மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

காரணத்தோடு நான் சிரிப்பேன்!

[1970-இல் கல்லூரி நாட்களில் சினிமாப் பாடல்போல ஒரு கவிதை எழுதுமாறு நண்பர்கள் விரும்பிக் கேட்டபோது பாடியது]

வானத்தில் ஒருநாள் மேகங்கள் மாறும்
வாழ்க்கையில் அதுபோல் துயரங்கள் தீரும் – அந்தக்
காலத்தில் என்றன்
காவியம் யாவும்
ஆனந்தத்தோடு அரங்கேறும்! (வானத்தில் ஒருநாள்…)

ஓரத்தில் ஒதுங்கி உறவுகள் ஓடும்
உள்ளத்தில் வேதனை கீதங்கள் பாடும் – அந்த
நேரத்தில் என்றன்
நெஞ்சத்தின் கால்கள்
நேசத்தைத் தேடி நடைபோடும்! (வானத்தில் ஒருநாள்…)

வீட்டுக்கு வந்தே வேந்தென்று பேசும்
வீதியில் சென்றே பேயென்று ஏசும் – இந்த
நாட்டுக்குள் நாமும்
நலம்பெறக் கண்டே
நஞ்சர்கள் நெஞ்சில் புயல்வீசும்! (வானத்தில் ஒருநாள்…)

நேருக்கு நேரே போரிட்டு வெல்வேன்
நெஞ்சுக்குப் பயந்தே நீதிகள் சொல்வேன் – தினம்
ஊருக்கு வாழும்
உண்மைகள் காட்டி
உலகத்தில் நாளும் புகழ்கொள்வேன்… (வானத்தில் ஒருநாள்…)

பூவிதழ் தூவிய பாதையில் நடப்பேன்
பொன்னொளிர் சிந்திடும் மேடையில் கிடப்பேன் – ஒரு
காவியம் கூறும்
நாயகன் போலே
காரணத்தோடு நான் சிரிப்பேன்! (வானத்தில் ஒருநாள்…)

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்