மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்

தத்துவம் என்றால் என்ன?
தத்துவம் நமக்குத் தேவையா?

மதங்களின் போதனைகளே தத்துவம் என நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையே சிக்கலாகிப் போன நவீன யுகத்தில், மனிதனுடைய ஆழ்மனதிற்குள் ஊடுருவி அதிசயங்கள் நிகழ்த்தக் கற்றுத் தருவதே தத்துவம் எனப் போதிக்கும் நவீனத் தத்துவவாதிகள் ஊர் ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள். தத்துவம் என்றாலே சாதரண மனிதனுக்குப் புரியாது என்கிற கருத்தும் பரவலாக உண்டு. அது சரிதானா?

 தத்துவம் என்றால் என்ன?

பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாக விளங்குவது எது, பிரபஞ்சத்தின் இரகசியங்களையும், இயற்கையின் சக்திகளையும் மனிதனால் புரிந்து கொள்ள முடியுமா, முடியுமெனில் அவற்றை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்த மனித அறிவால் முடியுமா, பிரபஞ்சமும், மனித சமூகமும், மனிதனுடைய சிந்தனையும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்னேறிச் செல்கிறதா, ஆம் எனில் அவ்விதிமுறைகள் யாவை, சமூகத்தில் மனிதன் வகிக்கும் இடம் யாது, அவனுடைய இயல்பு யாது என்பது போன்ற பொதுவான கேள்விகளுக்கு விடைகாண வழிகாட்டுவதே தத்துவம் ஆகும்.

 தத்துவம் நமக்குத் தேவையா?

கடந்த காலத்தைப் பற்றிய உண்மைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளவும், நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், வருங்காலம் பற்றிய கணிப்புகளைச் சரியாக அறிந்து கொள்ளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக இயல்பாகவே விருப்பம் உண்டாகிறது. இதுபோன்று சரியான கண்ணோட்டத்தோடு வாழ்க்கைப் போக்குடன் இணைந்து முன்செல்ல விரும்பும் அனைவருக்கும் தத்துவ அறிவு இன்றியமையாதது ஆகும். வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும், இடையூறுகளையும் எதிர்கொள்வதற்கு வேண்டிய வலிமையையும் தன்னம்பிக்கையையும் தத்துவம் மனிதனுக்குத் தருகிறது. செயலூக்கத்துடன் இலட்சியத்தை நோக்கி முன்னேற அவனுக்கு உதவுகிறது.

 இயக்கம் என்பது யாது?

நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சமும், நாம் வாழும் பூமியும், பூமியிலுள்ள அனைத்துப் பொருட்களும், மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும், மனித சமூகமும், மனித சிந்தனையும்கூட வரலாற்றின் வளர்ச்சிப் போக்கிலே உருவானவையே. மேற்சொன்ன அனைத்தும் தொடர்ந்து மாறுதலுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கின்றன. மாற்றம் தவிர்த்த மற்றவை யாவும் மாறிக் கொண்டே இருக்கின்றன. மாறுதலும் வளர்ச்சியும் இணைபிரியாமல் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இதனையே ‘இயக்கம்’ என்கிறோம்.

 மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உந்து சக்தி எது?

இயற்கை, மனித சமூகம், மனித சிந்தனை இவற்றின் இடையறாத இயக்கத்துக்கு அதாவது மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக, ஊற்றுக் கண்ணாக விளங்குவது எது? ஒன்றையொன்று மறுக்கின்ற, ஒன்றையொன்று விலக்குகின்ற, அதேவேளை ஒன்றுக்கு ஒன்று காரணம் ஆகின்ற எதிர்நிலைகளின் ஒருமையாகவே பிரபஞ்சமும், பிரபஞ்சத்தில் நிலவும் எல்லா வகைப் பொருள்களும் அமைந்துள்ளன. பொருள் எனக் கூறப்படுவது இயற்கை, சமூகம், சிந்தனை, நிகழ்வு அனைத்தையும் குறிக்கிறது. முரண்பாட்டின் அம்சமாகவும் பகுதிகளாகவும் விளங்கும் எதிர்நிலைகளுக்கு இடையே தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. எதிர்நிலைகளின் ஒருமையும் போராட்டமுமே பொருள்களின் இடையறாத இயக்கத்துக்கும், மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக, ஊற்றுக் கண்ணாக விளங்குகின்றன.

 அளவு மாற்றமும் பண்பு மாற்றமும்

எந்தவொரு பொருளும் பண்பு, அளவு ஆகிய இரண்டாலும் வரையறுக்கப்படுகிறது ’முப்பது வயதுள்ள பெண்’ என்ற வரையறுப்பில் ’பெண்’ என்பது பண்பையும், ’முப்பது வயது’ என்பது அளவையும் குறிக்கின்றன. அளவு தனியாக நிலவுவதில்லை. எப்போதுமே ஏதேனும் ஒரு பண்பின் அளவாக இருக்கிறது. அளவு என்பது குறிப்பிட்ட பண்பினுடைய வளர்ச்சியின் பரிமாணம், கட்டம், வேகம், தரம், வியாபகம், தீவிரம் போன்றவற்றை விளக்கும் வரையறுப்பு எனலாம். இருவேறு பொருள்களின் ஒப்புமைக்கும், வேறுபாட்டுக்கும் உரிய கூறுகள் பண்பு என வரையறுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பொருளிலும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாமல் ஒருங்கிணைந்து கிடக்கும் எதிர்நிலைகளுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளின் காரணமாய் அவற்றுக்கிடையே நடைபெறுகின்ற இடையறாத மோதல்கள் ஒவ்வொரு பொருளிலும் அளவு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அளவு மாற்றம் நாளடைவில் பண்பு மாற்றத்துக்கு வழிகோலுகிறது. பண்பு மாற்றமே வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைகிறது. இவ்வாறே ஒவ்வொரு பண்பு மாற்றமும் பொருளின் பரிமாணங்களில் அளவு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அளவு மாற்றமும் பண்பு மாற்றமும் ஒன்றுக்கொன்று காரணமாக அமைகின்றன. பெரும்பாலும் அளவு மாற்றங்கள் படிப்படியாக, மெதுவாக நடைபெறுகின்றன. பண்பு மாற்றங்கள் பாய்ச்சல் முறையில் விரைவாக நடைபெற்று முடிந்து விடுகின்றன.

 நிலைமறுப்பின் நிலைமறுப்பு

எதிர்நிலைகளின் இடையறாத போராட்டத்தால் ஒரு பொருளில் பண்பு மாற்றம் நிகழ்ந்து வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது பொருளின் பழைய நிலை மறுக்கப்பட்டு புதிய நிலையை அடைகிறது. இவ்வாறு பழையதிலிருந்து புதியதுக்குப் பரிணமிக்கும் செயல்முறையே ‘நிலைமறுப்பு’ எனப்படுகிறது. இந்தப் புதிய நிலையும் நாளடைவில் பழையதாகி மற்றொரு புதிய நிலைக்கு மாற்றம் அடைகிறது. இது ‘நிலைமறுப்பின் நிலைமறுப்பு’ ஆகும். பழையது இடையறாது மறுப்புக்கு உள்ளாகிப் புதியதாக மாற்றப்படுகின்ற செயல்முறையே வளர்ச்சி எனப்படுகிறது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல, கால வகையினானே’ எனத் தமிழ் இலக்கியம் கூறுவது இங்கு நோக்கத் தக்கது. தொடர்ந்து இயக்கத்தில் இருக்கின்ற – மாற்றம் அடைகின்ற – ஒருபொருள் அதனுடைய வளர்ச்சிப் போக்கில் ஒரு குறிப்பிட்ட நிலையில் மேற்கொண்டு வளர்ச்சியின்றி அப்படியே நின்று போவதில்லை. அதாவது உச்சகட்ட வளர்ச்சிநிலை என்றோ, முடிவான உன்னத நிலை என்றோ எதுவும் கிடையாது. ‘நிலைமறுப்பின் நிலைமறுப்பு’ என்பது முடிவில்லாத ஒரு தொடர் நிகழ்வு. இனி மாற்றம் இல்லை என்கிற நிலை எப்போதும் இல்லை. மாற்றம் ஒன்றே நிலையானது.

 இயக்கவியல்

எதிர்நிலைகளின் ஒருமையும் போராட்டமும், அளவு மாற்றமும் பண்பு மாற்றமும், நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆகிய மூன்று விதிகளும், இயற்கை, சமூகம், நிகழ்வு, சிந்தனை, செயல்முறை ஆகிய அனைத்துக்கும் ஒருசேரப் பொருந்துகின்ற பொதுவான விதிகளாகும். இவற்றைச் சொல்லும் தத்துவம் ‘இயக்கவியல்’ எனப்படுகிறது. இம்மூன்று விதிகளும் ‘இயக்கவியல் விதிகள்’ எனப்படுகின்றன. இவ்விதிகளின் அடிப்படையில் எந்தவொரு பொருளையும் நிகழ்வையும் அணுகி, நுணுகி ஆராயும் முறை ‘இயக்கவியல் வழிமுறை’ எனப்படுகிறது.

தொடரும்...

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்