மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

இங்கே சில முடிவுகள் மறுபரிசீலனைக்கு...

நீதிமன்றம் கூடுகிறது.
இங்கே சில முடிவுகள்
மறுபரிசீலனைக்கு உள்ளாகின்றன.

நியாயமானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு,
விடுதலை செய்யப்பட்டிருந்த சில உணர்வுகள்
இன்று-
நீதி விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சில ‘கனவுகளும்’ சில ‘கற்பனைகளும்’
கைவிலங்கிடப்பட்டுக் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளன.
குற்றப் பத்திரிக்கை வாசிக்கப்படுகிறது:

”எண்ணித் துணியவில்லை;
இடம் பொருள் ஏவல் உணரப்படவில்லை;
வரம்புகள் மீறப்பட்டுள்ளன;
விதிவிலக்குகளே விதிகளாக்கப்பட்டுள்ளன;
பாலைகளிலும், பாறைகளிலும்
நாற்றுகள் நடப்பட்டு, நீர் பாய்ச்சப்பட்டதால்
நாற்றுக்கும் நட்டம்; நீருக்கும் நட்டம்.
எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றத்தில் முடிந்துவிட்டதால்
கனவுகளும் கற்பனைகளும் தண்டிக்கப்பட வேண்டும்”

குற்றங்கள் மறுக்கப்படுகின்றன.
குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.
வாதங்கள் தொடர்கின்றன.
சாட்சிகள் விசாரிக்கபடுகின்றனர்.

விசாரணை முடிந்து,
நீதிபதி தீர்ப்பை வாசிக்கப் போகிறார்…

கொஞ்சம் பொறுங்கள்-
வழக்கில் ஒரு திருப்பம்!

அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை
அலட்சியமாக வெளிப்பட்டதால்,
மென்மையான உணர்வுகள் மிதிபட்டு,
மெய்யான அன்புக்குக் காயம் ஏற்பட்டது
உண்மைதானாம்!

அறிவு பூர்வமான அணுகுமுறைகள்
உணர்வுபூர்வமான அன்பின் வெளிப்பாட்டுக்கு
ஊறு விளைவித்தது உண்மைதானாம்!

ஏற்ற விலை தரப்படாததால்
ஏற்றுமதி செய்யப்பட்ட ஏக்கங்களும் தாபங்களும்
உருகிக் கரைந்த இதய மென்மைகளும்
உடனே வாபஸ் பெறப்படுகின்றன…
குற்றவாளிகள் அப்ரூவர்களாய் மாறிவிட்டனர்!

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்