மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…

[மதுரைப் பல்கலைக்கழக நாகமலை அடிவார வளாகத்தில் எம்.எஸ்சி. முதலாண்டு முடித்துவிட்டுக் கோடை விடுமுறையில் சுற்றித் திரிந்த காலத்தில் பாடியது.]

ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
இன்ப மயமான எத்தனை நாட்கள்!

வசந்த காவியம் படைக்கும் வாள்விழிகளின்
இமையோரச் சுகந்தங்களிலே…
மோனக் கனவுகளை மூட்டிவிடுகின்ற
செம்பிஞ்சு இதழோரச் சிந்துகளின்
மௌன ராகத்திலே…
ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
இன்ப மயமான எத்தனை நாட்கள்!

கவிதைக் கனவுகளின் உதயத்திலே…
கனவுக் கவிஞனின் இதயத்திலே…
நயன அழகியின்
நளின நாட்டியங்கள்!
ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
இனிமை பரப்பிய எத்தனை விடியல்கள்!

சூனியப் பாலையின் சோலையிலே…
சுந்தர சொப்பன வேளையிலே…
ஊமை நாடகங்களின்
ஒய்யார அரங்கேற்றங்கள்!
ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
இன்பமயமான எத்தனை பகல்கள்!

பூவசந்த சோலைகளின்
பொன்மயமான நிழல்களிலே…
சுருதிலயக் கீதங்களின்
சொர்க்கநதிச் சுழல்களிலே…
மௌன ரகசியங்களின் மறுவிவாதங்கள்!
ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
இன்பகரமான எத்தனை அந்திகள்!

இன்றைக்கு வந்திடும்
இந்த மயான இரவோ-
ஏகாந்த மனத்தின்
ஏக்கப் பெருமூச்சில்
கருவுயிர்த்த வேதனைக் குழந்தைகள்,
விரக்திப் புன்னகைகளின்
விடியல் தாலாட்டிலும்
விழிமூட மறுத்து,
அழுது படைக்கின்ற
அவலப் புலம்பல்களிலே…

ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
இன்ப மயமான எத்தனை நாட்கள்!

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்