொள்ளலாம். அல்லது இத்தொடுப்பின்மீது வலது கிளிக்கிட்டு Save Target As... தேர்ந்தெடுத்துச் சேமித்துக் கொள்ளலாம்.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்