மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

அந்த மயானங்களில்… ஒரு தாலாட்டுக்காக…

ஏமாற்றங்களைத் தாங்க முடியாமல்
விம்மியழும் இதய மென்மைகளைத் தூங்கவைக்க-
அந்த மயானங்களில்…
ஒரு தாலாட்டுக்காகத் தவமிருக்கிறேன்.

என்னால் என்னை நிலைநிறுத்த முடியாதபோது
என் குறைபாடுகளை முறையீடுகளாக்கி
சரண் அடைகிறேன் – சில நீதிமன்றங்களில்!

நம்ப மறுத்துச் சத்தியம் வாங்கப்பட்ட பிறகே
வாக்குமூலங்கள் கேட்கப்படுகின்றன.
விசாரணயே சந்தேகத்தில் தொடங்கும்போது,
அப்ரூவருக்கும் தண்டனை கிடைப்பதில்
ஆச்சரியம் ஏதுமில்லை.

நான் என் கட்டுக்குள் அடங்காதபோது,
என்னை நான் அடகு வைத்துவிடுகிறேன்.
ஏலத்துக்கு வரும்போதுதான்
என்னை மீட்டுக் கொள்ள எண்ணுகிறேன்.

என்னிடம் விவாதிக்க மறுத்து
என் இதயம் ஊமையாகிவிடும்போது-
நான் அதிகமாய்ப் புலம்புகிறேன்.
என்னுள் விவாதங்கள் நடந்து,
முடிவுகள் எடுக்கப்படும்போது-
நான் ஊமையாகிவிடுகிறேன்.

அதுவரையில்-
விம்மியழும் இதய மென்மைகளைத் தூங்கவைக்க
அந்த மயானங்களில்…
ஒரு தாலாட்டுக்காகத் தவமிருக்கிறேன்.

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்