மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

பொழுதே புலர்ந்து விடாதே! நான் தூங்க வேண்டும்...

[மேற்கண்ட தலைப்பினைத் தந்து உற்ற நண்பர் ஒருவரின் அண்ணார் ஒரு கவிதை எழுதச் சொன்னபோது எழுதியது]

பொழுதே புலர்ந்து விடாதே,
நான் தூஙக வேண்டும்!

இதய அணுக்களின் ஏக்கப் பாடல்களுக்கு
இசையமைத்து இசையமைத்து
என் விழியிமைகள் சோர்ந்திருக்கின்றன.

இதய வீணையின் நரம்புகள் அறுபட்டுச்
சுருதிகள் ஓய்ந்தபோது,
இடைவிடாமல் ஒலித்த
மௌன அழுகைகளின் ஊமை ராகங்களைக்
கேட்டுக் கேட்டு
என் செவிப்பறைகள் களைத்திருக்கின்றன.

துயரங்களின்போது ஏற்பட்ட தனிமைகளையும்
தனிமைகளின்போது ஏற்பட்ட துயரங்களையும்
அசைபோட்டு அசைபோட்டு
என் இதய மென்மைகள் தளர்ந்திருக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் ஓய்வு தர வேண்டும்.
பொழுதே புலர்ந்து விடாதே…
நான் தூஙக வேண்டும்!

வசந்த காலம் தொடங்கிவிட்டது என
நான் மகிழ்ந்து கொண்டிருந்தபோது…
பயண வழியிலே
பாலைவனம் குறுக்கிட்டுவிட்டதைப் பார்த்தேன்.

தென்றலின் இதமான தழுவலிலே
என் நெஞ்சைப் பறிகொடுத்தபோது…
குமுறும் எரிமலையின் மடியிலே
நின்று கொண்டிருப்பதை அறியவந்தேன்.

பூர்ணிமையின் பொன்னொளியில்
புத்தி யாகம் நடத்தப் புறப்பட்டபோது…
கிழக்கு வானிலே
பொழுது புலர்ந்துவிட்டதைக் கண்டேன்.

வேதனை விடியல்கள்
அஸ்தமனங்களைச் சந்தித்துவிட்டன
என்று நான் கருதிக் கொண்டிருந்தபோது…
இதய நாளங்களில் இளைய ராகங்களின்
அஸ்தமனம் உதயமாகிவிட்டதை உணர்ந்தேன்.

நனவுகளில் ஏற்பட்ட இந்த ஊமைக் காயங்களுக்கு
கனவுகளில் மருந்து தேடப் போகிறேன்.
இரவையும் பகலையும்
இமைக்காமல் காவல்புரியும்
என் விழிகளுக்கு விடுப்புத் தரப்போகிறேன்.

பொழுதே புலர்ந்துவிடாதே…
நான் தூங்க வேண்டும்!

எனக்கென்று யாருமே இல்லையா? என்று
இந்த ஆன்மா கதறி அழுதபோது…
‘நான் இருக்கிறேன்’ என்று
அரவணைத்து ஆறுதல் சொன்ன
அன்பு இதயங்கள் எத்தனை?

எனக்கு எல்லாமே நீங்கள்தான் என்று
நெக்குருகி, நினைவுருகி
களங்கமில்லாத அன்பினைக்
காலடியில் சமர்ப்பித்தபோது
புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்ட
புனித நெஞ்சங்கள் எத்தனை?

நீண்டு நீண்டு வளர்கின்ற
நித்திரை இல்லாத இரவுகளில்
மீண்டும் மீண்டும்
நான் நினைத்துப் பார்க்கிறேன்.

தனிமைகளே என்னைத்
தத்தெடுத்துக் கொண்டன.
நீண்ட நெடிய என் இனிய
தனிமைகளைத் தனிமையாக்கிவிட்டு
இறப்போடு இல்லறம் நடத்தப் போகிறேன்.

மரண நாடகத்தை
உடனே அரங்கேற்றிவிட ஆசைதான்.
ஆயினும் நான் அனுபவம் அற்றவன்.
கனவுகள் இல்லாத
கடைசித் தூக்கத்தின்
அரங்கேற்றத்துக்கு முன்பாக,
நீண்ட ஒத்திகைகளை
நிகழ்த்திப் பார்க்க விரும்புகிறேன்.

பொழுதே புலர்ந்துவிடாதே…
நான் தூங்க வேண்டும்!

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்