மு.சிவலிங்கம் வலையகம்

கணிப்பொறிப் பிணையப் பாடங்கள்
 

பாடம்-5
கணிப்பொறிப் பிணையங்களின் வளர்ச்சி
(Development of Computer Networks)

கணிப்பொறி வரலாற்றில் கணிப்பொறிப் பிணையம் ஒரு திருப்புமுனை என்றே கூற வேண்டும். தொடக்க காலத்தில் கணிப்பொறி என்பது பலநூறு பயனர்கள் பயன்படுத்தும் மிகப்பெரும் கணிப்பொறி அமைப்பாகவே இருந்தது. நாளடைவில் தனியாள் பயன்படுத்தும் சொந்தக் கணிப்பொறிகள் பயன்பாட்டுக்கு வந்தன. அதன்பிறகு அத்தகைய கணிப்பொறிகள் பலவற்றை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டிய தேவை எழுந்தபோது கணிப்பொறிப் பிணையங்கள் உருவாக்கப்பட்டன. கணிப்பொறிப் பிணைய வளர்ச்சியில் ஏற்பட்ட பலவேறு கட்டங்கள் பற்றி இப்பாடத்தில் விரிவாகப் படித்தறிவோம்.

பல்பயனர் (Multiuser) கணிப்பொறி அமைப்புமுறை

‘கணிப்பொறி’ என்றவுடன் நமது நினைவுக்கு வருவது தனியாள் பயன்படுத்தும் சொந்தக் கணிப்பொறிதான் (Personal Computer). குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட கணிப்பொறி சொந்தக் கணிப்பொறி அன்று. கணிப்பொறி வரலாறு தொடங்கி ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்தே சொந்தக் கணிப்பொறிகள் பயன்பாட்டுக்கு வந்தன. தொடக்ககாலக் கணிப்பொறிகளை ஒருவர் விலைகொடுத்து வாங்கவோ, வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளவோ முடியாது. காரணம் அவற்றின் விலை அவ்வளவு அதிகம்; அவற்றின் உருவளவு அவ்வளவு பெரிது.

பெருமளவு பயன்பாட்டுக்கு வந்த தொடக்ககாலக் கணிப்பொறிகளில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை பெருமுகக் கணிப்பொறிகள் (Mainframe Computers) மற்றும் குறுமுகக் கணிப்பொறிகள் (Mini Computers) ஆகும். இவற்றைக் ‘கணிப்பொறி’ எனச் சொல்வதைவிட ‘ஒரு கணிப்பொறி அமைப்பு’ எனக் கூறுவதே பொருந்தும். ஒரே நேரத்தில் பலநூறு பயனர்கள் பணியாற்ற முடியும். இத்தகு கணிப்பொறி அமைப்பைப் ‘பல்பயனர் கணிப்பொறி முறைமை’ (Multiuser Computer System) என்று அழைப்பர். மெய்யான பொருளில் இக்கணிப்பொறி அமைப்பைக் ‘கணிப்பொறிப் பிணையம்’ என அழைக்க முடியாது எனினும் ஒரே நேரத்தில் பலநூறு பயனர்கள் பணியாற்றுகின்ற காரணத்தால் இதனைக் கணிப்பொறிப் பிணையங்களுக்கான முன்னோடி எனக் கொள்வதில் தவறேதும் இல்லை. பெருமுக, குறுமுகக் கணிப்பொறிகள் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

பெருமுக, குறுமுகக் கணிப்பொறிகள் (Mainframe, Mini Computers)

பெருமுகக் கணிப்பொறி அமைப்பில் மையக் கணிப்பொறியுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேய்மை முனையங்கள் (Remote Terminals) இணைக்கப்பட்டிருக்கும். மையச் செயலகம் (CPU), நினைவகம் (Memory), தரவுச் சேமிப்புச் சாதனங்கள் (Data Storage Devices) ஆகியவை மையக் கணிப்பொறியிலேயே இருக்கும். முனையங்களில் திரையகம் (Monitor), விசைப்பலகை (Keyboard), மையக் கணிப்பொறியுடன் தகவல் தொடர்புக்கான சாதனம் இவை மட்டுமே இருக்கும். எனவே இவற்றை ஊமை முனையங்கள் (Dumb Terminals) என்றும் அழைப்பர். பலநூறு முனையங்களில் ஒரே நேரத்தில் தரவுகளை உள்ளிட்டு மையக் கணிப்பொறியில் சேமித்துக் கொள்ள முடியும். சேமிக்கப்பட்ட தரவுகளிலிருந்து தேவையான தகவல்களை முனையங்களில் பெறவும் முடியும். தரவுச் செயலாக்கப் பணிகள் அனைத்தையும் மையக் கணிப்பொறியே செய்யும். மையச் செயலி மற்றும் நினைவகத்தை முனையங்கள் நேரப் பகிர்வு (Time Sharing) முறையில் பயன்படுத்திக் கொள்ளும்.

கட்டமைப்பு, செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றில் குறுமுகக் கணிப்பொறி பெருமுகக் கணிப்பொறியை ஒத்ததே. ஆனால் பெருமுகக் கணிப்பொறியோடு ஒப்பிடுகையில் திறனும் பயனர் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். குறுமுகக் கணிப்பொறியில் நூற்றுக்கு மேற்பட்ட அளவிலான முனையங்களே இணைக்கப்பட்டிருக்கும். பல்பயனர் கணிப்பொறி அமைப்புகளில் ’யூனிக்ஸ்’ இயக்க முறைமை பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

பயனரின் உரிமைகளும் சலுகைகளும்

பெருமுக, குறுமுகக் கணிப்பொறி அமைப்பில் முனையங்களில் பணியாற்றும் பயனர்களின் உரிமைகளும் சலுகைகளும் வரம்புக்கு உட்பட்டதாகும். கணிப்பொறி முறைமையின் நிர்வாகி (System Administrator) இவற்றை வரையறை செய்வார். குறிப்பிட்ட தரவுகளை மட்டுமே பார்வையிடுவது, குறிப்பிட்ட கட்டளைகளை மட்டுமே செயல்படுத்துவது, குறிப்பிட்ட பயன்பாட்டு நிரல்களை மட்டுமே இயக்குவது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பணியாற்றுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். அவற்றை மீறிப் பயனர்கள் செயல்பட முடியாது. அதே வேளையில் பயனர்கள் தமக்குள்ளே மின்னஞ்சல் மூலமாகத் தகவல் தொடர்பு கொள்வது போன்ற சில சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கும். முனையங்களில் நிலைவட்டு (Hard Disk) போன்ற தகவல் சேமிப்பு சாதனங்கள் இல்லையாதலால் பயனர் சொந்தமான தகவல்களையோ நிரல்களையோ வைத்துக் கொள்ள முடியாது. செயலி, நினைவகம் ஆகியவை இல்லையென்பதால் முனையங்களில் தரவுச் செயலாக்கமோ நிரலியக்கமோ சாத்தியமில்லை.

குறை நிறைகள்

பல்பயனர் கணிப்பொறி அமைப்பில் பயனர்களுக்கு எவ்விதச் சுதந்திரமும் இல்லை என்பது பெரும் குறையாகக் கருதப்படுகிறது. மேலும் அனைத்துச் செயலாக்கங்களும் மையக் கணிப்பொறியிலே நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் அது மீத்திறன் கொண்டதாய் இருக்க வேண்டும். அதனை நிர்வகிக்கும் முறைமை நிர்வாகியும் மிகுந்த திறைமையுடைவராய் இருக்க வேண்டும். இத்தகு மையப்படுத்தப்பட்ட அமைப்பில் நன்மைகளும் உள்ளன. தரவுத்தளம் மட்டுமின்றி பயன்பாட்டு மென்பொருள்களையும் மையக் கணிப்பொறியில் மட்டுமே நிறுவினால் போதும். தரவுப் பராமரிப்பு, தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றை எளிதாகச் செய்ய முடியும். அத்துமீறல்களுக்கு எதிரான அரண்களை அமைப்பது எளிது. இத்தகைய மையப்படுத்தப்பட்ட பல்பயனர் அமைப்பு முறையிலிருந்த குறை, நிறைகள் பிற்காலப் பிணைய அமைப்பு முறைக்கான சிந்தனையைக் கிளறிவிட்டன.

கோப்பு வழங்கி – கணுக்கள் (File Server - Nodes) அமைப்புமுறை

1980-களில் நுண்கணிப்பொறிகள் (Micro Computers) என்று அழைக்கப்பட்ட சிறிய, விலைகுறைந்த சொந்தக் கணிப்பொறிகள் (Personaol Computers) பெருமளவு பயன்பாட்டுக்கு வந்தன. மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் கூட கணிப்பொறிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். நிறுவனச் செயல்பாடுகள், அலுவலகப் பணிகள் காரணமாக ஒரு நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் கணிப்பொறிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இத்தேவையை நிறைவுசெய்யப் பிணைய அமைப்புமுறை நடைமுறைக்கு வந்தது. பிணைய இணைப்புக்கான வன்பொருள், மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. ஒரு சக்தி வாய்ந்த மையக் கணிப்பொறியுடன் பல சொந்தக் கணிப்பொறிகள் பிணைக்கப்பட்டன. குவியம் (Hub), தொடர்பி (Switch) போன்ற பிணைய இணைப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. மையக் கணிப்பொறி கோப்பு வழங்கி (File Server) என்று அழைக்கப்பட்டது. கிளைக் கணிப்பொறிகள் கணுக்கள் (Nodes) என்று அழைக்கப்பட்டன. இந்த அமைப்பு முறையில் கிளைக் கணிப்பொறிகளுக்குக் கூடுதல் சுதந்திரம் இருந்தது. மையப்படுத்திய தரவுத் தளத்தின் (Database) தகவல்களைப் பகிர்ந்துகொண்டு பல பயனர்கள் ஒரே நேரத்தில் பணியாற்ற இந்த அமைப்புமுறை மிகவும் ஏற்றதாக இருந்தது.

அமைப்பும் செயல்பாடும்

கணுக்களில் நுண்செயலி (Microprocessor) உண்டு. நினைவகம் (Memory) உண்டு. நிலைவட்டுத் (Hard Disk) தேவையில்லை. தேவையெனில் பொருத்திக் கொள்ளலாம். கணுக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கோப்பு வழங்கி கோப்புகளை அனுப்பி வைக்கும். தரவுச் செயலாக்கப் பணிகளை கணுக்களே செய்யும். புதுப்பிக்கப்பட்ட கோப்பு வழங்கிக்கே திருப்பி அனுப்பப்படும். அனைத்துப் பயனர்களின் கோப்புகளையும் பாதுகாத்துப் பராமரிக்கும் பணிகளை கோப்பு வழங்கி செய்யும். பிணைய நிர்வாகியின் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டிலும் கோப்பு வழங்கியும் பயனர்களும் இருப்பர்.

கோப்பு வழங்கியில் பிணைய இயக்க முறைமை இயங்கும். கணுக்களில் தனியான இயக்க முறைமை இருக்க வேண்டியதில்லை. ‘சேய்மை இயக்கம்’ (Remote Booting) முறையில் கணுக்கள் இயக்கப்படும். கணுக்களில் நிலைவட்டினைப் பொறுத்தி, தனித்த இயக்கமுறையை நிறுவிக் கொள்ளவும் முடியும். அவ்வாறுள்ள கணுக்களை இயக்கும்போது வழங்கியிலிருந்து சேய்மை இயக்க முறையிலா, நிலைவட்டிலுள்ள இயக்க முறையிலிருந்தா எனக் கேட்கச் செய்து, விரும்பியவாறு இயக்கிக் கொள்ள முடியும். நிலைவட்டிலிருந்து இயக்கினால் கணுக்களைப் பிணையக் கணிப்பொறியாகப் பயன்படுத்தாமல் தனித்த கணிப்பொறியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நிறை - குறைகள்

தரவுத்தளமும் பயன்பாட்டு மென்பொருள்களும் வழங்கிக் கணிப்பொறியிலேயே இருக்கும். எனவே தரவுப் படியாக்கம் (Data Backup), தரவுப் பாதுகாப்பு (Data Protection), பயன்பாட்டு மென்பொருள்களைப் புதுப்பித்தல் போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இந்த அமைப்பு முறையில் செயலாக்கப் பணிகளை கணுக்களே மேற்கொள்வதால் வழங்கிக்கு அதிகமான வேலைப்பளு இல்லை. எனவே பல்பயனர் அமைப்பு முறையில் இருந்ததுபோல மையக் கணிப்பொறி திறன்மிக்கதாய் இருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் பல்பயனர் அமைப்பு முறையில் இருந்ததைவிடப் பயனர்களுக்கு அதிகமான சுதந்திரமும் சலுகைகளும் இருந்தன. ஒரு பயனர் பிற பயனரின் தரவுகளிலும் பணிகளிலும் தலையிட முடியாத வகையில் போதுமான பாதுகாப்பு இருந்தது. ஒவ்வொரு கணுவின் கோரிக்கையின் பேரிலும் கோப்புகளைக் கணுக்களுக்கு அனுப்பித் திரும்பப் பெறவேண்டியிருப்பதால் பிணையப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும் புதிய கணுக்களைச் சேர்க்கவும் கணுக்களைப் பராமரிக்கவும் செலவு அதிகமாகும்.

குறுகிய எல்லைகளுக்குள் செயல்படும் குறும்பரப்புப் பிணையங்களின் (Local Area Networks) வளர்ச்சிக்கு இந்த அமைப்புமுறை மிகவும் உகந்ததாக இருந்தது. தொடக்க காலங்களில் நாவெல் (Novell) நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ‘நாவெல் நெட்வேர்’ (Novell Netware) என்னும் பிணைய இயக்க முறைமை மிகவும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது.

நிகர்களின் பிணைய அமைப்பு (Peer-to-Peer Network)

ஓர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவுகளில் பத்துக் கணிப்பொறிகளைத் தனித்தனியே பயன்படுத்தி வருவதாக வைத்துக் கொள்வோம். இவர்கள் சில தகவல்களைத் தமக்குள்ளே பரிமாறிக் கொள்ளக் குறுவட்டு, பேனாச் சேமிப்பகங்களில் நகலெடுத்துப் பயன்படுத்துவர். தனித்தியங்கும் பத்து சொந்தக் கணிப்பொறிகளையும் பிணைய அட்டை (Network Interface Card), இணைப்பி (Connector), குவியம் (Hub), கம்பிவடம் (Cable) ஆகியவற்றின் மூலம் இணைத்து ஒரு பிணையத்தை நிறுவிட முடியும்.

திறன்மிக்க மையக் கணிப்பொறியோ, பிற கணிப்பொறிகளைக் கட்டுப்படுத்தும் விலைமிகுந்த பிணைய இயக்க முறைமையோ (Network OS), சம்பளம் அதிகம் கேட்கும் பிணைய நிர்வாகியோ (Network Administrator) தேவையில்லை. பத்துக் கணிப்பொறிகளும் சம உரிமையோடு பிணையத்தில் பங்கு கொள்கின்றன. எனவே இத்தகைய பிணைய அமைப்புமுறை ‘நிகர்களின் பிணையம்’ (Peer-to-Peer Network) என்று அழைக்கப்படுகிறது. செலவு குறைந்த பிணையம் என்பதால் ‘ஏழைகளின் பிணையம்’ (Poorman’s Network) என்றும் அழைப்பர். இப்பிணையத்தில் பத்துப் பதினைந்து கணிப்பொறிகளுக்கு மேல் இணைக்க முடியாது.

பிணையத்திலுள்ள ‘நிகர்கள்’ (Peers) தனித்து இயங்கிக் கொள்ளலாம். அவற்றில் சொந்தக் கணிப்பொறி இயக்க முறைமையே இருக்கும். குறிப்பாக ’விண்டோஸ்’ இயக்க முறைமை மிகவும் ஏற்றது. தரவுத்தளம், பயன்பாட்டு மென்பொருள்களைத் தனித்தனியே வைத்துக் கொள்ளலாம். பிற கணிப்பொறியிலுள்ள தகவல் தேவையெனில் வட்டுகளில் நகலெடுக்கத் தேவையின்றி பிணைய இணைப்பு வழியே அத்தகவலைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு கணிப்பொறியிலுள்ள தகவலை அக்கணிப்பொறியின் உரிமையாளர் அனுமதித்தால் மட்டுமே பிறர் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் அனுமதிக்கப்படும் தகவல்கள் மட்டுமே பிற பயனர்களுக்குக் கிடைக்கும். கடவுச்சொல் (Password) மூலம் தகவலை அணுக அனுமதி தரமுடியும்.

தகவல்கள் மட்டுமின்றி, ஒரு கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள குறுவட்டகம் (CD), அச்சுப்பொறி (Printer), வருடுபொறி (Scanner), இணைய இணைப்பு (Internet Connection) போன்றவற்றையும் பிற பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஓர் அலுவலகத்தில் பணியாற்றும் பலரும் தமக்குள்ளே இணைந்து பணியாற்ற இடம் தருவதால் இத்தகு பிணையத்தைப் ‘பணிக்குழு’ (Work Group) அமைப்புமுறை என்றும் அழைப்பர்.

நுகர்வி - வழங்கி (Client - Server) அமைப்புமுறை

பல்பயனர் அமைப்பு முறையில் மையக் கணிப்பொறியே அனைத்துப் பணிகளையும் செய்யும். கிளைக் கணிப்பொறிகளுக்கு பணியெதுவும் இல்லை. அதே வேளையில் எவ்விதச் சுதந்தரமும் இல்லை. கோப்பு வழங்கி - கணுக்கள் முறையில் அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் கணுக்களே செய்கின்றன. பிணையப் போக்குவரத்து அதிகம். இந்த இரண்டு முறைகளுக்கும் இடைப்பட்ட முறையே நுகர்வி - வழங்கி (Client - Server) அமைப்பு முறையாகும். வேலைப்பளுவை வழங்கியும் (Server) நுகர்வியும் (Client) பகிர்ந்து கொள்கின்றன. கிளைக் கணிப்பொறிகளுக்கு அதிகமான சுதந்திரம் உண்டு. தற்காலச் சொந்தக் கணிப்பொறிகளையே வழங்கியாகவும் நுகர்வியாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். வழங்கிக் கணிப்பொறி சற்றே கூடுதல் திறனுள்ளதாக இருந்தால் போதும். இந்த அமைப்புமுறை பிணைய வளர்ச்சிப் போக்கில் ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டம் ஆகும். இன்று உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ள ’இணையம்’ (Internet) இந்த அமைப்புமுறையின் நீட்சியே.

நுகர்வியும் வழங்கியும்

மையமாய் விளங்கும் வழங்கிக் கணிப்பொறியில் தனிச்சிறப்பான ’வழங்கி இயக்க முறைமையும்’ (Server Operating System) மையப்படுத்தப்பட்ட தரவுத்தளமும் (Centralised Database) நிறுவப்பட்டிருக்கும். கிளைக் கணிப்பொறிகளான நுகர்விக் கணிப்பொறிகள், நிலைவட்டு, நுண்செயலி, நினைவகம் ஆகிய அனைத்தும் பெற்றுத் தனித்தியங்கும் ஆற்றலுள்ள கணிப்பொறிகள் ஆகும். அவற்றில் தனித்தியங்கும் இயக்க முறைமையும், தரவுகளைக் கையாளவல்ல பயன்பாட்டு மென்பொருள்களும் நிறுவப்பட்டிருக்கும். தனிப்பட்ட தரவுகளையும் தனிப்பட்ட பயன்பாட்டு மென்பொருள்களையும் வைத்துக் கொள்ளவும் முடியும்.

நுகர்விகள் வழங்கியைச் சாராமல், வழங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்துச் செயல்படும் சுதந்திரம் கொண்டவை. வழங்கிக் கணிப்பொறியிலுள்ள தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் தேவை ஏற்படும்போது மட்டுமே நுகர்விகள் வழங்கிக்குக் கோரிக்கைகளை அனுப்பி வைக்கின்றன. வழங்கிக்கும் நுகர்விக்கும் இடையே உள்ள உறவு, மருத்துவருக்கும் நோயாளிக்கும், வழக்குரைஞருக்கும் அவரது கட்சிக் காரருக்கும் இடையே உள்ள உறவுமுறை போன்றதாகும். தேவையான காலத்தில் மட்டுமே நுகர்விகள் வழங்கியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குகின்றன.

நுகர்வி - வழங்கி அமைப்பு முறையில் தரவுத்தளத்தைக் கொண்டுள்ள மையக் கணிப்பொறி ’பின்னிலை வழங்கி’ (Back End Server) எனவும், பயனர் பயன்படுத்தும் கிளைக் கணிப்பொறி ‘முன்னிலை நுகர்வி’ (Front End Client) எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தகைய அமைப்புமுறையில் முதன்முதலாக வெளியிடப்பட்ட இயக்க முறைமை ‘விண்டோஸ் என்டி செர்வர்’ (Windows NT Server) ஆகும்.

வழங்கியும் நுகர்வியும் செயல்படும் முறை

செயலாக்கப் பணிகளைப் பொறுத்த மட்டில் வழங்கி - நுகர்வி அமைப்புமுறை முந்தைய அமைப்பு முறைகளிலிருந்து மாறுபட்டது. தரவுகளைக் கையாள்வதில் வழங்கியும் நுகர்வியும் தமக்குள்ளே வேலைப் பிரிவினை செய்து கொள்கின்றன. எந்தப் பணியை வழங்கி செய்ய வேண்டும், எந்தப் பணியை நுகர்வி செய்ய வேண்டும் என்பது வரயறுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டும் தத்தமது பணிகளை நிறைவேற்றுவதால் வேலை விரைவாக நடந்து முடிந்து விடுகிறது. பிணையப் போக்குவரத்தும் அதிகமாவதில்லை.

மூன்று வெவ்வேறு சூழ்நிலைகளில் வழங்கியும் நுகர்வியும் எப்படிச் செயல்படுகின்றன எனப் பார்ப்போம்.

(1) ஒரு கோப்பிலுள்ள தரவுகளை ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் பார்வையிட நுகர்வி விரும்புகிறது. இந்தக் கோரிக்கையைப் பெற்ற வழங்கி, கோப்பிலுள்ள தரவுகளை நுகர்விக்கு வழங்கும் பொறுப்பை மட்டுமே நிறைவேற்றுகிறது. பயனர் விரும்பியவாறு குறிப்பிட்ட வடிவமைப்பில் திரையிடும் வேலையை நுகர்வி மென்பொருளின் உதவியுடன் நுகர்விக் கணிப்பொறியே செய்து முடிக்கிறது.

(2) ஒரு கோப்பிலுள்ள குறிப்பிட்ட தகவலை இன்னொரு கோப்பில் எடுத்தெழுத வேண்டியுள்ளது. நுகர்வி இக்கோரிக்கையை வழங்கிக்கு அனுப்பி வைக்கும். வழங்கி இப்பணியைத் தானே செய்து முடிக்கும்.

(3) வழங்கியில் ஓர் அட்டவணையிலுள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களை அகரவரிசைப் படுத்தி குறிப்பிட்ட வடிவமைப்பில் அச்சிட விரும்பும் ஒரு பயனர் இக்கோரிக்கையை வழங்கிக்கு அனுப்பி வைக்கிறார். தரவுத் தளத்திலிருந்து தகவலை எடுத்து அகர வரிசைப்படுத்தி நுகர்விக்கு அனுப்பிவைக்கும் பணியை வழங்கி செய்கிறது. வழங்கியிலிருந்து பெறப்பட்ட தகவலை குறிப்பிட்ட வடிவமைப்பில் அச்சிடும் பணியை நுகர்வி கவனித்துக் கொள்கிறது. பயனரின் தேவையை வழங்கியும் நுகர்வியும் வேலைப்பிரிவினை செய்து நிறைவேற்றி வைக்கின்றன.

நிறை - குறைகள்

பல்பயனர் அமைப்பு முறையில் மேற்கண்ட மூன்று சூழ்நிலைகளிலும் அனைத்துப் பணிகளையும் மையக் கணிப்பொறியே செய்கிறது. கோப்பு வழங்கி - கணுக்கள் முறையில் மேற்கண்ட பணிகள் அனைத்தையும் நுகர்விக் கணிப்பொறியே செய்கிறது. நுகர்வி - வழங்கி முறையில் மட்டுமே கோரிக்கைக்கு ஏற்றவாறு வேலையை இரண்டும் பகிர்ந்து செய்கின்றன. மற்ற இரு அமைப்புகளிலும் உள்ள அதே வகையான தரவுப் பாதுகாப்பு, தரவுப் பராமரிப்பு, பயனர் கட்டுப்பாடுகள் இந்த முறையிலும் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதெனில், முந்தைய இரு முறைகளிலும் இருந்த சிறப்புத் தன்மைகள் இதில் ஒருங்கே கிடைக்கப் பெறுகின்றன. நுகர்விகள் தனித்தும் செயல்பட்டுக் கொள்ளலாம், தரவுகளைத் தம் விருப்பப்படி கையாளலாம் என்பது போன்ற சுதந்திரங்கள் இருப்பதால் தற்காலத்தில் இந்த அமைப்புமுறையே பெரிதும் வரவேற்கப்படுகிறது. பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நுகர்வி - வழங்கி முறையில் வழங்கிக் கணிப்பொறிக்கு அதிகம் செலவில்லை. நுகர்விகள் அனைத்தும் தனித்தியங்கும் திறனுள்ள கணிப்பொறிகள் என்பதால் அவற்றுக்கான செலவு அதிகமாகும். பயன்பாட்டு மென்பொருள்களைப் புதுப்பிக்க வேண்டுமெனில் அனைத்து நுகர்விக் கணிப்பொறிகளிலும் புதுப்பிக்க வேண்டும். இதற்கு ஆகும் நேரமும் செலவும் அதிகம். சேய்மை இடங்களில் நிறுவப்பட்டுள்ள நுகர்விகளின் வன்பொருள்கள் மென்பொருள்களைப் பராமரிப்பது கடினமான பணியாகும். தனித்தியங்கும் நுகர்விக் கணிப்பொறிகளில் பணியாற்றும் பயனர்களின் கவனக் குறைவால் நுகர்விகளைத் தொற்றும் நச்சுநிரல்கள் (Virus Programs) வழங்கிக் கணிப்பொறியையும் அதிலுள்ள தரவுகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

பல்லடுக்குக் கட்டுமானங்கள் (Multitier Architecture)

நுகர்வி - வழங்கி அமைப்புமுறையில் காலப் போக்கில் பல்வித மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. பயன்பாட்டு மென்பொருள்கள் அனைத்தையும் கொண்ட விலை உயர்ந்த நுகர்விகள் ‘கொழுத்த நுகர்விகள்’ (Fat Clients) என்று அழைக்கப்படுகின்றன. வழங்கி - கொழுத்த நுகர்விகள் என்கிற ’இரண்டு அடுக்கு’ (Two Tier) அமைப்பு முறைக்குப் பதிலாக, ‘மூன்று அடுக்கு’ (Three Tier) அமைப்பு முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

வழங்கி இயக்க முறைமை, தரவுத்தளம் ஆகியவை ஒரு மையக் கணிப்பொறியிலும், பயன்பாட்டு மென்பொருள்கள் ‘பயன்பாட்டு வழங்கி’ (Application Server) எனப்படும் வேறொரு மையக் கணிப்பொறியிலும் நிறுவப்பட்டிருக்கும். இந்த அமைப்பு முறைக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் தனிச்சிறப்பான முறையில் இருகூறாக வடிவமைக்கப்பட்டவை. ஒரு கூறு ’வழங்கி மென்பொருள்’ (Server Software) எனவும், இன்னொரு கூறு ‘நுகர்வி மென்பொருள்’ (Client Software) எனவும் அழைக்கப்படும். இவற்றுள் வழங்கிக் கூறுகள் பயன்பாட்டு வழங்கிக் கணிப்பொறியில் நிறுவப்பட்டிருக்கும். நுகர்விக் கூறுகள் நுகர்விக் கணிப்பொறியில் நிறுவப்பட்டிருக்கும். இத்தகைய நுகர்விகள் ‘மெல்லிய நுகர்விகள்’ (Thin Clients) என்று அழைக்கப்படுகின்றன.

வழங்கி இயக்க முறைமை ஒரு மையக் கணிப்பொறியிலும், தரவுத்தளம் வேறொரு மையக் கணிப்பொறியிலும், பயன்பாட்டு மென்பொருள்கள் இன்னொரு மையக் கணிப்பொறியிலும் நிறுவப்பட்டுள்ள பல்லடுக்குக் கட்டுமான நுகர்வி - வழங்கி பிணைய அமைப்புமுறைகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இணையத்தின் தோற்றம்

தொலை தகவல் தொடர்பு (Telecommunication) மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் (Information Technology) ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக பிணையத் தொழில்நுட்பத்திலும் மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. சிறுசிறு அலுவலகங்களிலும் சிறிய, நடுத்தர, பெரிய வணிக நிறுவனங்களிலும் கணிப்பொறிப் பிணையங்கள் நிறுவப்பட்டன. ஒரு வளாகத்துக்குள் இயங்கும் குறும்பரப்புப் பிணையங்கள் (Local Area Network) மட்டுமின்றி, நாடு தழுவிய விரிபரப்புப் பிணையங்களும் (Wide Area Network) மிகப்பெரும் அளவில் வளர்ச்சி கண்டன. தனித்துச் செயல்பட்டு வந்த சொந்தக் கணிப்பொறிகளைக் கூட நினைத்த மாத்திரத்தில் பிணையத்தில் இணைத்துச் செயல்படுத்த முடியும் என்பதால் நுகர்வி - வழங்கிப் பிணைய அமைப்பு முறையே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிணையத் தரப்பாடாக அமைந்தது. பிணையத்தில் நிரந்தரமாக இணைக்கப்படாத கணிப்பொறிகூட தேவையானபோது பிணையத்திலுள்ள தகவலைப் பெறமுடியும் என்கிற நிலை கணிப்பொறிப் பிணையத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது.

நாடளாவிய பிணையங்கள் உலகளாவிய பிணையத்துக்கு வழிவகுத்தன. மிகப்பரந்த ஒற்றைப் பிணையத்துக்குப் பதிலாக, பல்வேறு பிணையங்களை ஒன்றிணைத்துப் பிணையங்களின் பிணையம் (Network of Networks) என்னும் உத்தி கண்டறியப்பட்டது. உலகமெங்கிலும் பரந்து கிடந்த பல்லாயிரம் பிணையங்களை ஒன்றிணைக்கும் தேவை ஏற்பட்டது. ‘இணையம்’ (Internet) உருவானது. பிணையங்களின் பரிணாம வளர்ச்சியில் இணையம் ஓர் உச்சகட்டப் பரிமாணம் என்றால் மிகையாகாது. கணிப்பொறி வரலாற்றில் மட்டுமல்ல, பிணைய வரலாற்றில் மட்டுமல்ல, மனித வரலாற்றிலேயே இணையம் ஒரு திருப்புமுனையாக ஆகிப் போனது.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்