மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

சென்னைநகர் வீதியிலே சிந்தனையின் ஊர்வலங்கள்...

[1975-இல் பணி நிமித்தம் சென்னை வண்ணாரப் பேட்டை சோலையப்பன் தெருவில் ஓர் ஒண்டுக் குடித்தனத்தில் பகிர்ந்தாளியாய்க் குடியேறி, சென்னை நகர் வீதிகளில் வலம் வந்தபோது மனதில் ஏற்பட்ட தாக்கங்கள்]

சென்னைநகர் வீதியிலே சிந்தனையின் ஊர்வலங்கள்!
சிந்தனையின் ஊர்வலத்தில் முந்திவரும் வேதனைகள்!

குடைவானக் கூரைநிழல் – அங்கே
       குளிர்வெய்யில் மழைபொழிய
நடைபாதை மாளிகையில் – எங்கள்
       நாட்டின் தவப்புதல்வர்!

உழைப்புக்கே வாழ்க்கைப்பட்டு – வாழ்வின்
       உரிமைகளை இழந்தவர்கள்!
இழப்புக்கும் தாழ்வினுக்கும் – காரணம்
       ஏதும்அறி யாதவர்கள்!

விலங்காகத் துறைமுகத்தில் – வியர்வை
       வேள்வி நடத்துகின்றார்;
கலங்கரை விளக்கம்மட்டும் – இவர்கள்
       கண்டதில்லை இன்றுவரை!

ஆலையிலே எந்திரத்தில் – அதன்
       அச்சாகச் சுழல்பவர்கள்!
வேலையிலே திருப்திகண்டு – தினம்
       வேதனையில் உழல்பவர்கள்!

பொறுமையின் முத்திரைகள் – இந்தப்
       பூமித்தாய் புத்திரர்கள்!
வறுமையின் சின்னங்களாய் – இங்கு
       வாழ்ந்துவரும் தத்துவங்கள்!

மகரந்தம் உதிர்ப்பவர்கள் – சருகாய்
       வாடி உதிருகின்றார்!
சுகந்தங்கள் படைப்பவர்கள் – அதன்
       சொந்தத்தை இழந்துநின்றார்!

பொன்னுலகின் விடியலுக்கே – ராக
       பூபாளம் இசைப்பவர்கள்,
கண்ணுறங்கிப் போனார்கள் – பொய்க்
       கனவுகளின் தாலாட்டில்!

       ***** ***** *****

கண்மணித் தோழரெல்லாம் – ஒருநாள்
       கண்விழித்து எழுந்திடுவார்!
விண்ணதிர முழக்கமிட்டே – ஒரு
       வீர சபதமேற்பார்!

கண்ணீரின் வடுக்களிலே – எழுச்சிக்
       காவியம் படைத்திடுவார்!
செந்நீரின் சுவட்டினிலே – ஒளிச்
       செஞ்சுடரை ஏற்றிவைப்பார்!

பெருமூச்சின் இளஞ்சூட்டில் – யுகப்
       பிரளயத்தைப் பிரசவிப்பார்!
திருநாட்டின் வீதிகளில் – வசந்த
       தேரோட்டம் நடத்திவைப்பார்!

சென்னைநகர் வீதியிலே சிந்தனையின் ஊர்வலங்கள்!
சிந்தனையின் முடிவினிலே தெம்புதரும் நம்பிக்கைகள்!

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்