மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

நட்சத்திரங்களின் மரணத்தில் ஒரு ஞான விடியல்!

[1976-இல் சகாப்தம் இதழில் வெளியான கவிதை]

ஈர நினைவின் குளுமையிலே – ஓர்
        இன்பக் கனவு மலர்கிறது!
தூர நிலவின் தனிமையிலே – அது
        துன்ப நிழலாய் வளர்கிறது!

ஆரத் தழுவி மகிழ்ந்திடவே – உயிர்
        அன்பைத் தேடி அலைகிறது!
ஓர விழியின் கண்ணீரில் – ஓர்
        ஊமைப் பயணம் நடக்கிறது!

பாலை வனத்தின் பசுமைகளாய்ச் – சில
        பாச மனங்கள் சிறைப்பிடிக்கும்!
காலை சிரிக்கும் பனித்துளிகள் – தினம்
        காணும் சுகத்தின் நிலையிருக்கும்!

நெஞ்சக் கனலின் ஜுவாலையிலே – ஆசை
        நித்தம் கருகிச் சவமாகும்!
அஞ்சிக் கதறும் ஆன்மாவின் – உயிர்
        ஆலைக் கரும்பாய்த் தினம்வாடும்!

வசந்த காலப் புதுவிடியல் – ஒருநாள்
        வாசல் கதவைத் திறக்கிறது!
இசைந்த காதல் சுகம்போல – நெஞ்சில்
        இன்ப ராகம் பிறக்கிறது!

சுகந்த விழியின் குளுமையிலே – பெரும்
        சோகச் சுமையும் குறைகிறது!
உகந்த வாழ்வும் மலர்ந்ததென – மனம்
        உருகி உருகிக் கரைகிறது!

”வந்த வசந்தம் மறைந்துவிடும் – ஒருநாள்
        வாட்டும் கோடை மலர்ந்துவிடும்!”
இந்த உலக நியதியினை – மனம்
        ஏனோ எண்ணி அழுகிறது!

ராகம் கொஞ்சம் தடுமாறும் – நடு
        ராத்ரி வானப் பூர்ணிமையின்
யாகம் முடியும் தறுவாயில் – அந்த
        யாழின் நரம்பு தெறிக்கிறது!

நட்சத் திரங்கள் மரணத்தில் – ஒரு
        ஞான விடியல் நடக்கிறது!
உச்சிச் சூர்யன் ஜனனத்தில் – பொய்
        உலகின் மாயை வெளுக்கிறது!

ஆத்ம கீத இசைலயத்தில் – கோடி
        ஆசை மலரும் சுகமனத்தில்
பூத்த கனவும் முடிகிறது – ஒரு
        புனிதப் பயணம் தொடர்கிறது!

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்