மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

இந்தப் பாவிமகன் சாகும்வரை...

மனக்கோயில் வாசலிலே வரைந்த கோலம்!
       வாட்டங்கள் தீர்த்துவைத்த வசந்த காலம்!
பனிக்கால வைகறையின் பரவ சங்கள்
       பவனிவரும் மழலைமுகம் பவழத் திங்கள்!
கனிச்சோலை இளந்தென்றல் கடைவி ரிப்பு
       களங்கமிலச் சின்னவிழிக் கவிச்சி ரிப்பு!
உனக்காக என்பாடல் ஊர்வ லங்கள்!
       உன்னினைவில் என்னிதய ஓவியங்கள்!

ஏங்கிநின்ற கனவுகளின் எதிர்பார்ப் பெல்லாம்
       ஏமாற்றம் கண்டதனால் இதயம் நோகும்;
ஓங்கிநின்ற கவிதைமன உணர்வின் வெள்ளம்
       ஊற்றுக்கண் இல்லாமல் உலர்ந்து போகும்;
தேங்கிநின்ற எழுச்சிமனச் சிந்த னைகள்
       செயலற்றுச் சோர்வுற்றுச் சிதறும் போது,
தூங்கிநின்ற கவியுணர்வைத் தொட்டெ ழுப்பித்
       தூயமகள் என்பாட்டைத் தொடர வைத்தாள்!

மலர்ரோஜாக் காடுகளில் மகிழ்ந்த நாட்கள்
       மகரந்த நினைவுதரும் மனதின் பூக்கள்!
பலர்பேசத் தயங்குங்கால், பாசம் கொஞ்சும்
       பார்வையிலே என்னுருவம் படும்போ தெல்லாம்,
புலர்காலைப் பொழுதாகப் பூமு கத்தில்
       புன்சிரிப்பாய்ப் பரவுகின்ற பூரிப் பொன்றே
உலர்பாலை நெஞ்சத்தில் உவகை சேர்க்கும்!
       ஒளிமுகத்துத் தரிசனத்தால் உள்ளம் பூக்கும்!

அடிவாரக் கலைக்கழகம் அளித்த செல்வம்!
       யாருக்கும் கிடைக்காத அன்புச் செல்வம்!
பிடிவாதப் போக்கில்லாப் பிள்ளை உள்ளம்!
       பிறரோடு பகைக்காத பேதை நெஞ்சம்!
நெடுமாடக் கூடலிலே நேர்ந்த வாழ்வின்
       நிகழ்ச்சிகளில் நிலைத்துவிட்ட நினைவுச் சின்னம்!
முடியாத தொடர்கதையாய் முகிழ்த்த பாசம்,
       முந்திவரும் பிரிவுகளால் முறிந்தா போகும்?

கனிவனத்துத் தேன்காட்டில் கண்டெ டுத்த
       கனகமணிப் பொன்புதையல்! கால மெல்லாம்
பனிமனத்துக் பூங்கனவில் பவனி வந்த
       பண்புருவம்! அணையாத பாச தீபம்!
தினைவனத்துக் கிளியாகத் திரிந்து, நெஞ்சில்
       தெம்மாங்குத் தீந்தமிழாய்த் திகழ்ந்த செல்வி!
இனியெனக்கு வேண்டுவது எதுவும் இல்லை!
       இளையமகள் அன்புமட்டும் இருந்தால் போதும்!

மனதுவளர் துயர்களுக்கு மருந்து நல்கி,
       மாசற்ற தோழமைக்கு மகிமை சேர்த்தாள்!
எனதுதுயர் இதுவென்றே எடுத்துக் கூறி,
       இதம்பெற்றாள்; தாய்நிலையில் என்னை வைத்தாள்!
உணவுவகை பரிமாறி உபச ரித்தே
       உயிர்வளர்த்த அன்னையென உயர்ந்து நின்றாள்!
கனவுமகள் என்வாழ்க்கைக் காவி யத்தில்
       காலத்தால் அழியாத கவிதை ஆனாள்!

குனிந்துநின்று சிந்துமெழில் குமிண்சி ரிப்பும்,
       குங்குமப்பூ முகம்பரவும் குதூக லத்தில்
கனிந்துநின்ற பேரழகும், மைவ ரைந்த
       கண்களுக்குள் பொங்கிநின்ற கவின்கு றும்பும்,
மனந்திறந்து பேசுகின்ற மாண்பும், கொஞ்சும்
       மழலையிலே கதைசொல்லும் வனப்பும், என்முன்
பணிந்துநின்று பதில்சொல்லும் பாங்கும் இந்தப்
       பாவிமகன் சாகும்வரை
படம்போல் நிற்கும்!

நின்றஇடம் எல்லாமே நிழல்போல் தோன்றும்!
       நீண்டஉரை யாடல்களும் நினைவைத் தூண்டும்!
அன்றுசொன்ன வார்த்தையெல்லாம் அலைபோல் மோதும்!
       அருள்மொழியாள் தெய்வீக அன்பைப் பாடும்!
செண்டுமுகம் நான்கேலி செய்யும் போது
       சிவப்பதுவும் சிணுங்குவதும் சினந்த ணிந்து
தென்றலெனச் சிரிப்பதுவும் சித்தி ரம்போல்
       சிந்தையிலே வந்துவந்து திளைக்க வைக்கும்!

எனைமீண்டும் இசைக்கவைத்த இதய ராகம்!
       இனியஅன்பு மழைபொழிந்த இளைய மேகம்!
நினைவேந்தி நான்பேச நினைப்ப தெல்லாம்
       நீபேச வேண்டுமென நினைக்கும் உள்ளம்!
மனைவாழ்வில் நாளும்பூ மழைகள் தூவி,
       வசந்தங்கள் வாழ்த்திடவே வாழும் நாளில்,
உனைமீண்டும் காண்கின்ற ஒருநாள் வந்தால்,
       உயிர்மீண்டும் பெற்றவனாய் உவந்து போவேன்!

கண்மணி!என் கண்களுனைக் கண்டு பேசும்
       காலங்கள் என்றுவரும்? கனிமு கத்தின்
பொன்மணிப்பூஞ் சிரிப்பழகில் பூரிக் கின்ற
       புதுநாளும் என்றுவரும்? புதிர்கள் போடும்
மின்மினிப்பூ விழியழகில் மின்னல் கீற்றாய்
       மிதந்துவரும் கனவையெல்லாம் மீண்டும் கண்டு,
என்மவுனக் கனவுகளின் தவங்க ளுக்கே
       ஏற்றவரம் பெறும்நாளும் எந்த நாளோ?

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்