மு.சிவலிங்கம் வலையகம்

கணிப்பொறிப் பிணையப் பாடங்கள்
 

பாடம்-3
பிணைய வன்பொருள்கள்
(Network Hardware)

பல கணிப்பொறிகளை ஒன்றாகப் பிணைக்க வேண்டுமெனில் கூடுதலாகச் சில வன்பொருள் சாதனங்கள் தேவைப்படும் என்பது சொல்லாமலே விளங்கும். பிணையத்தின் வகை, பரப்பு இவற்றைப் பொறுத்து அதில் பயன்படுத்தப்படும் வன்பொருள்களும் வேறுபடும். இத்தகைய வன்பொருள் சாதனங்களைப் புரிதல் கருதி மூன்றாக வகைப்படுத்தலாம். (1) குறுகிய பரப்பில் செயல்படும் பிணையங்களில் கணிப்பொறிகளைப் பிணைக்கத் தேவையானவை. (2) அத்தகைய பிணையங்களைக் கூடுதல் பரப்புக்கு விரிவுபடுத்தத் தேவையானவை. (3) பல சிறிய பிணையங்களை இணைத்துப் பெரிய பரந்த பிணையத்தை நிறுவத் தேவையானவை.

 கணிப்பொறிகளைப் பிணைக்கும் வன்பொருள்கள்

எத்துணை சிறிய, பெரிய பிணையமாய் இருப்பினும் அதில் கணிப்பொறிகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கணிப்பொறிகளை ஒன்றையொன்று பிணைக்கப் பயன்படும் வன்பொருள்களுள் மிகவும் முக்கியமானவை:

(1) வடங்கள் (Cables)
(2) செருகுதுளைகள், இணைப்பிகள் (Jacks & Connectors)
(3) குவியம் (Hub)
(4) பிணைய இடைமுக அட்டை (Network Interface Card)

(1) வடங்கள் (Cables)

கணிப்பொறிகளை இணைக்கப் பயன்படும் பல்வேறு வகையான வடங்கள் பற்றி ஊடகங்கள் பற்றிய முந்தைய பாடத்தில் படித்துவிட்டோம். பிறவற்றை இனி பார்ப்போம்.

(2) செருகுதுளைகள், இணைப்பிகள் (Jacks & Connectors)

ஒரு கணிப்பொறியில் ஒரு வடத்தை இணைக்க வேண்டுமெனில் கயிற்றில் கட்டுவதுபோல முடிச்சுப் போட்டுவிட முடியாது. கணிப்பொறியில் ஒரு செருகுதுளை (Jack) இருக்க வேண்டும். வடத்தின் நுனியில் அத்துளையில் நுழையக் கூடிய இணைப்பி (Connector) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். துளையில் இணைப்பியைச் செருகும்போது மின்னிணைப்பு ஏற்பட்டுத் தகவல் தொடர்பு சாத்தியமாகிறது. குறிப்பிட்ட வடத்துக்குக் குறிப்பிட்ட இணைப்பியைத்தான் பொருத்த வேண்டும். அந்தந்த இணைப்பிக்கு ஏற்ற செருகுதுளையைப் பயன்படுத்த வேண்டும்.

முறுக்கிய இணை வடங்களுக்கு ஆர்ஜே-45 (RJ - Registered Jack) இணைப்பிகளும் செருகுதுளைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எட்டுக் கம்பிகளுக்கான இணைப்புகள் இருக்கும். முறுக்கிய இணை வடங்களில் நான்கு இணைகளாக எட்டுச் செப்புக் கம்பிகள் இருக்கும். அவற்றுள் நான்கு கம்பிகளே தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. 1, 2 ஆகியவை தகவலை அனுப்பவும், 3, 6 ஆகியவை தகவலைப் பெறவும் பயன்படுகின்றன.

படம் 1.3.1 (அ) ஆர்ஜே-45 இணைப்பி

இணையச்சு வடங்களுக்கு பிஎன்சி (BNC - British Naval Coonector / Bayonet Neil Cocelman) மற்றும் பிஎன்சி-டீ (BNC-T) இணைப்பிகளும் செருகுதுளைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் பிஎன்சி இணைப்பி ‘நுழை இணைப்பி’ (Male Connector) வகையைச் சார்ந்தது. பிஎன்சி-டீ இணைப்பி ‘துளை இணைப்பி’ (Female Connector) வகையைச் சார்ந்தது. இரண்டு இணையச்சு வடங்களை ஒன்றாக இணைக்க பிஎன்சி உருளை இணைப்பிகளும் (BNC Barrel Connectors), ஒரு கணிப்பொறியில் இரண்டு வடங்களை இணைக்க டீ-இணைப்பிகளும் (T-Connectors) பயன்படுகின்றன.

படம் 1.3.1 (ஆ) பிஎன்சி இணைப்பி

ஒளியிழை வடங்களுக்குத் தனிச்சிறப்பான ‘ஒளியிழை இணைப்பிகள்’ (Fiber Optic Connectors) பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணிப்பொறிகளை இணைப்பதற்கென்றே தனிச்சிறப்பான இணைப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை ‘ஆப்பிள் இணைப்பிகள்’ என அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் எட்டு இணைப்புப் பின்களைக் கொண்டிருக்கும். இவற்றின் வெளிப்பக்கம் ஒருபுறம் தட்டையான பகுதியைக் கொண்டிருக்கும். தட்டையான பகுதியில் அதனைச் செருகவிருக்கும் சாதனத்தின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.

(3) குவியம் (Hub)

இரண்டு கணிப்பொறிகளை வடம் மூலம் நேரடியாக இணைக்கலாம். இரண்டுக்கு மேற்பட்ட கணிப்பொறிகளை இணைக்கக் ‘குவியம்’ (Hub) என்னும் ஒரு மைய இணைப்புச் சாதனம் பயன்படுகிறது. மூன்று வகையான குவியங்கள் உள்ளன.

(1) முனைப்பிலாக் குவியம் (Passive Hub)
(2) முனைப்புக் குவியம் (Active Hub)
(3) நுண்ணறிவுக் குவியம் (Intelligent Hub)

முனைப்பிலாக் குவியம் வெறும் இணைப்புக் கருவியாக மட்டுமே செயல்படும். பெறுகின்ற தகவல் குறிகைகளை (Signals) அப்படியே அனுப்பி வைக்கும். திறன்மிகுப்பதும் (Boosting) மீட்டுருவாக்குவதும் (Re-generation) இல்லை. எனவேதான் இதன் பெயர் இவ்வாறு அமைந்துள்ளது. இச்சாதனம் இயங்க மின்சாரம் தேவையில்லை. பெரும்பாலும் இப்போது யாரும் இதனைப் பயன்படுத்துவதில்லை. முனைப்புக் குவியம் இணைப்புக் கருவியாக மட்டுமின்றி குறிகைகளைத் திறன்பெருக்கித் (Amplifying) தருகிறது. தேய்ந்துபோன குறிகைகளை மீட்டுருவாக்கி (Re-generating) அனுப்பி வைக்கிறது. முனைப்புக் குவியம் செயல்பட மின்சக்தி தேவை. இவ்விருவகைக் குவியங்களும் ஒரு கணிப்பொறியிலிருந்து பெறும் தகவலை அதில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கணிப்பொறிகளுக்கும் அனுப்பி வைக்கும். தகவலில் குறிக்கப்பட்டுள்ள இலக்கு முகவரிக்குரிய கணிப்பொறி மட்டும் அத்தகவலைப் ஏற்றுக் கொள்ளும். மற்ற கணிப்பொறிகள் புறக்கணித்துவிடும். தகவல் பரிமாற்றத்தின் மொத்த அலைக்கற்றையும் ஒவ்வொரு கணிப்பொறிக்கும் கிடைக்கும்.

மூன்றாவது வகையான நுண்ணறிவுக் குவியம் ஒரு கணிப்பொறியிலிருந்து பெறப்படும் தகவலை அனைத்துக் கணிப்பொறிகளுக்கும் அனுப்புவதில்லை. அத்தகவல் எந்தக் கணிப்பொறிக்குரியதோ அந்தக் கணிப்பொறிக்கு மட்டும் அனுப்பி வைக்கும். புத்திசாலித்தனமாகத் தகவல் பரிமாற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் திறன் இவ்வகைக் குவியங்களுக்கு உண்டு.

(4) பிணைய இடைமுக அட்டை (Network Interface Card)

பிணையத்தில் இணைக்கப்படும் கணிப்பொறிகளில் இவ்வகை அட்டைகள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கணிப்பொறியின் தாய்ப்பலகையில் (Motherboard) உள்ள விரிவாக்கச் செருகுவாயில் (Expansion Slot) இவ்வட்டையைச் செருக வேண்டும். தற்காலக் கணிப்பொறிகளில் தாய்ப்பலகையின் ஓர் அங்கமாகவே (On-board) இவ்வட்டை அமைந்துள்ளது. இவ்வட்டையில் வடத்தின் முனையில் உள்ள இணைப்பியை இணைப்பதற்குரிய செருகுதுளை இருக்கும். பிணையத் தகவல் பரிமாற்றத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது ‘நிக்’ (NIC - Network Interface Card) என்று அழைக்கப்படும் இந்தப் பிணைய இடைமுக அட்டைதான். கணிப்பொறிக்கும் பிணையத்துக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது. கணிப்பொறியிலிருந்து பெறும் தகவலை இடைநிலை நினைவகத்தில் சேமித்து வைத்து, தகவலை பிணையப் போக்குவரத்துக்கு உகந்த வடிவமைப்பில் (Format) மாற்றி, வடத்தின் வழியே பிணையத்திலுள்ள இலக்குக் கணிப்பொறிக்கு அனுப்பி வைக்கிறது.

குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், உலகமெங்கும் கணிப்பொறிகளில் பொருத்தப்பட்டுள்ள ‘நிக்’ அட்டை ஒவ்வொன்றும் தனக்கே உரிய தனித்த முகவரியை அதாவது ஓர் அடையாள எண்ணைக் கொண்டுள்ளன. இவ்வெண் ஆறு பைட்டுகளால் (48 பிட்டுகளால்) ஆனது. பன்னிரண்டு பதினறும இலக்கங்களைக் (Hexa Decimal Digits) கொண்டது. ‘நிக்’ அட்டையின் இந்த அடையாள எண் ‘ஊடக அணுகல் கட்டுப்பாட்டு முகவரி’ (Media Access Control Address) என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக ‘மேக் முகவரி’ (MAC Address) என்பர். பிணையத் தகவல் தொடர்பில் ஒவ்வொரு கணிப்பொறியும் இந்த முகவரி மூலமே அடையாளம் காணப்படுகிறது.

‘நிக்’ அட்டைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. பிணையக் கட்டமைப்பு (Network Architecture), தகவல் தொடர்பு ஊடகம் இவற்றைப் பொறுத்து ‘நிக்’ அட்டை வேறுபடுகிறது. தொடக்க காலங்களில் ‘ஆர்க்நெட்’ என்னும் ‘நிக்’ அட்டைகள் புழக்கத்தில் இருந்தன. அதன்பிறகு ‘ஈதர்நெட்’ அட்டைகள் புழக்கத்துக்கு வந்தன. இன்றைக்குப் பிணையங்களில் பெரும்பாலும் ‘ஈதர்நெட்’ அட்டைகளே பயன்படுத்தப் படுகின்றன. ‘ஈதர்நெட்’ அட்டைகளிலும் தகவல் பரிமாற்ற வேகத்தின் அடிப்படையில் பல்வேறு வகைகள் உள்ளன. பிணையத்தில் தகவல் பரிமாற்றத்தின் வேகம் கணிப்பொறியில் பொருத்தப்பட்டுள்ள ‘நிக்’ அட்டையைப் பெரிதும் சார்ந்துள்ளது.

 பிணைய விரிவாக்க வன்பொருள்கள்

ஓர் அறையில் செயல்படும் பிணையத்தை வேறு அறைகளுக்கு விரிவாக்கலாம். தொலைவில் செயல்படும் கணிப்பொறிகளையும் இணைத்துப் பிணையத்தை விரிவாக்கலாம். ஒரு கட்டடத்தில் ஒரு மாடியில் நிறுவப்பட்டுள்ள பிணையத்தில் பிற மாடிகளில் செயல்படும் கணிப்பொறிகளை இணைக்கலாம். அருகிலுள்ள கட்டடத்துக்கும் பிணையத்தை விரிவாக்க முடியும். இவ்வாறு ஒரு பிணையத்தின் பரப்பை விரிவாக்குவதற்கு வலுவூட்டி (Repeater), இணைவி (Bridge), தொடர்பி (Switch) என மூன்று வகையான வன்பொருள்கள் பயன்படுகின்றன.

(1) வலுவூட்டி (Repeater)

பிணையத்தில் பயன்படுத்தப்படும் செப்பு அல்லது ஒளியிழை ஆகிய எவ்வகை வடமாயினும் குறிப்பிட்ட தொலைவுக்கு மட்டுமே தகவலை அனுப்பி வைக்க முடியும். செப்புக் கம்பிகளில் தகவலை ஏந்திச் செல்லும் மின்காந்த அலை செல்லச் செல்லத் தன் வலுவை இழக்கிறது. அதுபோலவே ஒளியிழையில் பயணிக்கும் ஒளித்துகளும் குறிப்பிட்ட தொலைவுக்குப்பின் சக்தியை இழக்கிறது. ஊடகங்களில் பயணிக்கும் குறிகைகள் வலுவிழப்பு (Attenuation) அடைவது தவிர்க்க முடியாதது. உறையிடா முறுக்கிய இணை வடம் 100 மீட்டர் தொலைவுவரை தகவல் பரிமாற்றம் செய்யும் எனப் பார்த்தோம். 100 மீட்டருக்கும் அப்பாலுள்ள ஒரு கணிப்பொறியை பிணையத்தில் இனைக்க வேண்டின் ‘வலுவூட்டிகளைப்’ பயன்படுத்தலாம். 100 மீட்டர் அல்லது அதற்குச் சற்றே குறைவான தொலைவில் தகவல் தொடர்பு வடத்தில் வலுவூட்டியை இணைக்க வேண்டும்.

வடத்தில் பயணிக்கும் தகவலின் தன்மை, தகவலின் வடிவமைப்பு (Format), கணிப்பொறிகளின் முகவரி ஆகியவற்றை அறியும் திறன் வலுவூட்டிகளுக்குக் கிடையாது. தகவலிலுள்ள 0, 1 என்னும் பிட்டுகளை (Bits) மட்டுமே அறியும். வலுவிழந்த குறிகைகளின் திறன்மிகுத்து (Amplifying) அடுத்துள்ள சாதனத்துக்கு அனுப்பி வைக்கும். குவியங்களைப் போலக் குறிகைகளை மீட்டுருவாக்கி (Re-generating) அனுப்புகின்ற வலுவூட்டிகளும் பயன்பாட்டில் உள்ளன.

(2) இணைவி (Bridge)

ஒரு பிணையத்தின் இரண்டு கிளைப்பிரிவுகளை (Segments) இணைக்கப் பயன்படுகிறது. இரு வளாகங்களில் செயல்படும் கணிப்பொறிகளை ஒரே பிணையமாக இணைக்க இணைவிகளைப் பயன்படுத்தலாம். ஒரு வளாகத்தில் செயல்படும் கணிப்பொறி இணைவி வழியாக அடுத்த வளாகத்தில் செயல்படும் கணிப்பொறியுடன் தொடர்பு கொள்ளும். இணைவியால் இணைக்கப்படும் கிளைப்பிரிவுகள் இணைப்பின் அடிப்படையில் வெவ்வேறு பிணையங்கள் என்றாலும் கருத்தியலாக ஒரே பிணையம்தான்.

தகவலின் வடிவமைப்பு, கணிப்பொறிகளின் முகவரிகள், ‘நிக்’ அட்டைகளின் ‘மேக்’ முகவரிகள் ஆகியவற்றை அறியும் ஆற்றல் பெற்றவை இணைவிகள். ஒரு கிளைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கணிப்பொறியிலிருந்து வரும் தகவல் அடுத்த கிளைப்பிரிவிலுள்ள கணிப்பொறிக்கு எனில் அத்தகவலை அடுத்த கிளைப்பிரிவுக்கு அனுப்பி வைக்கும். அதே கிளைப்பிரிவிலுள்ள வேறொரு கணிப்பொறிக்கு எனில் அத்தகவல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. அதாவது அத்தகவல் அடுத்த கிளைப்பிரிவுக்குச் செல்ல விடாமல் தடுக்கிறது எனக் கொள்ளலாம். பெரும்பாலும் ஒரு பிணையத்தின் கிளைப்பிரிவுகளை இணைப்பதற்கே இணைவிகள் பயன்படுகின்றன என்ற போதிலும் வெவ்வேறு பிணையங்களை இணைக்கவும் இணைவியைப் பயன்படுத்த முடியும்.

(3) தொடர்பி (Switch)

பிணையங்களில் 1990-களின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சாதனம். ஒரு மாடியில் செயல்படும் பிணையத்தை அடுத்த மாடிக்கு விரிவுபடுத்தவும், அடுத்த கட்டடத்தில் செயல்படும் கணிப்பொறித் தொகுதிகளைப் பிணையத்தின் ஒரு பகுதியாக இணைத்துப் பிணையத்தை விரிவாக்கவும் தொடர்பி பயன்படுகிறது. தொடர்பியானது செயல்படும் தன்மையில் நுண்ணறிவுக் குவியம் போன்றது. ஆனால் அதைவிடவும் புத்திசாலியானது. இக்காலத்தில் தொடர்பிகளின் விலை அக்காலக் குவியங்களின் விலைக்குக் குறைந்து விட்டதால் தற்போது குவியத்துக்குப் பதிலாகத் தொடர்பியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

தொடர்பியானது ஒரு தொலைபேசித் தொடர்பகம்போல் செயல்படுகிறது. தொலைபேசி இணைப்பகத்தில் உள்ள சாதனத்தின் பெயரும் ‘தொடர்பி’ (Switch) என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு தொடர்பியில் பல கணிப்பொறிகள் இணைக்கப்பட்டுள்ளதாகக் கொள்வோம். ‘அ’ என்னும் கணிப்பொறி ‘ஆ’ என்னும் கணிப்பொறியோடு தொடர்பு கொள்ள விழைகிறது எனில் தொடர்பியானது அவற்றுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தித் தரும். அதன்பின் ‘அ’, ‘ஆ’ ஆகிய இரு கணிப்பொறிகளும் தமக்கிடையே தகவல் பரிமாறிக் கொள்ளும். அதே நேரத்தில் ‘இ’, ‘ஈ’ என்னும் வேறு இரண்டு கணிப்பொறிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற முடியும். அலைக்கற்றை, உரையாடல்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பல உரையாடல்கள் சாத்தியம் என்பதால் பிணையத்தின் தகவல் போக்குவரத்துக் கையாள் திறன் அதிகரிக்கிறது.

இணைவிகளைப் போலவே தொடர்பிகளும் தகவலின் வடிவமைப்பு, கணிப்பொறிகளின் முகவரிகள், ‘மேக்’ முகவரிகள் ஆகியவற்றை அறியும் ஆற்றல் பெற்றவை. எனவே பிணையத்தின் இரு கிளைப்பிரிவுகளை இணைக்கவும் தொடர்பியைப் பயன்படுத்தலாம். இன்றைக்கு இணைவிகள் பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டன.

 பிணையங்களை இணைக்கும் வன்பொருள்கள்

ஒன்றுக்கு மேற்பட்ட பிணையங்களை இணைத்துப் பரந்த பிணையத்தை உருவாக்க முடியும். ஒரு பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு துறையிலும் செயல்படும் பிணையங்களை ஒருங்கிணைத்துப் பல்கலைக் கழகம் முழுமைக்கும் ஒரு பரந்த பிணையத்தை உருவாக்க முடியும். ஒரு நகரில் ஆங்காங்கே பல்வேறு கிளை அலுவலகங்களில் செயல்படும் பிணையங்களை ஒருங்கிணைத்து கிளைகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு வழிசெய்ய முடியும். நாடெங்கும் பல்வேறு நகரங்களில் செயல்படும் பிணையங்களை ஒன்றிணைக்க முடியும். அதுபோல உலகெங்கும் செயல்படும் பிணையங்களை ஒருங்கிணைத்து உலகளாவிய பிணையத்தை நிறுவிடவும் முடியும். இத்தகைய பிணையங்களின் ஒருங்கிணைப்புக்கு இணைவி (Bridge), திசைவி (Router), நுழைவி (Gateway) என்னும் வன்பொருள் சாதனங்கள் பயன்படுகின்றன.

திசைவி (Router)

குறுகிய பரப்பில் செயல்படும் சிலநூறு கணிப்பொறிகளைக் கொண்ட பல சிறிய பிணையங்களை இணைக்க இணைவிகளையும், ஆயிரக்கணக்கான கணிப்பொறிகள் கொண்ட பெரிய பிணையங்களை இணக்கத் திசைவியையும் பயன்படுத்தலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும் ஒரே இணைப்புமுறை (Topology) கொண்ட பிணையங்களை இணைக்கவே இணைவி பயன்படுகிறது. வெவ்வேறு இணைப்புமுறை கொண்ட பிணையங்களை ‘மொழிபெயர்ப்பு இணைவி’ (Translation Bridge) என்னும் தனிச்சிறப்பான இணைவியால் இணைக்க முடியும் என்றாலும் அத்தகைய பிணையங்களை இணைக்கத் திசைவியே உகந்த கருவியாகும்.

திசைவியானது இணைவியைவிடப் பலவகையிலும் மேம்பட்டது. மிகப்பெரும் பிணைய அமைப்புகளில் இணைவியால் தீர்க்க முடியாத பல சிக்கல்களைத் தீர்ப்பதற்கென்றே திசைவிகள் உருவாக்கப்பட்டன. இணைவி, தகவல் பொட்டலங்களை (Pockets) இலக்குக் கணிப்பொறிக்கு முன்பே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் அனுப்பி வைக்கும். ஆனால் திசைவியோ தகவல் பொட்டலம் இலக்கினைச் சென்று சேர அந்த நேரத்தில் சிறந்த பாதை எதுவெனத் தேர்ந்தெடுத்து அனுப்பும். சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துத் தகவலைத் ‘திசைவிக்கும்’ திறன் பெற்றுள்ளதால் ரூட்டரைத் தமிழில் பொருத்தமாகத் ‘திசைவி’ என அழைக்கிறோம். வெவ்வேறு இணைப்புமுறை (Topology) கொண்ட, முற்றிலும் வெவ்வேறான தன்மை கொண்ட பிணையங்களை இணைத்துத் தகவல் பரிமாறிக் கொள்ள திசைவியே ஏற்ற கருவியாகும்.

நுழைவி (Gateway)

பிணையத்தில் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படும் மென்பொருள் ‘நெறிமுறை’ (Protocol) எனப்படுகிறது. கோப்பு, மின்னஞ்சல், வலைப்பக்கம் போன்ற வெவ்வேறு வகைத் தகவல்களின் பரிமாற்றத்துக்கு வெவ்வேறு நெறிமுறைகள் பயன்படுகின்றன. வெவ்வேறு வகையான கட்டுமானம் (Architecture) கொண்ட பிணையங்களில் வெவ்வேறு வகையான நெறிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. திசைவிகள் இத்தகைய நெறிமுறைகளைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவை. எனவே குறிப்பிட்ட தகவல் பொட்டலத்தை என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கத் திசைவியால் முடியும்.

ஒரே வகையான நெறிமுறைகளைப் பின்பற்றும் இருவேறு பிணையங்களை இணைக்கத் திசைவியைப் பயன்படுத்தலாம். வெவ்வேறு வகையான கட்டுமானம் கொண்ட பிணையங்களை இணைக்கவும், முற்றிலும் வேறுபட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்படும் பிணையங்களை இணைக்கவும் ‘நுழைவி’ (Gateway) எனப்படும் சிறப்புவகைத் திசைவி பயன்படுகின்றது. குறிப்பிட்ட நெறிமுறையைப் பயன்படுத்தி அனுப்பப்படும் குறிப்பிட்ட வகையான தகவலின் வடிவமைப்பைப் புரிந்து கொண்டு அத்தகவலை வேறு தகவல் வடிமாக மாற்றி, வேறு நெறிமுறையைப் பயன்படுத்தி இலக்குக் கணிப்பொறிக்கு அனுப்பி வைக்கும் திறன் நுழைவிக்கு உண்டு.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்