மு.சிவலிங்கம் வலையகம்

கணிப்பொறிப் பிணையப் பாடங்கள்
 

பாடம்-4
பிணைய மென்பொருள்
(Network Software)

வன்பொருள்களைப் பயன்படுத்திப் பிணையத்தைக் கட்டமைத்தவுடனே கணிப்பொறிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் நடைபெற்று விடாது. வன்பொருள்களை நம் விருப்பப்படி செயல்பட வைக்க மென்பொருள்கள் தேவை. பிணையத்தில் வன்பொருள்கள் வழியாகத் தகவல் பரிமாற்றம் நடைபெறக் குறிப்பிட்ட வகையான தனிச்சிறப்பு மென்பொருள்கள் தேவை. அவற்றுள் பிணைய இயக்க முறைமை (Network Operating Systems), தகவல் தொடர்பு நெறிமுறைகள் (Communication Protocols), ஒவ்வொரு பிணையப் பயன்பாட்டுக்குமான வழங்கி, நுகர்வி மென்பொருள்கள் (Server, Client Software) ஆகியவை முக்கியமானவை.

 பிணைய இயக்க முறைமை (Network Operating System)

ஒரு மையக் கணிப்பொறியில் பல கணிப்பொறிகள் பிணைக்கப்பட்டுப் பல பயனர்கள் ஒரே நேரத்தில் மையக் கணிப்பொறியுடன் தொடர்பு கொண்டு பணியாற்ற வேண்டியிருப்பின் அனைத்துப் பயனர்களையும் அடையாளம் கண்டு அனுமதித்தல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்தல், அனைத்துக் கணிப்பொறிகளுடனான தகவல் போக்குவரத்தை நிர்வகித்தல் போன்ற பல்வேறு பணிகளையும் ஆற்றவல்ல இயக்க முறைமை மையக் கணிப்பொறியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய திறனுள்ள இயக்க முறைமையைப் ‘பிணைய இயக்க முறைமை’ என்கிறோம். நாவல் நெட்வேர், விண்டோஸ் என்டீ, விண்டோஸ் 2008 செர்வர் போன்றவை இத்தகு இயக்க முறைமைகளாகும். பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள பிற கணிப்பொறிகளில் பிணைய இயக்க முறைமை நிறுவப்பட வேண்டிய கட்டாயமில்லை. சாதாரண சொந்தக் கணிப்பொறிக்கான இயக்க முறைமை இருந்தாலே போதும். ஆனால் அவற்றில் பிணையத் தகவல் தொடர்பு மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

 தகவல் தொடர்பு நெறிமுறைகள் (Communication Protocols)

இரண்டு மனிதர்கள் தமக்குள்ளே உரையாடிக் கொள்ள இருவருக்கும் பேசத் தெரிய வேண்டும். இருவருக்கும் காது கேட்க வேண்டும். இருவரும் ஒரே மொழியில் உரையாட வேண்டும். ஒருவர் கூறும் தகவலை மற்றவர் கேட்கும் மனநிலையில் இருக்க வேண்டும். இவ்வளவுக்கும் பிறகே இருவரும் தகவல் பரிமாறிக் கொள்ள முடியும். இவர்கள் தொலைபேசியில் பேசிக் கொள்வதாயின் முதலில் இருவரின் தொலைபேசிகளுக்கும் இடையே இணைப்பு ஏற்பட வேண்டும். யார் பேசுவது எனக் கேட்டு இருவரும் அடையாளம் கண்டுகொண்ட பிறகே உரையாடல் தொடரும். ஒருவர் பேசும்போது மற்றவர் ‘உம்’ கொட்டினால்தான் உரையாடல் தொடர முடியும். உரையாடல் முடிந்தபின் ‘வைக்கட்டுமா?’ எனக் கேட்டுப் பதில் வாங்கிய பிறகே முறைப்படி உரையாடல் முடிவுபெறும்.

ஆறறிவு பெற்ற மனிதர்கள் இருவர் தகவல் பரிமாறிக் கொள்வதற்கே இவ்வளவு முன்னேற்பாடுகள் தேவையெனில், அறிவுநுட்பம் இல்லாத இரண்டு எந்திரங்கள் தமக்கிடையே தகவல் பரிமாறிக் கொள்வது எவ்வளவு சிக்கலான செயல்பாடு என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். ஒரு பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு கணிப்பொறிகள் தகவல் பரிமாறிக் கொள்ள ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றையே ‘நெறிமுறைகள்’ (Protocols) என்கிறோம்.

இரண்டு கணிப்பொறிகள் நேரடியாக இணைக்கப்படும்போது தகவல் பரிமாற்றத்தில் சிக்கல் குறைவு. ஆனால் ஒரு பிணையத்தில் பயணம் செய்யும் தகவல், பிணைய இடைமுக அட்டை, குவியம், தொடர்பி, திசைவி ஆகியவற்றைக் கடந்து பயணிக்க வேண்டியிருக்கும். பிணையத்தில் பயணிக்கும் தகவல் ஒரு கோப்பாக இருக்கலாம். ஒரு வலைப்பக்கமாக இருக்கலாம். ஒரு மின்னஞ்சலாக இருக்கலாம். பெறுகின்ற கணிப்பொறி இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் வகுத்துத் தருவதே ‘நெறிமுறை’ என்னும் மென்பொருளாகும். தமக்கிடையே தகவல் தொடர்பு எப்படி நடைபெற வேண்டும் என்று இரு கணிப்பொறிகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே ‘நெறிமுறை’ எனலாம்.

பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு கணிப்பொறிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் மிகவும் சிக்கலானது என்பதால், தகவல் பரிமாற்ற வழிமுறைகள் அடுக்குகளாகப் (Layers) பிரிக்கப்பட்டு அணுகப்படுகின்றன. உலகத் தரப்பாட்டு அமைப்பு (International Standard Organisation - ISO), பிணையத் தகவல் தொடர்புக்கெனத் ‘திறந்தநிலை முறைமைகளின் ஒன்றிணைப்பு’ (Open Systems Interconnection - OSI) என்னும் ஏழடுக்கு மாதிரியத்தைப் (Model) பரிந்துரைத்தது. பிணையத் தகவல் பரிமாற்றம் பற்றி உருவாக்கப்பட்ட கருத்துருக்கள் அனைத்துக்கும் இம்மாதிரியமே அடிப்படையாக அமைந்தது. ஐஎஸ்ஓ-ஓஎஸ்ஐ மாதிரியத்தின் ஏழு அடுக்குகளாவன:

(1) பருநிலை அடுக்கு (Physical Layer)
(2) தரவுத் தொடுப்பு அடுக்கு (Data Link Layer)
(3) பிணைய அடுக்கு (Network Layer)
(4) போக்குவரத்து அடுக்கு (Transport Layer)
(5) தொடர்வு அடுக்கு (Session Layer)
(6) முன்வைப்பு அடுக்கு (Presentation Layer)
(7) பயன்பாட்டு அடுக்கு (Application Layer)

ஒவ்வோர் அடுக்கிலும் குறிப்பிட்ட பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. ஒவ்வோர் அடுக்கிலும் குறிப்பிட்ட நெறிமுறைகள் செயல்படுகின்றன. இவைபற்றி விரிவாகப் பிறகுவரும் பாடங்களில் படிப்போம்.

அனுப்பு முனையில் தகவலைச் சிறுசிறு தரவுப் பொட்டலங்களாகப் (Data Pockets) பிரித்தல், தரவுப் பொட்டலங்களில் அனுப்புநர், பெறுநர் முகவரி மற்றும் பொட்டல வரிசையெண் இடுதல், அப்போதைய சிறந்த பாதையைத் தேர்ந்தெடுத்துத் தரவுப் பொட்டலங்களை அனுப்புதல், போக்குவரத்து நெரிசலுக்கேற்ப அனுப்பும் வேகத்தைக் கட்டுப்படுத்துதல், பயணிக்கும்போது தரவு பிட்டுகளில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து திருத்திக் கொள்ளுதல், பெறுமுனையில் தரவுப் பொட்டலங்களை ஒன்றுசேர்த்து மூலத் தகவலைப் பெறுதல் போன்ற பல்வேறு பணிகள் பல்வேறு அடுக்குகளில் நெறைமுறைகளால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. டீசிபீ (TCP - Transmission Control Protocol), ஐபீ (IP - Internet Protocol) ஆகியவை தலையாய தகவல் தொடர்பு நெறிமுறைகள் ஆகும். இவை ‘டீசிபீ/ஐபீ நெறிமுறை’ என இணைத்தே பேசப்படும்.

 வழங்கி, நுகர்வி மென்பொருள்கள் (Server, Client Software)

பல்வேறு பயன்கள் கருதியே கணிப்பொறிப் பிணையத்தை அமைக்கிறோம். பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறிகள் பிணையத்தின் வழியே பல்வேறு சேவைகளைப் பெறுகின்றன. கோப்புப் பரிமாற்றம் (File Transfer), வலையுலா (Web Browsing), மின்னஞ்சல் (E-Mail), உடனடிச் செய்திப் பரிமாற்றம் (Instant Messenger), செய்திக் குழுக்கள் (News Groups), அஞ்சல் குழுக்கள் (Mailing List), அரட்டை (Chat) போன்ற பல்வேறு சேவைகளைப் பிணையத்தின் மூலம் பெறலாம். பிணையத்தில் இச்சேவையை வழங்கும் மையக் கணிப்பொறியை ‘வழங்கி’ (Server) என அழைக்கிறோம். அச்சேவையை வழங்கப் பயன்படும் மென்பொருளையும் ‘வழங்கி’ (Server) என்றே அழைக்கிறோம். கோப்பு வழங்கி (File Server), வலை வழங்கி (Web Server), அஞ்சல் வழங்கி (Mail Server), செய்தி வழங்கி (Message Server), அரட்டை வழங்கி (Chat Server) என அந்தந்த சேவைக்குரிய ‘வழங்கி மென்பொருள்’ (Server Software) அச்சேவையை வழங்கும் மையக் கணிப்பொறியில் நிறுவப்பட்டிருக்கும்.

பிணையத்தின் சேவையை நுகரும் கணிப்பொறியை ‘நுகர்வி’ (Client) என அழைக்கிறோம். பிணையம் வழங்கும் ஒரு சேவையை பிணையத்தோடு இணைக்கப் பட்ட ஒரு கணிப்பொறி நுகர வேண்டுமெனில், அக்கணிப்பொறியில் அச்சேவைக்கான ‘நுகர்வி மென்பொருள்’ (Client Software) நிறுவப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, ஒரு வலை வழங்கியிலுள்ள வலைப்பக்கத்தைப் பார்வையிட வேண்டுமெனில், உங்கள் கணிப்பொறியில் ‘வலை உலாவி’ (Web Browser) மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ‘உலாவி’ (Browser) என்பது வலைப்பக்கத்தைப் பார்வையிடுவதற்கான நுகர்வி மென்பொருளாகும். இதுபோன்றே, கோப்புப் பரிமாற்றம், மின்னஞ்சல், உடனடிச் செய்தி, அரட்டை ஆகிய அனைத்துச் சேவைகளுக்கும் அந்தந்த சேவைக்குரிய நுகர்வி மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு நுகர்வி மென்பொருள் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளுக்கான மென்பொருள் கூறுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, உலாவி மென்பொருளே கோப்புப் பரிமாற்றப் பணியையும் செய்துவிடுகிறது. மின்னஞ்சல்களைப் பார்வையிடவும் வலையுலாவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மின்னஞ்சல்களை நமது கணிப்பொறியில் பதிவிறக்கிப் பார்வையிட வேண்டுமெனில் அதற்கான ‘அஞ்சல் நுகர்வி’ (Mail Client) மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்