மு.சிவலிங்கம் வலையகம்

கணிப்பொறிப் பிணையப் பாடங்கள்
 

பாடம்-1
கணிப்பொறிப் பிணையம்
என்றால் என்ன? எதற்கு? எவ்வாறு?

தனிமரம் தோப்பாவதில்லை. தனிமனிதன் சமூகம் ஆவதில்லை. மரங்கள் சேர்ந்து தோப்பாகும்போது மனித சமூகம் பலன் அடைகிறது. மனிதர்கள் சேர்ந்து சமூகம் ஆகும்போது மனித வாழ்க்கை பொருளுடையதாகிறது. தனிமனிதன் சாதிக்க முடியாத வற்றைச் சமூகம் சாதித்துக் காட்டுகிறது. தனித்த கணிப்பொறி, ‘பிணையம்’ (Network) ஆவதில்லை.

தனித்த கணிப்பொறிகள் பல பிணைக்கப்பட்டுப் ‘பிணையம்’ ஆகும்போது, ‘சமூகம்’ போலச் சக்தி வாய்ந்ததாகி விடுகிறது. தனித்த கணிப்பொறி சாதிக்க முடியாதவற்றைக் ‘கணிப்பொறிப் பிணையம்’ சாதித்துக் காட்டுகிறது. கோப தாபங்கள், சண்டை சச்சரவுகள் இல்லாத ‘கணிப்பொறிச் சமூகம்’ மனித சமூகத்துக்கு மகத்தான சக்தியை வழங்குகிறது.

எந்தவொரு கருத்துருவைப் பற்றியும் முழுமையாகப் புரிந்து கொள்ள, என்ன? எதற்கு? எவ்வாறு? என மூன்று கேள்விகளை எழுப்பி அக்கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொண்டால் போதும். ‘கணிப்பொறிப் பிணையம்’ பற்றிய கருத்துருவையும் மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கான பதில்கள் மூலமாகப் புரிந்து கொள்வோம்.

 கணிப்பொறிப் பிணையம் என்றால் என்ன?

‘கணிப்பொறிப் பிணையம்’ (Computer Network) என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பதில்காணும் முன்பாக ‘பிணையம்’ (Network) என்ற சொல்லின் பொருளைப் புரிந்து கொள்ள முயல்வோம். எங்கெல்லாம் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது என்று பார்த்தால் இதன் பொருள் ஓரளவு புலனாகும். ‘தகவல் தொடர்புப் பிணையம்’ (Communication Network), ‘போக்குவரத்துப் பிணையம்’ (Transport Network), ‘சந்தைப்படுத்தல் பிணையம்’ (Marketting Network) என்றெல்லாம் பேசப்படுகிறது. இவற்றில் ‘பிணையம்’ என்ற சொல்லினால் பெறப்படும் கருத்து யாது?

ஒரே மாதிரியான செயல்பாடுடைய ஒன்றுக்கு மேற்பட்ட முறைமைகள் (Systems) தமக்குள்ளே ஒருவகையான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, ஒரு குழுவாகச் செயல்படும் கட்டமைப்பையே ‘பிணையம்’ (Network) என்ற சொல் குறிக்கிறது. அந்த வகையில் பல கணிப்பொறிகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு ஒரு குழுவாக இயங்கும் அமைப்பையே ‘கணிப்பொறிப் பிணையம்’ (Computer Network) எனக் கூறுகிறோம். பல கணிப்பொறிகள் ஒன்றாகப் பிணைக்கப்படும் நெட்ஒர்க்கைப் ‘பிணையம்’ என்றும், பல பிணையங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட இன்டர்நெட்டை இணையம் என்றும் தமிழில் அழைப்பது பொருத்தம்தானே?

 கணிப்பொறிப் பிணையம் எதற்காக?

ஒரு தனிமனிதனின் பண்பும் பண்பாடும், கருத்தும் கண்ணோட்டமும் ஒரு சமூகக் குழுவின் அங்கமாக இருக்கும்போது செழுமையடைகின்றன, விரிவடைகின்றன. அதன் காரணமாய் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பலன் அடைகிறார்கள், பலம் பெறுகிறார்கள். கணிப்பொறிப் பிணையத்துக்கும் இது பொருந்தும். ஒருவருடைய வீட்டில், ஓர் அலுவலகத்தில், ஒரு நிறுவனத்தில் கணிப்பொறிகளைத் தனித்தனியே பயனபடுத்துவதைக் காட்டிலும் அவற்றை ஒன்றிணைத்து ஒரு கணிப்பொறிப் பிணையத்தை உருவாக்கிப் பணியாற்றுவதில் கிடைக்கப்பெறும் பலன்கள் பற்பல. பரந்த அளவில் அத்தகு பலன்களைப் பெற்றுப் பயனடையும் பொருட்டே கணிப்பொறிப் பிணையங்களை அமைக்கிறோம். கணிப்பொறிப் பிணையங்களால் பெறப்படும் பலன்களை நான்கு பிரிவுகளில் அடக்கலாம்:

(1) தகவல் பரிமாற்றம்
(2) வளங்களைப் பகிர்தல்
(3) தகவல் பராமரிப்பும் பாதுகாப்பும்
(4) மனித உழைப்பும் பணித்திறனும்

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.

(1) தகவல் பரிமாற்றம்

ஓர் அலுவலகத்தில் பல்வேறு பணிப்பிரிவுகளுக்கு இடையே அல்லது இரண்டு அலுவலகங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் எவ்வாறு நடைபெற்று வந்துள்ளது? கையால் எழுதப்பட்ட கடிதங்களை ஆள்மூலம் அல்லது அஞ்சல் வழியே அனுப்பி வைத்தனர். சற்றே முன்னேறிக் கடிதங்களைத் தட்டச்சு செய்து ஆள்மூலம் அல்லது அஞ்சல் வழியே அனுப்பி வைத்தனர். கணிப்பொறி வந்தபின் கடிதங்களைக் கணிப்பொறியில் தயாரித்தனர். அனுப்பும் முறையோ அதே பழைய முறைதான். அவசரம் எனில் அஞ்சலில் அனுப்புவதற்குப் பதில் ‘நகலி’ (Fax) வழியே அனுப்பும் முறைக்கு முன்னேறினர். இரண்டு அலுவலகங்களிலும் கணிப்பொறி இருப்பின் நெகிழ்வட்டு (Floppy Disc), குறுவட்டு (CD), அல்லது நினைவகக் குச்சிகளில் (Memory Stick) நகலெடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

மேற்கண்ட அனைத்து முறைகளிலுமே ஏதேனும் குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. அலுவலகங்களில், அலுவலகத்தின் பணிப்பிரிவுகளில் கணிப்பொறி பயன்படுத்தப்படுகிறது எனில் அவற்றை ஒரு கணிப்பொறிப் பிணையமாக அமைத்துத் தகவல் பரிமாற்றம் மேற்கொள்வதால்,

- கால விரயம் தவிம்க்கப்படும்
- மனித உழைப்பு மமச்சமாகும்
- தவறுகளும் பிழைகளும் குறைக்கப்படும்

(2) வளங்களைப் பகிர்தல் (Resource Sharing)

ஒரு நிறுவனத்தில் பெரும்தொகை செலவு செய்து நிறுவப்பட்ட கணிப்பொறி அமைப்பின் முழுப்பயனையும் நுகரும்போதுதான் அதற்காகச் செய்த செலவு நியாயம் பெறுகிறது. கணிப்பொறி அமைப்பின் முழுப்பயனையும் நுகர வேண்டுமெனில் நிறுவனத்தில் செயல்படும் அனைத்துக் கணிப்பொறிகளும் ஒரே பிணையத்தில் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கணிப்பொறி அமைப்பின் வளங்களை வீணாக்காமல் அனைவரும் பகிர்ந்துகொண்டு அவற்றின் முழுப்பயனையும் நுகர முடியும். வளங்களைப் பகிர்தல் மூன்று பிரிவுகளில் அடங்கும்:

(அ) வன்பொருள் பகிர்வு (Hardware Sharing)

ஒரு பிணையத்தில், ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டுள்ள நிலைவட்டு (Hard Disk), குறுவட்டகம் (CD Drive), அச்சுப்பொறி (Printer), வருடி (Scanner), வரைவி (Plotter), இணக்கி (Modem) போன்ற வன்பொருள்களைப் பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள பிற கணிப்பொறிகள் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரு கணிப்பொறியின் நிலைவட்டில் பிற கணிப்பொறிகள் தகவல்களைப் படிக்கலாம், எழுதலாம். அனைத்துக் கணிப்பொறிகளிலும் குறுவட்டகம் இருக்க வேண்டிய தேவையில்லை. மென்பொருள்களை நிறுவுவதற்கு ஒன்றிலுள்ளதை மற்றவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டுள்ள அச்சுப்பொறியில் வேறெந்தக் கணிப்பொறியிலிருந்தும் அச்சிட்டுக் கொள்ளலாம். வருடி, வரைவிகளையும் அதுபோலவே பயன்படுத்தலாம். ஒரு கணிப்பொறியில் இணைய இணைப்பு இருந்தால் போதும். அந்த இணைப்பைப் பிற கணிப்பொறிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

(ஆ) மென்பொருள் பகிர்வு (Software Sharing)

கணிப்பொறி வன்பொருள்களைவிட மென்பொருள்களே விலை அதிகமாக இருக்கின்றன. ஓர் அலுவலகத்தில் தனித்தியங்கும் பத்துக் கணிப்பொறிகளில் ஒரு மென்பொருளைப் பயன்படுத்த வேண்டுமெனில் தனித்தனியே பத்துப் பிரதிகள் வாங்க வேண்டும். பத்துக் கணிப்பொறிகளை ஒரு பிணையத்தில் இணைத்து, ஒரு கணிப்பொறியில் அந்த மென்பொருளை நிறுவி, பிற கணிப்பொறிகளிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு பிணையத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே மென்பொருள் உரிம முறைகள் (Software Licensing Schemes) உள்ளன. தனித்தனிப் பிரதிகள் வாங்குவதைவிட விலை குறைவாக இருக்கும். அந்த மென்பொருள்களின் புதுப்பிப்புகள் (Updates) வெளியிடப்படும்போது ஒரே கணிப்பொறியில் புதுப்பித்தல் போதுமானது. நச்செதிர்ப்பு (Anti-Virus) மென்பொருளின் பிணையப் பதிப்பை (Network Version) இவ்வாறு பயன்படுத்திக் கொள்வது அனைத்துக் கணிப்பொறிகளையும் பாதுகாக்கச் சிறந்த முறையாகும்.

(இ) தரவுப் பகிர்வு (Data Sharing)

ஒரு குறிப்பிட்ட தரவுத் தொகுப்பை ஒரு நிறுவத்தின் பல்வேறு பணிப்பிரிவுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். அதில் திருத்தங்களும் மாற்றங்களும் அவ்வப்போது செய்ய வேண்டியிருக்கும். அத்தகவல் தொகுப்பின் நகலைத் தனித்தனிக் கணிப்பொறிகளில் சேமித்து வைத்துக் கையாள்வது சிக்கலை ஏற்படுத்தும். ஒரே தகவல் எல்லாக் கணிப்பொறிகளிலும் ஒரே மாதிரி இருக்காது. தரவுகளில் ஒத்திசைவு (Data Consistency) வேண்டுமெனில் தரவுகளை அவ்வப்போது நகலெடுத்து அனைத்துக் கணிப்பொறிகளிலும் பதிய வேண்டியிருக்கும். அனைத்துக் கணிப்பொறிகளும் பிணையமாகச் செயல்படுகின்றன எனில், ஒரேயொரு கணிப்பொறியில் மட்டும் தரவுகளை மையப்படுத்திய தரவுத்தளத்தில் (Centralised Database) சேமித்து வைத்துக் கொண்டு அவற்றையே பிற கணிப்பொறிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்போதும் அனைவருக்கும் ஒரேவிதமான தகவலே கிடைக்கும்.

(3) தகவல் பராமரிப்பும் பாதுகாப்பும்

ஒரு மையப்படுத்திய தரவுத்தளத்தை பிணையத்தில் பயன்படுத்துவதன் பலன்களைப் பார்த்தோம். இவ்வாறு தரவுகள் ஓரிடத்தில் இருப்பதால் அவற்றைப் பரமரிப்பதும், நிர்வகிப்பதும், பாதுகாப்பதும் எளிதாகும். அது மட்டுமின்றி வெளியார் எவரும் அத்துமீறி தகவல்களை அறிந்து கொள்வதைத் தடுக்க முடியும். போட்டி நிறுவனங்களுக்குத் தெரிந்துவிடக் கூடாத பல்வேறு தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இன்றைக்குப் பல நிறுவனங்களுக்கு உள்ளது. அத்தகைய உயிர்நாடியான தகவல்கள் பல்வேறு கணிப்பொறிகளில் சிதறிக் கிடக்கும் எனில் அவற்றைப் பாதுகாக்கும் பணி சிக்கலாகி விடும். பிணைய அமைப்பில் தகவல்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் பல்வகையான வன்பொருள், மென்பொருள் வழிமுறைகள் உள்ளன.

(4) மனித உழைப்பும் பணித்திறனும்

அலுவலகங்களை கணிப்பொறி மயமாக்கி, அலுவலகப் பணிகளைத் தானியக்கமாக்குவதால் ஏற்படும் நன்மைகளை ஏற்கெனவே ஒரு பாடத்தில் நாம் படித்திருக்கிறோம். அலுவலகங்களில், நிறுவனங்களில், பள்ளி கல்லூரிகளில், பயிற்சிக் கூடங்களில், தொழிற்சாலைகளில், இன்னும் இதுபோன்ற பல்வேறு அமைப்புகளிலும் கணிப்பொறிகளை தனித்த முறையில் பயன்படுத்தினாலே பல்வேறு பயன்கள் உள்ளன. அதேவேளையில், தனித்தியங்கும் பல கணிப்பொறிகளை பிணையத்தில் இணைத்துப் பயன்படுத்துவதால் மனித உழைப்புப் பெருமளவு மிச்சப்படுகிறது. தகவல் பரிமாற்றத்துக்கன செலவுகள் பெருமளவு குறைகின்றன. நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பணித்திறன் அதிகரிக்கிறது.

 கணிப்பொறிப் பிணையத்தை நிறுவுவது எவ்வாறு?

நம்முன்னே அடுத்திருக்கும் கேள்வி - ஒரு கணிப்பொறிப் பிணையத்தை நிறுவுவது எவ்வாறு? கணிப்பொறிகளை இணைத்து ஒரு பிணையத்தை நிறுவிடப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. சிறிய அலுவலகங்களுக்குச் செலவு குறைந்த பிணையம், பெரிய நிறுவனங்களுக்கு அதிகச் செலவில் அதிகப் பலன்களை நல்கும் பெரிய பிணையங்கள் எனப் பலவகைப் பிணைய அமைப்பு முறைகள் உள்ளன.

பத்துப் பதினைந்து கணிப்பொறிகள் செயல்படும் ஓர் அலுவலகத்தில் அவை தனித்தனியே இயங்கிவரும் அதேவேளையில் தேவையானபோது பிற கணிப்பொறிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் தரவும் பெறவும் செலவு குறைந்த பிணையத்தை நிறுவிக் கொள்ள முடியும். பிற கணிப்பொறிகள் அனுமதி தந்தால் மட்டுமே அவற்றின் தகவலைப் பெறமுடியும் என்கிற பாதுகாப்பும் உண்டு. பிற கணிப்பொறிகளைக் கட்டுப்படுத்துகின்ற மையக் கணிப்பொறி எதுவும் கிடையாது. பிணையத்தை நிர்வகிக்கத் தனியாகப் ‘பிணைய நிர்வாகி’ (Network Administrator) தேவையில்லை. அனைத்துக் கணிப்பொறிகளும் நிகர்உரிமை பெற்றவையாக விளங்கும். இத்தகைய பிணைய அமைப்பு ‘நிகர்களின் பிணையம்’ (Peer-to-Peer Network) எனப்படுகிறது.

ஒரு மையக் கணிப்பொறியுடன் நூற்றுக் கணக்கான கணிப்பொறிகளைப் பிணைத்து மையக் கணிப்பொறியின் கட்டுப்பாட்டில் பிற கணிப்பொறிகள் செயல்படுமாறு அமைக்க முடியும். தரவுத்தளம் மற்றும் பிற பயன்பாட்டு மென்பொருள்கள் அனைத்தும் மையக் கணிப்பொறியிலேயே இருக்கும். பிற கணிப்பொறிக்கு அதிக அளவு சுதந்திரம் கிடையாது. குறைந்த அளவு உரிமைகள், கடமைகள் மட்டுமே. மிகவும் பாதுகாப்பான நடைமுறைப் பணிகளுக்கு இப்பிணைய முறை உகந்ததாகும். இத்தகைய பிணைய அமைப்பு ‘பல்பயனர் பிணையம்’ (Multi-user Network) எனலாம்.

இந்த இரண்டு முறைகளும் கலந்த மூன்றாவது முறையிலும் கணிப்பொறிப் பிணையத்தை நிறுவ முடியும். பிணையத்திலுள்ள அனைத்துக் கணிப்பொறிகளும் தனித்தியங்கும் சுதந்திரம் பெற்றவை. தனிப்பட்ட தகவல்களையும், தனிப்பட்ட தேவைகளுக்கான பயன்பாட்டு மென்பொருள்களையும் கொண்டிருக்கும். அதே வேளையில் அவை ஒரு மையக் கணிப்பொறியுடன் இணைக்கப் பட்டிருக்கும். அதில் முக்கியமான தரவுத்தளங்கள், பொதுவான பயன்பாட்டு மென்பொருள்கள் நிறுவப் பட்டிருக்கும். பிற கணிப்பொறிகள் மையக் கணிப்பொறியை அணுகித் தகவல்கள் பெறலாம், தரலாம். இதற்கான அனுமதியை பிணைய நிர்வாகி முன்பே வழங்கியிருக்க வேண்டும். அனுமதி இல்லாத எவரும் பிணையத்தில் நுழைய முடியாது. இன்றைக்குப் பெரும்பாலான இடங்களில் இதுபோன்ற பிணைய அமைப்பு முறையே உள்ளது. இத்தகைய பிணைய அமைப்பு ‘நுகர்வி/வழங்கிப் பிணையம்’ (Client/Server Network) எனப்படுகிறது.

ஒரு கணிப்பொறிப் பிணையம் என்பது ஒரே அறையில் செயல்படும் சில கணிப்பொறிகளை அல்லது ஒரு கட்டடத்தில் செயல்படும் பல கணிப்பொறிகளை இணைப்பதாய் இருக்கலாம். ஒரு வளாகத்தில் பல கட்டடங்களில் செயல்படும் நூற்றுக்கு மேற்பட்ட கணிப்பொறிகளை ஒரு பிணையத்தில் இணைக்கலாம். ஒரு நகரத்தில் பல்வேறு கிளை அலுவலகங்களில் செயல்படும் கணிப்பொறிகளை ஒரே பிணையத்தில் இணைத்துப் பணியாற்ற முடியும். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் ஒவ்வொரு கிளையிலும் செயல்படும் பிணையங்களை இணைத்து ஒற்றைப் பெரும் பிணையமாக உருவாக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களின் தனித்தனிப் பிணையங்களிடையே இணைப்புகளை ஏற்படுத்தி ஒரு கூட்டுப் பிணையத்தை நிறுவலாம். ஒவ்வொரு நிறுவனப் பிணையத்துக்கும் தேவையான உரிமைகளையும் சலுகைகளையும் வரையறுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக உலகெங்கும் பரந்து கிடக்கும் பல்லாயிரக் கணக்கான பிணையங்களை இணைத்து ஒரு மாபெரும் பிணையத்தை உருவாக்க முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், பிணையத்தில் இணைக்கப்படாத ஒரு தனித்த கணிப்பொறி, இணக்கியின் (Modem) உதவியுடன் தொலைபேசி இணைப்பு மூலமாக உலகளாவிய பிணையத்தோடு தொடர்பு கொண்டு அதன் பலன்களைப் பெற முடியும்.

பிணைய இணைப்புமுறை (Network Topology)

ஒரு பிணையத்தில் கணிப்பொறிகளை ஒன்றோடொன்று பிணைக்கின்ற முறை ‘இணைப்புமுறை’ (Topology) எனப்படுகிறது. பிணைய இணைப்புமுறை பலவகைப்படும்.

இவ்வாறு ஒரு நீண்ட வடத்தில் கணிப்பொறிகளை ஆங்காங்கே இணைக்கும் முறை ‘பாட்டை இணைப்புமுறை’ (Bus Topology) எனப்படும்.

இவ்வாறு இரு முனைகளும் பிணைக்கப்பட்ட வளைய வடிவிலான வடத்தில் கணிப்பொறிகளை இணைக்கும் முறை ‘வளைய இணைப்புமுறை’ (Ring Topology) எனப்படும்.

இவ்வாறு ஒரு மையப்புள்ளியான குவியத்தில் (Hub) ஆரங்களைப்போல் பிரியும் வடங்களில் கணிப்பொறிகளை இணைப்பது ‘நட்சத்திர இணைப்புமுறை’ (Star Topology) எனப்படும்.

இவ்வாறு ஒவ்வொரு கணிப்பொறியையும் மற்ற எல்லாக் கணிப்பொறிகளுடனும் குறுக்கும் நெடுக்குமாய்ப் பிணைக்கும் முறை ‘வலைப்பின்னல் இணைப்புமுறை’ (Mesh Topology) எனப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புமுறைகள் கலந்த இணைப்புமுறை ‘கலப்பு இணைப்புமுறை’ (Hybrid Topology) ஆகும். இவைதவிர ‘மரவுரு இணைப்புமுறை’ (Tree Topology) ‘படிநிலை இணைப்புமுறை’ (Hierarchial Topology), ‘கலநிலை இணைப்புமுறை’ (Cellular Topology) ஆகிய இணைப்புமுறைகளும் உள்ளன.

[பாடம்-1 முற்றும்]

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்