மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

புலரட்டும் புதுவாழ்வு!

['கவிமழை’ என்னும் கவிதை இதழில் 15-07-1979 அன்று வெளியான கவிதை]

பாடுகின்ற பாட்டுக்கே பொருளாய் ஆனான்
        பாவிமகன் வேறென்ன பயனைக் கண்டான்
”ஓடுகின்ற(து) இன்றேபார் வறுமை” என்றே
        உறுதிமொழி தந்தவரின் பேச்சை நம்பிப்
பீடுபெறும் வாழ்க்கையென்றே ஊமை யாகிப்
        பெற்றுவரும் துயரமெல்லாம் மனத்த டக்கி
வாடுகின்றான் பாட்டாளி வழிகா ணாமல்
        வாருங்கள் அவனுக்கு வழியைச் சொல்வோம்!

கொடிகட்டிப் பறக்கின்ற கோபு ரங்கள்!
        கூப்பிட்டால் ஓடிவரும் வேலை யாட்கள்!
படியிட்டே அளக்கின்ற செல்வம்! கீழே
        பாதங்கள் மோதவிடாக் கம்ப ளங்கள்!
அடிதொட்டு நீவணங்க அவனும் இங்கே
        ஆகாயம் சென்றுவிட்டான்! ஓடாய்ப் போனாய்!
விடியட்டும் தானாக என்றி ருந்தால்
        விடியாது பொழுதுனக்கு! விடியச் செய்வாய்!

தீப்பிழம்புப் பந்தங்கள் சருகுக் காட்டைத்
        தீண்டிவிட்டால் மிஞ்சுவதும் என்ன? சாம்பல்!
கூப்பாடு போட்டிங்கே வெற்றி காணல்
        கொக்குதலை வெண்ணெய்வைத்துப் பிடித்தல் போலாம்!
பூப்போட்டுப் பூஜித்து வாழ்ந்த தெல்லாம்
        போதும்!இனி புதியதொரு உலகம் பூக்க
ஏற்பாடு செய்திடுக! ஆர்ப்ப ரித்தே
        எழுந்துவிட்டால் எவரிங்கே எதிர்த்து நிற்பார்?

வான்முட்டும் மாளிகைகள் வண்ணத் தோட்டம்,
        வனப்பான பொன்பட்டு, கடலின் முத்து,
தேன்சொட்டும் மலர்ச்சோலை, வாக னங்கள்,
        திகழ்கின்ற அணைக்கட்டு, நெடிய சாலை,
ஊன்மட்டும் வளர்ப்பவரும் உண்ணும் சோறு,
        உயர்வான தொழிற்சாலை யார்ப டைப்பு?
கூன்பட்டுக் குனிந்தபின்னும் குட்டுப் பட்டுக்
        கூழற்றுப் போனவனே கொள்வி ழிப்பு!

போக்கற்று வாழ்ந்ததெல்லாம் போதும்! வீரம்
        பொழியட்டும் உன்நெஞ்சில்! புரட்சிப் பாடல்
கேட்கட்டும் திசையெட்டும்! அண்ட மெல்லாம்
        கிடுகிடுத்துப் போகட்டும்! வஞ்ச நெஞ்சார்
ஏற்கட்டும் தண்டனையை! எழுச்சிப் பாட்டாய்
        இருள்வானில் தொடங்கட்டும் ஒளித்தே ரோட்டம்!
பூக்கட்டும் செம்மலர்கள் களத்து மேட்டில்!
        புலரட்டும் புதுவாழ்வு இந்த நாட்டில்!

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்