மு.சிவலிங்கம் வலையகம்

கணிப்பொறிப் பிணையப் பாடங்கள்
 

பாடம்-6
கணிப்பொறிப் பிணையங்களின் வகைப்பாடு
(Classification of Computer Networks)

கணிப்பொறிப் பிணையங்களை இப்படித்தான் வகைப்படுத்த வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட வழிமுறை எதுவும் கிடையாது. புரிந்து கொள்வதற்கு எளிமையான முறையிலே எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்திக் கொள்ளலாம். ஒரு வகைப்பாட்டில் இடம்பெறும் குறிப்பிட்ட பிணைய வகை வேறொரு வகைப்பாட்டிலும் இடம்பெற வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாகப் பிணையக் கட்டுமான அடிப்படையில் வகைப்படுத்தப்படும் ‘நிகர்களின் பிணையம்’ (Peer-to-Peer Network) செயற்பரப்பு அடிப்படையில் வகைப்படுத்தப்படும் குறும்பரப்புப் பிணையமாக (Local Area Network) இருக்க முடியும்.

வகைப்பாட்டின் அடிப்படைகள்

கணிப்பொறிப் பிணையங்களை பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்த முடியும். ஒரு பிணையம் ஓர் அறைக்குள் செயல்படுகிறதா, ஒரு கட்டடம், ஒரு வளாகத்தில் செயல்படுகிறதா, ஒரு நகரம், ஒரு நாடு அல்லது உலகளாவிய அளவில் செயல்படுகிறதா என்கிற அடிப்படையில் வகைப்படுத்த முடியும். இதனை செயற்பரப்பு (Area) அடிப்படையிலான வகைப்பாடு என்கிறோம். அதுபோலவே ஒரு பிணையத்தில் கணிப்பொறிகளை ஒன்றோடொன்று இணைக்கும் முறை (Topology) வேறுபடலாம். ஒரே முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும் பிணையத்தில் இடம்பெறும் மையக் கணிப்பொறிக்கும் கிளைக் கணிப்பொறிகளுக்கும் இடையேயான உறவுமுறையில் வேறுபடுகின்ற கட்டுமானத்தைக் (Architecture) கொண்டிருக்கலாம். கணிப்பொறிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படும் ஊடகத்தின் (Medium) அடிப்படையில் பிணையங்களை வகைப்படுத்தலாம்.

தற்போது பல நிறுவனங்கள் தத்தம் பிணையங்களை இணையத்தின் ஓர் அங்கமாக மாற்றிவிட்டனர். எனினும் அவர்கள் ஈடுபட்டுள்ள வணிகத்தின் அடிப்படையில் அப்பிணையங்களை அணுக அனுமதிக்கப்படும் பயனர்கள் வேறுபடலாம். அதாவது, வலைத் தொழில்நுட்ப (Web Technology) அடிப்படையில் பிணையங்களின் வகையினம் வேறுபடலாம். இவ்வாறு செயற்பரப்பு, இணைப்புமுறை, கட்டுமானம், ஊடகம், வலைத் தொழில்நுட்பம் இவற்றின் அடிப்படையில் வேறுபடும் பிணைய வகைப்பாடுகளையும் அவற்றில் அடங்கிய வகையினங்களையும் விரிவாகக் காண்போம்.

I. செயற்பரப்பு (Functional Area) அடிப்படையில்

ஒரு கணிப்பொறிப் பிணையம் சிறியதா, பெரியதா என்பது அப்பிணையத்தில் எத்தனை கணிப்பொறிகள் பிணைக்கப்பட்டுள்ளன என்பதைக் கொண்டோ, அப்பிணையம் எந்தப் பரப்புவரை விரிந்துள்ளது என்பதைக் கொண்டோ முடிவு செய்யலாம். பெரும்பாலும் இந்த இரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததே. அதாவது குறைந்த எண்ணிக்கையிலான கணிப்பொறிகளைக் கொண்ட பிணையம் குறுகிய பரப்பிலேயே இயங்கும். ஏராளமான கணிப்பொறிகளைக் கொண்ட பிணையம் பெரும்பாலும் விரிந்த பரப்பில் இயங்குவதாகவே இருக்கும். இதற்கு விதிவிலக்கான பிணையங்கள் மிகவும் அரிதே.

செயற்பரப்பின் அடிப்படையில் கணிப்பொறிப் பிணையங்களை வகைப்படுத்தலே முதன்மையான வகைப்பாடாகக் கருதப்படுகிறது. பிற வகைப்பாடுகளைக் கணிப்பொறி வல்லுநர்கள் குறிப்பிட்ட தருணங்களில் மட்டுமே மேற்கொள்கின்றனர். மேலும் எந்தவொரு வகைப்பாட்டின் கீழும் இடம்பெறும் ஒரு பிணைய வகையினத்தைப் பெரும்பாலும் செயற்பரப்பின் அடிப்படையிலான வகைப்பாட்டில் ஓர் உள்-வகையினமாக (Sub-Category) வகைப்படுத்திவிட முடியும்.

கணிப்பொறிப் பிணையங்களைச் செயற்பரப்பின் அடிப்படையில் ஆறு வகையாகப் பிரிக்க முடியும்.

(1) தனிப்பரப்புப் பிணையம் (Personal Area Network - PAN)
(2) குறும்பரப்புப் பிணையம் (Local Area Network - LAN)
(3) வளாகப் பரப்புப் பிணையம் (Campus Area Network - CAN)
(4) மாநகர்ப் பரப்புப் பிணையம் (Metro Area Network - MAN)
(5) விரிபரப்புப் பிணையம் (Wide Area Network - WAN)
(6) உலகளாவிய பிணையம் (Global Area Network - GAN)

(1) தனிப்பரப்புப் பிணையம் (Personal Area Network - PAN)

ஒருவரின் தனிப்பட்ட கணிப்பொறிச் சாதனங்களை இணைக்கின்ற பிணையம். ஒரு வீட்டிற்குள் அல்லது ஓர் அறைக்குள் செயல்படுவது. ஒருவரின் மேசைக் கணிப்பொறி, மடிக் கணிப்பொறி, கையகக் கணிப்பொறி, பீடிஏ (PDA - Personal Digital Assistant), அச்சுப்பொறி, படப்பிடிப்பி, செல்பேசி போன்ற சாதனங்களைக் கொண்டிருக்கும். கம்பியிணைப்பில் அல்லது கம்பியில்லா இணைப்பில் செயல்படலாம். கம்பியிணைப்புப் பிணையம் எனில் கணிப்பொறிச் சாதனங்கள் ஒரு குவியத்தில் (Hub), ஈதர்நெட் கேட்-5 வகை வடத்தால் இணைக்கப்பட்டிருக்கும். கம்பியில்லாப் பிணையம் எனில் பெரும்பாலும் ‘இர்டா’ அல்லது ‘புளுடூத்’ தொழில்நுட்பத்தில் செயல்படுவதாக இருக்கும்.

அகல்கற்றை இணைய இணைப்புக்குப் பயன்படுத்தப்படும் பல்துறை இணக்கி (Multi-port Modem) அல்லது கம்பியில்லா இணக்கியையே (Wireless Modem) கணிப்பொறிச் சாதனங்களை இணைக்கும் மையக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வழங்கி அல்லது மையக் கணிப்பொறி என எதுவும் கிடையாது. அனைத்துக் கணிப்பொறிகளும் சம உரிமை கொண்ட ‘நிகர்களின்’ பிணையமாக இருக்கும். 10 மீட்டர் தொலைவுவரை கணிப்பொறிகள் செயல்படும்.

(2) குறும்பரப்புப் பிணையம் (Local Area Network - LAN)

பல பணிப்பிரிவுகளைக் கொண்ட ஓர் அலுவலகம் அல்லது ஒரு நிறுவனம் ஒரு கட்டடத்தில் பல அறைகளில் அல்லது பல தளங்களில் செயல்படலாம். அங்கே பல்வேறு பணிப்பிரிவுகளில் செயல்படும் கணிப்பொறிகளை இணைத்து உருவாக்கப்படும் பிணையம் குறும்பரப்புப் பிணையம் ஆகும். கணிப்பொறிகளைப் பிணைக்க ஈதர்நெட் கேட்-5 வடங்கள், குவியம் (Hub), தொடர்பி (Switch) போன்ற பிணைய இணைப்புச் சாதனங்கள் பயன்படுத்தப்படும். இவ்வகைப் பிணையத்தின் ஒருபகுதியோ அல்லது முழுமையுமோ கம்பியில்லா இணைப்பிலும் செயல்படலாம். பெரும்பாலும் நுகர்வி - வழங்கி பிணைய வகையாக இருக்கும். நிகர்களின் பிணையமாகவும் இருக்கலாம். 100 மீட்டர் தொலைவுவரை தகவல் பரிமாற்றம் சாத்தியம்.

ஒரு லேனில் கணிப்பொறிகள் செயல்படும் தொலைவுக்குக் கறாரான வரையறை கிடையாது. 1980-களில் ஒரு லேனில் 20 மீட்டர் வரை கணிப்பொறிகள் இணைக்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சிக்குப்பின் இன்றைக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கணிப்பொறியைக்கூட லேனில் இணைக்கின்றனர். லேன் ஒரே கட்டடத்தில் அடங்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. பெரும்பகுதி ஒரு கட்டடத்திலும் ஒன்றிரண்டு கணிப்பொறிகள் சிலநூறு மீட்டர் தொலைவிலுள்ள இன்னொரு கட்டடத்திலும் செயல்பட முடியும். ஆனால் இவற்றையெல்லாம் விதிவிலக்குகளாகவே கொள்ள வேண்டும்.

(3) வளாகப் பரப்புப் பிணையம் (Campus Area Network - CAN)

பல கட்டடங்களை உள்ளடக்கிய, சில கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஒரு பரந்த வளாகத்தில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் பிணையம் இந்த வகையைச் சார்ந்தது. பெரும்பாலும் பல லேன்களை ஒன்றிணைத்த பிணையமாக இருக்கும். சென்னையிலுள்ள ஐஐடீ, அண்ணா பல்கலைக் கழக வளாகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வளாகத்துக்குள் பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் ஒரு லேன் பிணையம் செயல்படும். இந்த லேன்கள் தொடர்பி (Switch), இணைவி (Bridge), திசைவி (Router) போன்ற பிணைய விரிவாக்கச் சாதனங்கள் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு வளாகப் பிணையம் உருவாக்கப்படுகிறது. லேன்கள் கம்பியிணைப்பு அல்லது கம்பியில்லாப் பிணையமாக இருக்கலாம். லேன்கள் மைய இணைப்புச் சாதனத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுவரை இருக்கலாம். வளாகப் பிணையங்கள் செயற்பரப்பில் லேன் அமைப்பைவிடப் பெரியவை. மாநகர்ப் பிணைய அமைப்பைவிடச் சிறியவை.

(4) மாநகர்ப் பரப்புப் பிணையம் (Metro Area Network - MAN)

ஏறத்தாழ வளாகப் பிணையங்களைப் போன்றே செயல்படக் கூடியவை. ஆனால் ஒரு வளாகத்துக்குள் அடங்கி விடாமல் ஒரு பெரிய நகர் முழுதும் பரந்து விரிந்தது. தொடர்பி, இணைவி, திசைவி போன்ற பிணைய விரிவாக்கச் சாதனங்கள் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட லேன்கள், வளாகப் பிணையங்களை உள்ளடக்கியது. நகரின் பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களில் செயல்படும் பிணையங்கள் வட்டாரத் திசைவிகளின் வழியாக தலைமை அலுவலகத்திலுள்ள ஒரு மையத் திசைவியுடன் இணைக்கப்பட்டிருக்கும். 10 கிலோமீட்டர் தொலைவுவரை செயல்படும். வளாகப் பிணையத்தை மாநகர்ப் பிணையத்தின் ஒரு வடிவமாகவும் வகைப்படுத்துவர்.

(5) விரிபரப்புப் பிணையம் (Wide Area Network - WAN)

விரிபரப்புப் பிணையம் ஒரு மாநிலம் அல்லது ஒரு நாட்டில் பல்வேறு பெருநகரங்களில் செயல்படும் லேன், கேன், மேன் பிணையங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள நகரங்களில் செயல்படும் பிணையங்களை இணைப்பதாகவும் இருக்கலாம். பிணையங்கள் திறன்மிக்க திசைவிகளால் ஒன்றிணைக்கப்படுகின்றன. விரிபரப்புப் பிணையங்கள் தகவல் போக்குவரத்துக்குப் பொதுத் தொலைதகவல் தொடர்புக் (Public Telecommunication) கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இரயில்வே, விமானப் போக்குவரத்து, வங்கி, ஆயுள் காப்பீடு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தகைய விரிபரப்புப் பிணையங்களைக் கொண்டுள்ளன. நூறு கிலோமீட்டர் முதல் சில ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு வரையிலும் தகவல் பரிமாற்றம் சாத்தியம்.

(6) உலகளாவிய பிணையம் (Global Area Network - GAN)

விரிபரப்புப் பிணையத்தின் விரிந்த வடிவமே உலகளாவிய பிணையமாகும். பல விரிபரப்புப் பிணையங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம். உலகளாவிய பொதுத் தகவல் தொடர்புக் கட்டமைப்பின் மூலம் பிணைக்கப்பட்டது. பிணைப்புகளுக்குத் திறன்மிக்க திசைவிகள், சிறப்புவகைத் திசைவிகளான நுழைவிகளும் (Gateways) பயன்படுத்தப்படுகின்றன. பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவுவரைக்கும்கூட விரிந்து பரந்திருக்கும். இன்றைய இணையமே உலகளாவிய பிணையத்துக்குச் சரியான எடுத்துக் காட்டாகும்.

II. இணைப்புமுறை (Topology) அடிப்படையில்

ஒரு பிணையத்தில் கணிப்பொறிகளை ஒன்றோடொன்று பிணைக்கின்ற ’இணைப்புமுறை’ (Topology) பல வகைப்படும். இணைப்புமுறையின் அடிப்படையில் பிணையங்களை இவ்வாறு வகைப்படுத்த முடியும்:

(1) பாட்டைப் பிணையம் (Bus Network): ஒரு நீண்ட வடத்தில் கணிப்பொறிகள் ஆங்காங்கே இணைக்கப்பட்டிருக்கும்.

(2) வளையப் பிணையம் (Ring Network): இரு முனைகளும் பிணைக்கப்பட்ட வளைய வடிவிலான வடத்தில் கணிப்பொறிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

(3) நட்சத்திரப் பிணையம் (Star Network): ஒரு மையப்புள்ளியான குவியத்தில் (Hub) ஆரங்களைப்போல் பிரியும் வடங்களில் கணிப்பொறிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

(4) வலைப்பின்னல் பிணையம் (Mesh Network): ஒவ்வொரு கணிப்பொறியும் மற்ற எல்லாக் கணிப்பொறிகளுடனும் குறுக்கும் நெடுக்குமாய்ப் பிணைக்கப்பட்டிருக்கும்.

(5) கலப்பினப் பிணையம் (Hybrid Network): ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புமுறைகள் கலந்த பிணையங்கள்.

இவைதவிர ’மரவுரு இணைப்புமுறை’ (Tree Topology), ‘படிநிலை இணைப்புமுறை’ (Hierarchial Topology), ‘கலநிலை இணைப்புமுறை’ (Cellular Topology) ஆகிய இணைப்புமுறைகளும் உள்ளன. தற்காலத்தில் நட்சத்திர இணைப்புமுறை மற்றும் படிநிலை இணைப்புமுறையிலான பிணைய வகைகளே பெருமளவு பயன்பாட்டில் உள்ளன.

III. கட்டுமான (Architecture) அடிப்படையில்

ஒரு பிணையத்திலுள்ள மையக் கணிப்பொறிக்கும் கிளைக் கணிப்பொறிகளுக்கும் இடையே உள்ள உறவுமுறை, பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தற்காலக் கணிப்பொறிப் பிணையங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

(1) நுகர்வி - வழங்கிப் பிணையம் (Client - Server Network)

வழங்கி இயக்க முறைமை, தரவுத்தளம், பயன்பாட்டு மென்பொருள்களைக் கொண்ட மையக் கணிப்பொறியையும், சொந்தக் கணிப்பொறி இயக்க முறைமை, பயன்பாட்டு நுகர்வி மென்பொருள் கூறுகளைக் கொண்ட கிளைக் கணிப்பொறிகளையும் கொண்ட பிணைய அமைப்புமுறை. வேலைப்பளுவை நுகர்வியும் வழங்கியும் பகிர்ந்து கொள்கின்றன.

(2) நிகர்களின் பிணையம் (Peer-to-peer Network)

தனித்துச் செயல்படும் சொந்தக் கணிப்பொறிகளைக் கொண்டது. மையக் கணிப்பொறி, வழங்கிக் கணிப்பொறி என எதுவும் கிடையாது. அனைத்துக் கணிப்பொறிகளும் சம உரிமையோடு பிணையத்தில் பங்கு கொள்கின்றன. பயனர்கள் வன்பொருள், மென்பொருள் வளங்களைத் தமக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.

(3) பல்லடுக்குப் பிணையம் (Multitier Network)

நுகர்வி - வழங்கி அமைப்பு முறையின் மேம்பட்ட வடிவம். வழங்கி இயக்க முறைமை, தரவுத்தளம், பயன்பாட்டு மென்பொருள்களுக்கென தனித்தனி வழங்கிக் கணிப்பொறிகளைக் கொண்டது.

IV. ஊடக (Medium) அடிப்படையில்

தகவல் பரிமாற்ற ஊடக அடிப்படையில் பிணையங்களை இருபெரும் பிரிவுகளில் அடக்கலாம்:

(1) கம்பியிணைப்புப் பிணையங்கள் (Wired Networks)
(2) கம்பியில்லாப் பிணையங்கள் (Wireless Networks)

கம்பியிணைப்பு ஊடகங்களாக, (i) இணையச்சு வடம் (Co-axial Cable) (ii) முறுக்கிய இணை வடம் (Twisted Pair Cable) (iii) ஒளியிழை வடம் (Optical Fibre Cable) ஆகியவை பயன்படுத்தப்பட்ட போதிலும், கேட்-5 எனப்படும் முறுக்கிய இணை வடங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளும் ‘ஈதர்நெட்’ பிணையங்களும், ஒளியிழை வடங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளும் அதிவேக ஒளியிழைப் பிணையங்களுமே தற்காலத்தில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளன.

கம்பியில்லா தகவல் தொடர்புக்கு, (i) வானலை (Radio-wave) (ii) அகச்சிவப்புக் கதிர் (Infrared Ray) (iii) நுண்ணலை (Microwave) (iv) லேசர் கதிர் (Laser Ray) ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும் என்கிற போதும், அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தும் ‘இர்டா’ (IrDA), வானலைகளைப் பயன்படுத்தும் ‘புளூடூத்’ (BlueTooth), ‘வைஃபி’ (Wi-Fi), ‘வைமாக்ஸ்’ (WiMAX) ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் செயல்படும் கணிப்பொறிப் பிணையங்களே பயன்பாட்டில் உள்ளன.

கம்பியில்லாப் பிணையத் தகவல் பரிமாற்றத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இவை தகவல் தொடர்பின் தொலைவு, பரிமாற்ற வேகம், கையாளும் தரவுகளின் அளவு, பயணிக்கும் பாதை ஆகியவற்றில் வேறுபடுகின்றன. இத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் பிணையங்களும் வேறுபடுகின்றன. எனினும் கம்பியிணைப்பில்லாப் பிணையங்கள் கம்பியில்லா பேன், கம்பியில்லா லேன், கம்பியில்லா மேன், கம்பியில்லா வேன் எனச் செயற்பரப்பின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன.

(1) கம்பியில்லா பேன் (Wireless PAN)

’பேன்’ எனப்படும் தனிப்பரப்புப் பிணையத்தின் அமைப்பு பற்றி ஏற்கெனவே அறிவோம். அப்பிணையம் முழுக்கவும் கம்பியிணைப்பின்றிச் செயல்படும்போது அதனைக் ’கம்பியில்லா பேன்’ என அழைக்கிறோம். இத்தகு பிணையங்களில் தகவல் பரிமாற்றத்துக்கு இர்டா (IrDA), புளூடூத் (Bluetooth), கம்பியில்லா யுஎஸ்பி (Wireless USB), மீவிரி கற்றை (Ultra Wideband) போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இர்டாவின் அகச்சிவப்புக் கதிர்கள் நேர்கோட்டிலேயே பயணிக்கும். இடைத்தடுப்புகளை ஊடுருவிச் செல்ல இயலாது. எனவே ஒரே அறைக்குள் மேசைக் கணிப்பொறி, மடிக் கணிப்பொறி, கையகக் கனிப்பொறி, பீடிஏ ஆகியவற்றை இணைத்துச் செயல்படும் தனிப்பரப்புப் பிணையத்துக்கே பயன்படுத்த முடியும். புளூடூத்தின் வானலை இடைத்தடுப்புகளை ஊடுருவியும் பயணிக்கும். அடுத்தடுத்த அறைகளிலுள்ள கணிப்பொறிகளையும் இணைக்கலாம். 30 மீட்டர் தொலைவுவரை தகவல் பரிமாற்றம் சாத்தியம்.

மிகப்பெரிய கோப்புகளைப் பிணையத்தில் பரிமாறிக் கொள்ள புளூடூத் ஏற்றதல்ல. அத்தகு தேவைக்குக் ’கம்பியில்லா யுஎஸ்பி’ பயன்படுகிறது. தொலைவு குறையக் குறையத் தகவல் பரிமாற்ற வேகம் அதிகரிக்கும். குறைந்த தொலைவு அதிவேகத் தகவல் பரிமாற்றப் பிணையங்களில் மீவிரி கற்றைத் தொழில்நுட்பம் பயன்படுகிறது. குறுநேர (நானோ வினாடி அல்லது அதற்கும் குறைவான) குறைதிறன் உயர் அதிர்வலைத் துடிப்புகளைப் பயன்படுத்தித் தகவல் பரிமாறப்படுகிறது. கம்பியில்லா யுஎஸ்பி, மீவிரி கற்றையின் ஒரு வடிவமே.

(2) கம்பியில்லா லேன் (Wireless LAN)

கம்பியில்லாக் குறும்பரப்புப் பிணையங்களில் ‘வைஃபி’ (Wi-Fi : Wireless Fidelity என்பதன் சுருக்கம்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்வதெனில் வைஃபித் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த கணிப்பொறிப் பிணையத்தைக் கம்பியில்லா லேன் என அழைக்கிறோம். வானலை மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. பெரும்பாலும் விமான முனையங்கள், இரயில் நிலையங்கள், நட்சத்திர ஓட்டல்கள், பெரிய வணிக வளாகங்கள், கல்லூரி வளாகங்கள் இவற்றில் கூடுவோர் தமது மடிக் கணிப்பொறி, கையகக் கணிப்பொறி மூலம் இணையத்தில் தொடர்பு கொண்டு இணையச் சேவைகளைப் பெறவும், இணையம் வழியாகத் தத்தமது நிறுவனப் பிணையங்களைத் தொடர்பு கொண்டு அலுவலகப் பணிகளைக் கவனிக்கவும் வைஃபித் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

(3) கம்பியில்லா மேன் (Wireless MAN)

வைமாக்ஸ் (WiMAX - Worldwide Interoperability for Microwave Access) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த பிணையங்கள் ’கம்பியில்லா மேன்’ என அழைக்கப்படுகின்றன. நுண்ணலை மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. மேன் பிணையங்களில் வைமாக்ஸ் கம்பியில்லா அகல்கற்றை (Wireless Broadband) இணைப்பினை வழங்குகிறது. இப்பிணையத்தின் பயனர்கள் கம்பியிணைப்பின்றியே அகல்கற்றை இணைய இணைப்பை அனுபவிக்க முடியும். வைமாக்ஸ் 50 கிலோமீட்டர் வரை செயல்படும். பல வைஃபி பிணையங்களை இணைக்கின்ற கம்பியில்லாப் பின்புலத் தொழில்நுட்பமாகவும் (Wireless Backhaul Technology) விளங்குகிறது.

(4) கம்பியில்லா வேன் (Wireless WAN)

ஐஇஇஇ 802.16இ மற்றும் ஐஇஇஇ 802.20 ஆகிய தரப்பாடுகளின் அல்லது தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த பிணைய அமைப்பு ‘கம்பியில்லா விரிபரப்புப் பிணையங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை வைமாக்ஸின் மேம்பட்ட வடிவங்கள் எனலாம். வைமாக்ஸ் பிணையங்களில் ஓரிடத்தில் நிலையாக இருக்கும் பயனர்களே அகல்கற்றை இணைய இணைப்பைப் பெற முடியும். ஆனால் கம்பியில்லா வேன் பிணையத்தின் பயனர்களோ நடமாடும்போதும், பயணிக்கும்போதும் அகல்கற்றை இணைய இணைப்பைப் பெற முடியும். ஐஇஇஇ 802.16இ தரப்பாடு நடமாடும் பயனர்களுக்கும், ஐஇஇஇ 802.20 தரப்பாடு கார், இரயில் போன்ற வாகனங்களில் வேகமாகப் பயணிக்கும் பயனர்களுக்கும் உரியது. மணிக்கு 250 கி.மீ. வேகப் பயணத்திலும் அகல்கற்றை இணைப்பைப் பெற முடியும்.

V. வலைத் தொழில்நுட்ப (Web Technology) அடிப்படையில்

வைய விரிவலைத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிணையங்களை இப்பிரிவில் சேர்க்கிறோம். வைய விரிவலை பற்றி ஏற்கெனவே நாம் அறிவோம். வலை வழங்கி (Web Server) எனப்படும் மையக் கணிப்பொறியில், தகவல்கள் மீவுரை மொழியில் உருவாக்கப்பட்ட வலைப் பக்கங்களில் சேமிக்கப்பட்டிருக்கும். தனித்தியங்கும் கிளைக் கணிப்பொறிகள் வலை உலாவி (Web Browser) என்னும் நுகர்வி மென்பொருளின் மூலம் வலை வழங்கியிலுள்ள தகவல்களைப் பெறும். வழங்கியில் தரவுத்தளங்களில் சேமிக்கப்பட்ட தகவல்களையும் நுகர்விகள் வலைப்பக்கங்கள் மூலமாகவே பெறும். இத்தகைய பிணையங்களை அணுக அனுமதிக்கப்படும் பயனர்களின் அடிப்படையில் இவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

(1) அக இணையம் (Intranet)

ஒரு நிறுவனத்தின் அகச் செயல்பாடுகளுக்காக அமைக்கப்படுவது. அந்த நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே அணுக முடியும். வெளியார் எவரும் இப்பிணையத்தை அணுகித் தகவல் எதையும் பெற முடியாது.

(2) புற இணையம் (Extranet)

நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமின்றி, அந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள்களை வழங்குவோர், அந்த நிறுவனத்தின் பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் முகவர்கள், அதன் வாடிக்கையளர்கள் ஆகியோர் அணுகுவதற்கு அனுமதி தரப்படும். அந்நிறுவனத்தோடு தொடர்பில்லாத பொதுமக்கள் அணுக இயலாது.

(3) பொது இணையம் (Internet)

பொது இணையம் என்பது இணையத்தையே குறிக்கிறது. எந்த நிறுவனத்துக்கும் சொந்தமானதல்ல. இணைய இணைப்புள்ள எவரும் அணுகித் தகவல் பெறமுடியும்.

VI. தனிச்சிறப்புப் பிணையங்கள்

தனிச்சிறப்புப் பிணையங்களை ஏற்கெனவே நாம் பார்த்த பிணைய வகைகளுள் ஒன்றாக வகைப்படுத்த முடியும் என்றாலும் அவற்றின் பயன்பாடு அல்லது செயல்பாட்டின் அடிப்படையில் தனிச்சிறப்பான பிணையம் என வகைப் படுத்துகிறோம். இவ்வாறு தனிச்சிறப்பான பயன்பாடு அல்லது செயல்பாடு கொண்ட பிணையங்கள் பல உள்ளன. அவற்றுள் (1) மதிப்பேற்று பிணையம் (Value Added Network) (2) மெய்நிகர் தனியார் பிணையம் (Virtual Private Network) (3) சேமிப்பகப் பிணையம் (Storage Area Network) என்னும் மூன்று பிணைய வகைகளைப் பற்றி இப்பாடப் பிரிவில் சுருக்கமாகக் காண்போம்.

(1) மதிப்பேற்று பிணையம் (Value Added Network - VAN)

’வான்’ (VAN) என அழைக்கப்படும் மதிப்பேற்று பிணையங்கள் கட்டமைப்பு முறையில் விரிபரப்புப் பிணையத்தை (WAN) ஒத்தவை. விரிபரப்புப் பிணையத்தின் முதுகெலும்பான தகவல் தொடர்புக் கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கும். அதாவது ஒரு நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும் வண்ணம் ஒளியிழை வடங்கள், நுண்ணலை போன்ற தகவல் தொடர்பு ஊடகங் களையும், பிணையத் தகவல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் திறன்மிக்க திசைவிகளையும் (Routers) கொண்ட பிணையக் கட்டமைப்பை அரசு அல்லது தனியார் நிறுவனம் நிறுவியிருக்கும். இத்தகைய விரிபரப்புப் பிணையக் கட்டமைப்பே ‘மதிப்பேற்று பிணையம்’ என்று அழைக்கப்படுகிறது.

தம் நிறுவனச் செயல்பாடுகளுக்காக ஒரு விரிபரப்புப் பிணையத்தை நிறுவ வேண்டிய தேவையுடைய எந்தவொரு நிறுவனமும் மேற்கண்ட மதிப்பேற்று பிணையத்தை உரிய கட்டணம் செலுத்தித் தம் நிறுவனப் பிணையத் தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். தனியாக ஒரு விரிபரப்புப் பிணையத்தை நிறுவிப் பராமரிக்க ஆகும் செலவைவிட மதிப்பேற்று பிணையத்துக்காக ஆகும் கட்டணம் மிகக் குறைவாகவே இருக்கும். மதிப்பேற்று பிணையத்தில் உறுப்பு நிறுவனங்கள் புதிதாகச் சேரச் சேர அதன் மதிப்பு கூடுகிறது. எனவே இப்பெயர்.

ஒரு மதிப்பேற்று பிணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் இருவேறு நிறுவனங்கள் தமக்குள்ளே தகவல் பரிமாறிக்கொள்ள முடியும். தகவல்கள் அனைத்தும் மின்னணு வடிவில் மிகவும் பாதுகாப்பாகப் பரிமாறிக் கொள்ளப்படும். இரு நிறுவங்களுக்கிடையே விலைப்பட்டியல் (Quotation), கொள்முதல் கோரிக்கை (Purchase Order), விலைச்சிட்டை (Invoice), வினியோகச் சிட்டை (Delivery Challan), ஏற்புச் சான்று (Acknowledgement) மட்டுமின்றி, பணம் செலுத்துகையும் (Payment) மின்னணுத் தகவலாக மதிப்பேற்று பிணையம் வழியாகவே நடைபெற்று முடிந்துவிடும்.

வணிக நடைவடிக்கைகளில் கால விரையம் பெருமளவு குறைக்கப்படுகிறது. தட்டச்சிட்டுத் தாள்வழிப் பரிமாறுவதில் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன. பணப் பரிமாற்றத்தில் ஏற்படும் முறைகேடுகள் களையப்படுகின்றன. ‘மின்வணிகம்’ (E-Commerce) தோன்றி வளர்ந்தது மதிப்பேற்று பிணையங்கள் வழியாகத்தான் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தகவலாகும். மின்வணிகம் பற்றிப் பின்வரும் பாடத்தில் விரிவாகப் படிப்போம்.

(2) மெய்நிகர் தனியார் பிணையம் (Virtual Private Network - VPN)

தம் நிறுவனச் செயல்பாடுகளுக்காக ஒரு பிணையத்தை அமைக்க விரும்பும் நிறுவனம் மூன்று வழிகளில் அதனை நிறுவலாம்:

(1) தன் சொந்தப் பிணையக் கட்டமைப்புகளை (திசைவிகள், தகவல் தொடர்பு ஊடகங்கள்) ஏற்படுத்திக் கொள்ளலாம். செயற்பரப்புக் குறைவான லேன் அமைப்பெனில் இது எளிது. நாடு முழுக்கப் பரந்த விரிபரப்புப் பிணைய அமைப்பெனில் செலவு மிகவும் அதிகமாகும்.

(2) பல நகரங்களில் விரிந்த விரிபரப்புப் பிணையம் எனில் மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும் மதிப்பேற்று பிணையத்தில் உறுப்பினர் அல்லாத நிறுவனங்களோடும் தகவல் தொடர்பு கொள்ள வேண்டிய பிணைய அமைப்பை நிறுவுவது இயலாமல் போய்விடும். உலகம் முழுக்கப் பரந்த ஒரு பிணைய அமைப்பை மதிப்பேற்று பிணையம் வழியே அமைப்பது சாத்தியமில்லை.

(3) இணையம் என்பது உலகம் முழுக்கப் பரந்து கிடக்கிறது. அந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்துக்கான பிணையத்தை மிக எளிதாக நிறுவிட முடியும். நிறுவனத்துக்கென ஒரு வலையகம் (Website) நிறுவிப் பராமரித்தால் போதும். பிணையத்தின் பயனர்கள் எவரும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இணைய இணைப்பு மூலம் நிறுவனப் பிணையத்தை அணுக முடியும். கடவுச்சொல் மூலம் பயனர் அல்லாதோர் பிணையத்தை அணுக முடியாமல் தடுக்க முடியும்.

மதிப்பேற்று பிணையம் அல்லது இணையக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு அமைக்கப்படும் ஒரு தனியார் நிறுவனப் பிணையத்தை ‘மெய்நிகர் தனியார் பிணையம்’ என்று அழைக்கிறோம். பலருக்கும் பொதுவான பிணையக் கட்டமைப்பில் செயல்படுவதால் அதனை மெய்யான பொருளில் ’தனியார்’ (Private) பிணையமாகக் கருத முடியாது. ஆனாலும் பிணையத்தைப் பயனர் அல்லாதோர் எவரும் அணுக முடியாது என்பதால் அது தனியார் பிணையமே. ’மெய்நிகர்’ (Virtual) ‘தனியார்’ (Private) பிணையம் என்ற பெயருக்கான காரணம் இப்போது புரிகிறதா?

இணையம் வழியான மெய்நிகர் தனியார் பிணையங்களை நிறுவுவதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. செலவு மிகவும் குறைவு. தேவையான போது பிணையத்தை விரிவாக்குவதும் எளிது. ஆனால் மிகவும் பாதுகாப்புக் குறைவானது. இணையம் ஒரு திறந்த பிணையம். எனவே தீங்கெண்ணம் கொண்ட அத்துமீறிகள் (Hackers) பிணையத்தின் உள்ளே நுழைந்து பிணையத்துக்குக் கேடு விளைவிக்கவும், நிறுவனத் தகவல்களைக் களவாடவும் வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பணப் பரிமாற்றம் நடைபெறும் பிணையங்களுக்கு ஆபத்து அதிகம். எனவே இத்தகைய பிணையங்களைப் பாதுகாக்க தனிச்சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகு பாதுகாப்புக்குத் ’தீச்சுவர்த் தொழில்நுட்பம்’ (Firewall Technology) பயன்படுகிறது. இன்றைக்கு ஏராளமான நிறுவனங்கள் இத்தகைய பாதுகாப்புடைய மெய்நிகர் தனியார் பிணையங்களைக் கொண்டுள்ளன.

(3) சேமிப்பகப் பிணையம் (Storage Area Network - SAN)

கருத்துரு அடிப்படையில் இது மதிப்பேற்று பிணையம் போன்றதே. மிகப்பெரிய நிறுவனங்கள் ஏராளமான தரவுகளைச் சேமித்துப் பராமரிக்க வேண்டியிருக்கும். தரவுச் சேமிப்பு சாதனங்கள் மற்றும் அவற்றைக் கையாளும் மென்பொருள்களைப் பழுதின்றிப் பராமரிப்பது கடினமான பணியாகும். அதற்கான செலவும் அதிகம். கணிப்பொறித் தகவல்கள் மின்காந்த வட்டுகள், மின்காந்த நாடாக்கள், ஒளி வட்டுகளில் சேமிக்கப்படுகின்றன என்பதை அறிவீர்கள். மிக அதிகமான தகவல்கள் எனில் ஒரு வட்டு அல்லது ஒரு நாடா போதாது. வட்டு அணிகள் (Disk Arrays), நாடா நூலகங்கள் (Tape Libraries), ஒளிவட்டுப் பெட்டிகள் (Optical Jukeboxes) அடங்கிய தனிச்சிறப்பான சேமிப்புக் கிடங்குகளும், பிணையக் கணிப்பொறிகள் அத்தரவுகளைக் கையாளத் தனிச்சிறப்பான மென்பொருளும் கொண்ட ஒரு சேமிப்பகக் கட்டமைப்புத் தேவை. இக்கட்டமைப்பே ‘சேமிப்பகப் பிணையம்’ (Storage Area Network - SAN) என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய தனிச்சிறப்பான சேமிப்பகக் கட்டமைப்புகளைப் பல தனியார் நிறுவனங்கள் அமைத்துப் பராமரித்து வருகின்றன. அதிக அளவில் தரவுகளைக் கையாளும் நிறுவனங்கள் கட்டணம் செலுத்திச் சேமிப்பகப் பிணையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒரு பிணையத்தின் தரவுச் சேமிப்புப் பகுதி மட்டும் அப்பிணையத்தின் அங்கமாக இல்லாமல் வேறெங்கோ வேறேதோ நிறுவனத்தின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கும். ஆனால் பிணையத்தின் பயனர்கள், தரவுகள் புறத்தே சேமிக்கப்பட்டுள்ளன என்பதை உணரார். சேமிப்பகம் பிணையத்தோடு ஓரங்கமாக இனைக்கப்பட்டுள்ளது போன்றே உணர்வர். ’பிணையத்தோடு இணைக்கப்பட்ட சேமிப்பு’ (Network Attached Storage - NAS) என்கிற தொழில்நுட்பத்தின் குறைபாடுகளைக் களையவே ‘சேமிப்பகப் பிணையம்’ என்னும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்