மு.சிவலிங்கம் வலையகம்

கணிப்பொறிப் பிணையப் பாடங்கள்
 

பாடம்-7
அக இணையமும் புற இணையமும்
(Intranet and Extranet)

கணிப்பொறிப் பிணையங்களின் வகைப்பாடுகளாக அக இணையம், புற இணையம் பற்றிய சிறு குறிப்பை மட்டும் முந்தைய பாடத்தில் படித்தோம். அவைபற்றி விரிவாக இப்பாடத்தில் படித்தறிவோம்.

அக இணையம் என்றால் என்ன?

அக இணையம் பற்றிப் பல்வேறு வரையறுப்புகள் உள்ளன. அவற்றுள் சில:

வரையறை-1: அக இணையம் என்பது இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த தனியார் பிணையம் ஆகும் (An intranet is a private network that uses Internet Technologies).

வரையறை-2: அக இணையத்தைத் ’தனியார் இணையம்’ எனலாம் (Intranet is a private Internet).

வரையறை-3: அக இணையத்தை இணையத்தின் தனியார் வடிவம் எனலாம் (An intranet can be understood as a private version of the Internet).

வரையறை-4: அக இணையத்தை ஒரு நிறுவனத்துக்குள் மட்டும் உள்ளடங்கிய, இணையத்தின் தனியார் பயன்பாட்டுக்கான நீட்டிப்பு எனலாம் (Intranet is a private extention of the Internet confined to an organisation).

வரையறை-5: அக இணையம் என்பது ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமே அணுகக் கூடிய அந்நிறுவனத்தின் வலையகமும் அதனை அணுகும் கணிப்பொறிகளின் அகக்கட்டமைப்புமாகும் (Intranet refers to an organisation’s internal website which can be accessed only by its employees and their computer infrastructure).

மேற்கண்ட பல்வேறு வரையறுப்புகளின் சாரமாக, அக இணையத்தைக் கீழ்க்காணுமாறு வரையறுக்கலாம்:

“அக இணையம் என்பது இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த, ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமே அணுக முடிகிற, ஒரு தனியார் பிணையமாகும்”

ஆக, அக இணையத்தின் மூன்று முக்கிய கூறுகளை இவ்வாறு பட்டியலிடலாம்:

(1) ஒரு நிறுவனத்தின் தனியார் பிணையம்.
(2) இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்தது.
(3) அந்நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமே அணுக முடியும்.

அக இணையத்தை நிறுவும் வழிமுறைகள்

அக இணையம் இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்தது என்றாலும் அது இணையத்தின் ஓர் அங்கமாகத்தான் அமைய வேண்டும் என்கிற கட்டாயமில்லை எனக் குறிப்பிட்டோம். அதாவது, அக இணையம் என்பது வெளித்தொடர்பு எதுவுமின்றி ஒரு நிறுவனத்துக்குள் செயல்படும் தனிப்பட்ட பிணையமாக இருக்க முடியும். அக இணையம் ஒரு குறிப்பிட்ட செயற்பரப்பில் செயல்படக் கூடிய குறும்பரப்பு, வளாகப் பரப்பு, மாநகர்ப் பரப்பு அல்லது விரிபரப்புப் பிணையமாக இருக்கலாம். இது நிறுவனத்தின் செயற்பரப்பைப் பொறுத்தது. நிறுவனத்தின் செயற்பரப்பு, செயல்பாடு மற்றும் அதன் வல்லமையைப் பொறுத்து, அக இணையத்தை அமைக்கக் குறைந்தது நான்கு வழிமுறைகள் உள்ளன:

(1) சொந்தக் கட்டமைப்பில் அமைவது

அக இணையத்தின் வன்பொருள், மென்பொருள், தகவல் பரிமாற்ற சாதனங்கள் உட்படப் பிணையக் கட்டமைப்பு முழுக்க அந்நிறுவனத்துக்கே சொந்தமானதாக இருக்கும். குறும்பரப்பு அல்லது வளாகப் பரப்புப் பிணையங்கள் இவ்வாறு அமைவது சாத்தியம். மாநகர் அல்லது விரிபரப்புப் பிணையத்தில் தகவல் பரிமாற்றக் கட்டமைப்பு முழுக்க நிறுவனமே சொந்தமாக நிறுவிக் கொள்வது அவ்வளவு எளிதன்று. செலவு அதிகமாகும்.

(2) குத்தகை இணைப்புகளில் அமைவது

மாநகர்ப் பிணையம் எனில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் குறும்பரப்புப் பிணையங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அவற்றுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்துக்குத் தொலைதொடர்பு நிறுவனங்களின் தகவல் தொடர்பு வடங்களில் குத்தகை இணைப்புகளைப் (Leased Lines) பயன்படுத்திக் கொள்ளலாம்.

(3) மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பில் அமைவது

அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் மற்றும் பல தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தொடர்பிகள், திசைவிகள், நுழைவிகள், தகவல் தொடர்பு வடங்களை உள்ளடக்கிய பிணையக் கட்டமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளன. அக்கட்டமைப்பை ஒரு நிறுவனம் கட்டண அடிப்படையில் தமது அக இணையத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மாநகர்ப் பிணையம் அல்லது சில நகரங்களை உள்ளடக்கிய விரிபரப்புப் பிணையம் எனில் இவ்வாறு அமைத்துக் கொள்ள முடியும். ஆனாலும் நாடு முழுக்க அல்லது பல நாடுகளில் பரந்த விரிபரப்புப் பிணையம் எனில் செலவு அதிகமாகும்.

(4) இணையத்தின் அங்கமாக அமைவது

மிகப்பரந்த விரிபரப்புப் பிணையமாக அமையும் ஓர் அக இணையத்தைச் சொந்தமாகவோ, குத்தகை இணைப்புகளின் மூலமாகவோ, தகவல் தொடர்பு நிறுவனங்களின் மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பு வழியாகவோ அமைப்பது சாத்தியமில்லை. உலகம் முழுக்கப் பரந்து கிடக்கும் இணையக் கட்டமைப்பின் வழியே அமைத்துக் கொள்வதே செலவு குறைந்த முறையாகும். நிறுவனத்தின் வலையகமும், வலையகத் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ள நிறுவன வழங்கிக் கட்டமைப்பும், அவ்வலையகத்தை அணுகும் நிறுவனப் பணியாளர்களின் கணிப்பொறி அமைப்புகளும் அக இணையத்தின் அங்கங்களாய் அமைகின்றன.

இவற்றுள் பின்னிரண்டும் ‘மெய்நிகர் தனியார் பிணையம்’ (Virtual Private Network) எனப்படும் என்பதையும் இணையம்வழி அமையும் மெய்நிகர் தனியார் பிணையங்களுக்கு அத்துமீறிகளால் ஆபத்து உண்டு என்பதால் பிணையப் பாதுகாப்புக்குத் தனிச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதையும் நினைவு கூர்க.

இணையத் தொழில்நுட்பங்கள்

அக இணையம் இணையத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை மீண்டும் மீண்டும் பலமுறை சொல்லி வந்திருக்கிறோம். இணையத் தொழில் நுட்பங்கள் எனப் பலவற்றைப் பட்டியலிட முடியும். அவற்றுள் கீழ்க்காணும் இணையத் தொழில் நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த தனியார் பிணையத்தை ’அக இணையம்’ எனக் கூறலாம்.

(1) பிணையக் கட்டுமானம் (Network Architecture)

இணையமானது நுகர்வி-வழங்கிப் (Client-Server) பிணையக் கட்டுமானத்தில் அமைந்தது என்பதை அறிவோம். அக இணையமும் நுகர்வி-வழங்கிப் பிணைய அமைப்பைக் கொண்டதாகும். இணையத்தின் தொடர்பின்றி தனித்து இயங்குவதாயினும் அக இணையம் ஒரு வலையகமாகவே செயல்படும்.

(2) தரவுகள், ஆவணங்கள் (Data and Documents)

நிறுவனத்தின் தகவல்கள் அனைத்தும் மீவுரைக் குறியிடு மொழியில் (hyper-text markup language) வடிவமைக்கப்பட்ட வலைப்பக்கங்கள் (web pages) எனப்படும் மீவுரை ஆவணங்களிலேயே (hyper-text documents) சேமிக்கப்பட்டிருக்கும். தரவுத்தளங்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளும் வலைப்பக்கங்கள் மூலமாகவே பரிமாறிக் கொள்ளப்படும். தரவு உள்ளீடும் வலைப்பக்கங்கள் வழியாகவே நடைபெறும். மீத்தொடுப்புகள் (hyper links) மூலமாக ஆவணங்கள் அணுகப்படும்.

(3) வழங்கியும் நுகர்வியும் (Server and Client)

அக இணையத்தின் வழங்கி, வலை வழங்கியாகும் (Web Server). வலை வழங்கியில் வலைப்பக்கங்களில் நிறுவனத் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். நுகர்விக் கணிப்பொறியில் நிறுவப்பட்டுள்ள நுகர்வி மென்பொருளான வலை உலாவி (Web Browser) மூலம் வழங்கியிலிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன.

(4) தகவல் பரிமாற்ற நெறிமுறைகள் (Communication Protocols)

பிணையத்தில் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படும் மென்பொருள்கள் ‘நெறிமுறைகள்’ என அழைக்கப்படுவதை நாம் ஏற்கெனவே அறிவோம். இணையத்தில் ஒவ்வொரு வகைத் தகவல் பரிமாற்றத்துக்கும் ஒவ்வொரு நெறிமுறை எனப் பல தனிச்சிறப்பான நெறிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் தலையாயது இணையத் தகவல் போக்குவரத்துக்கான டீசிபீ/ஐபீ (TCP/IP - Transmission Control Protocol/ Internet Protocol) ஆகும். வலைப்பக்கங்களை அணுக ஹெச்டீடீபீ (HTTP - Hyper Text Transfer Protocol), கோப்புப் பரிமாற்றத்துக்கு எஃப்டீபீ (FTP - File Transfer Protocol), மின்னஞ்சல் அனுப்ப எஸ்எம்டீபீ (SMTP - Simple Mail Transfer Protocol), மின்னஞ்சல் பெற பாப் (POP - Post Office Protocol), செய்திப் பரிமாற்றத்துக்கு என்என்டீபீ (NNTP - Network News Transfer Protocol) எனப் பல்வேறு நெறிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நெறிமுறைகள் அனைத்தும் ’டீசிபீ/ஐபீ குடும்ப நெறிமுறைகள்’ எனப்படுகின்றன. அக இணையத்திலும் தகவல் பரிமாற்றத்துக்கு டீசிபீ/ஐபீ குடும்ப நெறிமுறைகளே பயன்படுத்தப்படுகின்றன.

தேவையான வன்பொருள், மென்பொருள்

அக இணையத்தை அதன் செயற்பரப்புக்கு ஏற்ப நான்கு வழிகளில் நிறுவ முடியும் எனப் பார்த்தோம். இவற்றுள் எந்த வகையான அக இணையம் என்பதைப் பொறுத்துத் தேவைப்படும் வன்பொருள்கள் வேறுபடுகின்றன. சொந்தக் கட்டமைப்பு எனில் வழங்கி, நுகர்விக் கணிப்பொறிகள், குவியம், தொடர்பி, திசைவி போன்ற பிணைய இணைப்புக் கருவிகள் அனைத்தும் தேவை. குத்தகை இணைப்புகளில் அமைவது என்றாலும் மேற்கண்ட அனைத்து வன்பொருள்களுமே தேவைதான். மதிப்பேற்று பிணையம் வழியாக அமைவது எனில் வழங்கிக் கணிப்பொறிகளும் நிறுவன வளாகத்துக்குள் பயன்படுத்தும் கணிப்பொறிகள், குவியம், தொடர்பிகள் மட்டும் போதும். பல்வேறு பகுதிகளில் செயல்படும் பிணையங்களை இணைக்கும் திசைவிகள், தகவல் தொடர்புக் கட்டமைப்புகளை மதிப்பேற்று பிணைய நிறுவனமே வழங்கும். இணையம் வழியாக அமைவது எனில் பயனர்களின் கணிப்பொறிகள் மட்டுமே போதும். பிற அனைத்தையும் இணையக் கட்டமைப்பே வழங்குகிறது. வலை வழங்கியையும் கட்டண அடிப்படையில் ஏதேனும் ஓர் இணையச் சேவை நிறுவனத்திடம் பெற முடியும். ஆனால் இந்தவகைப் பிணையங்களுக்கு அத்துமீறிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனப் பார்த்தோம். எனவே நிறுவனப் பிணைய அமைப்புக்கும் இணையத்துக்கும் இடையே ‘தீச்சுவர்’ (Firewall) பாதுகாப்புள்ள திசைவி அல்லது நுழைவிகளை நிறுவ வேண்டும்.

மென்பொருள்களைப் பொறுத்தவரை வழங்கிக் கணிப்பொறியில் தகவல் பரிமாற்ற நெறிமுறைகளை உள்ளடக்கிய வழங்கி இயக்க முறைமையுடன் வலைவழங்கி மென்பொருளும் (Web Server Software) நிறுவப்பட வேண்டும். மேலும் மின்னஞ்சல் போன்ற சேவைகளுக்கு அவற்றுக்கான வழங்கி மென்பொருள்களை நிறுவ வேண்டும். இணையம்வழி அமைந்த மெய்நிகர் தனியார் பிணையம் எனில் தீச்சுவர்த் திசைவிகளில் அதற்கான மென்பொருளை நிறுவ வேண்டும். மேலும் நிறுவனத் தகவல்களை இணையம்வழிக் கையாளும் முன்பு அவற்றை ‘மறையாக்கம்’ (Encryption), ‘மறைவிலக்கம்’ (Decryption) செய்வதற்கான மென்பொருள்களும் நிறுவப்பட்டிருக்க வேண்டும். நுகர்விக் கணிப்பொறிகளில் பிணைய வசதியுள்ள மேசைக் கணிப்பொறி இயக்க முறைமை இருந்தால் போதும். மேலும் நிறுவனத்தின் வலைப்பக்கங்களைக் கையாள ‘வலை உலாவி’ மென்பொருள் கட்டாயம் இருக்க வேண்டும். வேறு அலுவலகப் பயன்பாட்டு மென்பொருள்கள் தேவையெனில் அவற்றை நிறுவிக் கொள்ளலாம். மின்னஞ்சல், உடனடிச் செய்திப் பரிமாற்றம் போன்ற சேவைகளைப் பயன்படுத்த அவற்றுக்கான நுகர்வி மென்பொருள்களை நிறுவ வேண்டும்.

அக இணையத்தின் பலன்கள் (Benefits of Intranet)

அக இணையத்தைச் சாதாரணப் பிணைய அமைப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் எனினும் அக இணையத்தில் பெறப்படும் பலன்கள் அதனைத் தனித்து நிற்கச் செய்கின்றன எனலாம். அக இணையத்தை அணுகுவது இணையத்தை அணுகுவது போல மிக எளிதானது. பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பயனர் பெயரும் கடவுச்சொல்லும் வழங்கப்படும். பணியாளர் தனது கணிப்பொறியில் வலை உலாவி மூலம் நிறுவன வலையகத்தில் நுழைந்து பயனர் பெயரும் கடவுச்சொல்லும் தந்தவுடன், அவரது பணிப்பரப்புக்குள் நுழைவார். அவர் செய்து முடிக்க வேண்டிய பணிகள் காத்திருக்கும். அலமாரிகளில் கோப்புகளைத் தேடி நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. பேரேடுகளில் கார்பன் தாள் வைத்துக் கைவலிக்க எழுத வேண்டியதில்லை. ஏடுகளிலும், தாள்களிலும் மரபு வழியாகச் செய்துவந்த பணிகளையெல்லாம் கணிப்பொறியில் வலைப்பக்கங்களில் செய்தால் போதும். இதுபோன்று அக இணையத்தில் பெறப்படும் பல்வேறு பலன்களையும் இப்பாடப் பிரிவில் வகைப்படுத்திப் பட்டியலிடுவோம்.

(1) தகவல் பரிமாற்றம்

நிறுவனத் தகவல்கள், அறிவிக்கைகள், அறிவுறுத்தங்கள், வழிகாட்டுதல்கள், விதிமுறைகள், பணி இலக்குகள் ஆகியவற்றை அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் ’தள்ளு’ (Push) முறையில் அனுப்பி உணர்த்தத் தேவையின்றி, ‘இழுப்பு’ (Pull) முறையில் பணியாளர்கள் நிறுவனப் பிணையத்தில் நுழைந்தவுடன் தகவல்கள் அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்ய முடியும். நிறுவனத்துக்குள் நடைபெறும் செங்குத்து, கிடைமட்டத் தகவல் தொடர்புகளுக்கு (Vertical and Horizontal Communications) அக இணையம் ஒரு சிறந்த கருவியாக விளங்க முடியும். நிறுவனத்தில் முழுதளாவிய தாக்கத்தை விளைவிக்கும் அதிமுக்கிய முனைப்பு நடவடிக்கைக்கு (Strategic Initiative) முன்பாக, அதன் நோக்கம், அதனைத் தொடங்கி வைத்தவர், அதனால் அடையப்போகும் இலக்கு, இன்றுவரை கிடைக்கப் பெற்றுள்ள பலன்கள், இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் ஆகிய விவரங்கள் அனைத்தும் பணியாளர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கச் செய்ய முடியும். இத்தகைய தகவல்களை அக இணையத்தில் வழங்குவதன் மூலம் பணியாளர்கள் நிறுவனத்தின் முக்கியத்துவம் மிக்க இலக்கு, குறிக்கோள் பற்றிய இற்றைத் தகவலைப் பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அக இணையத்தில் தகவல்கள் அனைத்தும் பணியாளர் அனைவரும் எளிதாக அணுகும் வண்ணம் இருப்பதால் ‘குழுப்பணி’ (Team Work) என்பது சாத்தியமாகிறது. அஞ்சல் குழுக்கள், உடனடிச் செய்திப் பரிமாற்றம் போன்ற சேவைகள் குழுப்பணிக்கு மிகவும் உதவக் கூடியவை.

(2) தகவல் புதுப்பித்தல்

மீவூடகம் (hypermedia) மற்றும் வலைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிறுவனம் பற்றிய களைப்பூட்டும் விவரங்களைப் பராமரிக்கவும், புதுப்பிக்கவும் அவற்றை நிறுவனம் முழுக்க எளிதாக அணுகச் செய்யவும் முடியும். குறிப்பாகப் பணியாளர் கையேடுகள், பணியாளர் நல ஆவணங்கள், நிறுவனக் கோட்பாடுகள், வணிகத் தரப்பாடுகள், செய்திக் குறிப்புகள், பயிற்சித் தகவல்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நிறுவனத்தின் ஒவ்வொரு பணிப்பிரிவும் வலையகத்திலுள்ள தத்தமது ஆவணங்களை அவ்வப்போது புதுப்பிக்க முடியும் என்பதால், பணியாளர்களுக்கு எப்போதுமே மிக அண்மைக்காலத் தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

நிறுவனம் தொடர்பான அரசின் சட்டங்கள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள், வரையறைகள், வரிவிதிப்புகள், அளவுகோள்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பவை. அக இணையத்தில் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் (வலை வழங்கியில்) சேமிக்கப்பட்டுள்ளதால் அவற்றைப் புதுப்பித்தல் நிமிட நேரத்தில் முடியக் கூடிய பணியாகும். எனவே பணியாளர்களுக்குக் காலாவதியான தகவல்களைத் தர வேண்டிய நிலை ஏற்படாது. அண்மையத் தகவல்களே கிடைக்கும். இதனால் பணிகள் பிழையின்றி நடைபெறுகின்றன. நிறுவனத்தின் கடப்பாடுகள் குறைகின்றன. நட்டம் தவிர்க்கப்படுகிறது.

(3) தாள்-கோப்புகளுக்கு விடுதலை

தொலைபேசிஎண் பட்டியல் முதல் செயல்முறைக் கையேடுகள் வரை நிறுவனம் பற்றிய அனைத்துவகைத் தரவுகள் மற்றும் தகவல்களைப் பணியாளர்கள் எந்த நேரமும் வலை உலாவி மூலம் பிணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். எனவே, அவற்றையெல்லாம் பெரிய பெரிய பேரேடுகளில் அச்சிட்டுப் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. இதனால் நிறுவனத்துக்கு செலவு மிச்சமாகிறது.

நிறுவனத்துக்குள்ளே கடிதப் போக்குவரத்து, ஆவணப் பரிமாற்றம், கோப்புப் பரிமாற்றம் அனைத்தும் பிணையம் வழியாகவே நடைபெறுகிறது. தாள்-கோப்புகளைப் பணிப்பிரிவுகளுக்கிடையே அனுப்பித் திரும்பிப் பெற ஆகும் நேரம் மிச்சமாகிறது. மேலும் கோப்புகளை வைத்த இடம் மறந்துவிட்டுத் தேடி அலைவதும், தொலைத்துவிட்டு அல்லற்படுவதும் அக இணையத்தில் அறவே இல்லை.

இணையம்வழி அமைந்த அக இணையம் எனில், பணியாளர்கள் விடுமுறை நாட்களிலும் பணிக்கு வரமுடியாத காலங்களிலும், வீட்டிலிருந்தபடியே நிறுவன வலையகத்தை அணுகி முக்கிய வேலைகளைச் செய்து முடிக்க முடியும். நிறுவனக் கோப்புகளை வீட்டுக்குச் சுமந்து செல்ல வேண்டிய தேவையில்லை. பணியாளர்கள் பணியின் நிமித்தம் வெளியூர் செல்லும்போதும் பயணத்திலும்கூட மடிக்கணிப்பொறியில் நிறுவனப் பணிகளைச் செய்து முடிக்கலாம்.

(4) நிறுவனம்-பணியாளர் பிணைப்பு

தகவல்கள் ஒரே இடத்தில் (வலை வழங்கியில்) சேமிக்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் தங்கள் பணிக்குத் தேவையான தகவல்களை எந்த நேரத்திலும், நிறுவனத்தின் எந்தக் கணிப்பொறியிலிருந்தும் வலை உலாவி மூலம் (சிக்கலான கட்டளைகள், நிரல்களைப் பயன்படுத்தத் தேவையின்றி) மிக எளிதாக அணுக முடியும். அத்தகவல்களை மட்டுமே அணுக அவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதால், தாம் அணுகும் தகவல்கள் சரியானவையே என்ற நம்பிக்கையுடன் தம் பணிகளை செவ்வனே விரைவாக நிறைவேற்ற முடியும்.

ஒவ்வொரு பணியாளரும் நிறுவனம் பற்றி ஒரே விதமான தகவல்களையே பார்வையிடுகிறார். எனவே அனைத்துப் பணியாளர்களின் மனத்திலும் நிறுவனம் பற்றிப் பொதுவான ஒரு பிம்பமே உருவாக்கப்படுகிறது.

பிணையத்தை இன்னார்தான் பயன்படுத்துவர் என்பது முன்பே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. ஒருவர் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் தந்து பிணையத்தில் நுழைந்ததுமே அவர் பெயர், பணிப்பொறுப்பு மற்றும் அவரைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் (பிணையத் தரவுத் தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்) தெரிந்துவிடும். எனவே அவருக்கே உரித்தான செய்தியுடன் (Personalized Message) அவரை வரவேற்கலாம். “ஹலோ குமரன்! உங்களுக்கு நிறுவனத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்றோ, ”வாழ்த்துகள் செந்தில், நிறுவனத்தில் மூன்றாவது ஆண்டு உங்கள் சேவை தொடர்வதற்கு!” என்றோ ஒரு செய்தி வரவேற்றால் பணியாளர் மகிழ்ந்துவிட மாட்டாரா? அக இணையம் இத்தகைய தனிப்பயனாக்கத்துக்கு (Customization) மிகவும் உகந்தது. இதனால் நிறுவனம்-பணியாளர் பிணைப்பு இறுக்கமாகிறது.

புற இணையம் (Extranet)

புற இணையம் என்பது அக இணையத்தின் விரிவாக்கம் ஆகும். எனவே புற இணையமானது அக இணையத்தின் அடிப்படையான கூறுகளைக் கொண்டிருக்கும் என்பது தெளிவாகிறது. விரிவாக்கம் என்பது அதன் பயனாளர்களைப் பற்றியது. நிறுவனப் பணியாளர்கள் தவிர வேறு பலரும் பிணையத்தை அணுகலாம். வேறு பலர் யார் யார் என்பதை இப்பாடப் பிரிவில் காண்போம். புற இணையம் எவ்வாறு செயல்படுகிறது, அதன் குறிப்பிடத்தக்க பயன்பாடு என்ன என்பதைப் பற்றியும் அறிந்து கொள்வோம். அக இணையத்தின் பலன்களோடு, சில கூடுதலான பலன்களும் புற இணையத்தில் பெறப்படுகின்றன. தவிரவும் புற இணையத்துக்கே உரிய சில பலவீனங்களும் உள்ளன. பலன்களும் பலவீனங்களும் எவை என்பதைத் தெரிந்து கொள்வோம். மற்றபடி திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், நிறுவும் வழிமுறைகள், வன்பொருள், மென்பொருள் தேவைகள் இவையெல்லாம் அக இணையத்துக்கும் புற இணையத்துக்கும் பொதுவானவையே. எனவே அவைபற்றி மீண்டும் இங்கே விளக்கத் தேவையில்லை என்பதை மனதில் கொள்க.

புற இணையம் என்றால் என்ன?

புற இணையத்தின் வரையறுப்பு ஏறத்தாழ அக இணையத்தின் வரையறுப்பைப் போன்றதே. பயனாளர்களைப் பொறுத்த கூறுபாட்டில் மட்டுமே வேறுபடுகிறது. புற இணையத்தைச் சுருக்கமாக இவ்வாறு வரையறுக்கலாம்:

“புற இணையம் என்பது இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த, நிறுவனப் பணியாளர்கள் மட்டுமின்றி நிறுவனத்தோடு தொடர்புடைய குறிப்பிட்ட வெளியார் சிலரும் அணுக முடிகிற ஒரு தனியார் பிணையமாகும்”

நிறுவனத்தோடு தொடர்புடைய குறிப்பிட்ட வெளியார் சிலர் என்பது அந்நிறுவனத்துக்குப் பொருள்கள் வழங்குவோர் (Suppliers), விற்பனையாளர்கள் (Vendors), வணிகக் கூட்டாளிகள் (Partners), வாடிக்கையாளர்கள் (Customers), உறவுடைய நிறுவனங்கள் போன்றோரைக் குறிக்கிறது. புற இணையம் இவர்களோடு சில தகவல்களையும் வணிகச் செயல்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது. புற இணையம் மேற்கண்ட அனைத்துப் பிரிவினரையுமே உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்பதில்லை. சில பிரிவினரை மட்டுமே கொண்டிருக்கலாம். ஓர் அக இணையத்தின் சில தகவல்களையும், பயன்பாடுகளையும் வாடிக்கையாளர்கள் அணுக முடியுமெனில் அது புற இணையமாகக் கருதப்படும். புற இணையத்தின் நான்கு முக்கிய கூறுகளை இவ்வாறு பட்டியலிடலாம்:

(1) ஒரு நிறுவனத்தின் தனியார் பிணையம்.
(2) இணையத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்தது.
(3) அந்நிறுவனத்தின் பணியாளர்கள் அணுக முடியும்.
(4) பொருள்கள் வழங்குவோர் (Suppliers), விற்பனையாளர்கள் (Vendors), வணிகக் கூட்டாளிகள் (Partners), வாடிக்கையாளர்கள் (Customers), உறவுடைய நிறுவனங்கள் போன்ற வெளியார் சிலருடன் சில வணிகத் தகவல்களையும் செயல்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது.

புற இணையத்தின் செயல்பாடும், பயன்பாடும்

புற இணையங்கள் பிற நிறுவனப் பிணையங்களோடும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அவற்றைச் சொந்தக் கட்டமைப்பில் நிறுவுவது சிக்கலானது. செலவு மிக்கது. மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பில் புற இணையங்கள் செயல்படலாம். ஆனால் அதற்கும் செலவு கூடுதலாகவே ஆகும். எனவே தற்போது புற இணையங்கள் பெருமளவு இணையக் கட்டமைப்பின் வழியாகவே அமைக்கப்படுகின்றன.

மதிப்பேற்று பிணையம்வழிச் செயல்படும் புற இணையங்களில் நிறுவனத்தோடு முற்றிலும் தொடர்பில்லாத பொதுமக்கள் நுழைய வாய்ப்பில்லை. அனுமதி பெற்ற பயனர்கள் மட்டுமே அணுகுவர். பிறரோடு பகிர்ந்து கொள்ள விரும்பாத தகவல்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதுமானது. ஆனால் இணையம்வழிச் செயல்படும் புற இணையம் எனில் அதன் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இணையம் என்பது பொதுமக்கள் எவரும் பயன்படுத்தக் கூடிய ஒரு திறந்தநிலைப் பிணையம் ஆகும். எனவே புற இணைய வலையகத்தில் நுழையும் அனுமதிக்கு மிகுந்த கட்டுப்பாடு தேவை. முதலில் பணியாளரும் வெளியாரும் பிரித்தறியப்பட வேண்டும். வெளியார் எனில் அவர் அனுமதி பெற்ற பயனரா என்பது உறுதி செய்யப்பட (Authentication) வேண்டும். அனுமதி பெற்ற பயனர் எனில் குறிப்பிட்ட தகவலை அணுகும் உரிமை (Authorisation) பெற்றவரா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும். எனவே இணையம்வழிச் செயல்படும் புற இணையங்கள் தீச்சுவர் (Firewall) பாதுகாப்புக் கொண்ட தனிச்சிறப்பான திசைவி (Router) அல்லது நுழைவி (Gateway) வழியாக இணையத்துடன் பிணைக்கப்பட வேண்டும்.

மின்வணிகத்தில் (e-commerce) புற இணையங்கள் பெருமளவு பயன்படுகின்றன. குறிப்பாக நிறுவனத்துக்கும் வாடிக்கையாளருக்கும் இடையேயான (B2C - Business to Consumer) மின்வணிகமும், வணிக நிறுவனங்களுக்கு இடையேயான (B2B - Business to Business) மின்வணிக நடவடிக்கைகளும் புற இணையங்கள் வழியாகவே நடைபெறுகின்றன. சில அரசுத்துறை நிறுவனங்கள் தமது பிணைய வலையகத்தில் ஒப்பந்ததாரர்கள் (Contractors) ஒப்பந்தப்புள்ளி (Tender) ஆவணங்களைப் பதிவிறக்கிக் கொள்ளவும் சமர்ப்பிக்கவும் அனுமதி அளிக்கின்றன. இத்தகைய தகவல் பரிமாற்றத்தில் ‘துடிமக் கையொப்பம்’ (Digital Signature) என்னும் பாதுகாப்புமுறை பின்பற்றப்படுகிறது.

புற இணையத்தின் பலன்களும் பலவீனங்களும்

புற இணையம் என்பது அக இணையத்தின் நீட்சியே என்பதால், அக இணையத்தின் பலன்கள் அனைத்துமே புற இணையத்துக்கும் பொருந்தும். ஒரு நிறுவனத்தின் புற இணையம் அந்நிறுவனத்துக்கு வெளியே அதன் வணிகத்தோடு தொடர்புடைய பிற வணிக அமைப்புகளையும் அங்கமாகக் கொண்டுள்ளதால் அதனால் ஏற்படும் பலன்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதல் பலன்களுள் முக்கியமான சிலவற்றைக் காண்போம்:

• தொடர்புடைய வணிக நிறுவனங்களுக்கிடையே மின்னணுத் தரவுப் பரிமாற்றம் (Electronic Data Interchange - EDI) மூலம் ஏராளமான தரவுத் தொகுதிகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். இதனால் உழைப்பும் நேரமும் மிச்சமாவதுடன் செலவும் மிச்சமாகும்.

• மொத்த விற்பனையாளர்களுடனும் சக வணிக நிறுவனங்களுடனும் உற்பத்திப் பொருட்களின் விலைப் பட்டியல்கள் (Product Catelogs) உட்படப் பல்வேறு வகையான வணிக ஆவணங்களைப் புற இணையம் வழியே பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் வணிக நடவடிக்கைகள் விரைவாக நடந்தேறும்.

• பிற வணிக நிறுவனங்களோடு கூட்டு முயற்சிகள், கூட்டு முதல¦டுகளுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் புற இணையம் உதவும்.

• பிற நிறுவனங்களுடன் இணைந்து நிறுவனப் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களைத் தயாரிக்கவும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

• ஒரு நிறுவனம் வழங்கும் சில குறிப்பிட்ட சேவைகளைப் பிற நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி வழங்கும் நிகழ்நிலை வங்கிச் சேவையை (Online Banking Service) அவ்வங்கியின் இணைப்பு வங்கிகளும் (Affliated Banks) பயன்படுத்திக் கொள்ளலாம்.

• புற இணையத்தில் பங்கு கொண்டுள்ள வணிக நிறுவனங்கள் தமக்குள் பொதுவான செய்திகள், விவரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். புற இணையத்தின் பலன்களோடு ஒப்பிடுகையில், பலவீனங்கள் குறைவே என்றாலும், அவற்றைப் புறக்கணித்து விடமுடியாது. அவை கவலைப்படக் கூடியவை. கட்டாயமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியவை:

• சொந்தக் கட்டமைப்பிலும், மதிப்பேற்று பிணையம் வழியாகவும் புற இணையத்தை அமைக்கவும், பராமரிக்கவும் மிகுந்த செலவாகும். வன்பொருள், மென்பொருள், பணியாளர் பயிற்சிக்கென ஆகும் செலவுகள் அதிகம்.

• இணையம்வழி அமைக்கப்படும் புற இணையங்களின் பாதுகாப்பு மிகப்பெரிய பலவீனமாகும். நிறுவனப் பணியாளர்கள் அல்லாத வெளியாரும் பிணையத்தை அணுகுவர் என்பதால் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நிறுவனத்தின் மதிப்புமிக்க தகவல்கள் அத்துமீறிகளின் கைகளில் கிடைத்துவிடக் கூடாது. பிணையத்தை அணுகுவோருக்கு அனுமதி அளிப்பதில் கவனமும் கட்டுப்பாடும் தேவை. தீச்சுவர் பாதுகாப்புக்கான வன்பொருள்கள், மென்பொருள்களுக்கு அதிகப்படியான செலவாகும்.

வணிக நடவடிக்கைகள் அனைத்தும் பிணையம் வழியாகவே நடைபெறுவதால் வாடிக்கையாளர்களையும், வணிகக் கூட்டாளிகளையும் முகத்துக்கு முகம் பார்த்து நேரில் உரையாடுவது குறைந்துவிடுகிறது. இவ்வாறு மனிதர்களுக்கிடையேயான நேரடிச் சந்திப்புகள் இல்லாமல் போவது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகக் கூட்டாளிகள் நிறுவனத்தின் மீது கொண்டுள்ள விசுவாசம் குறைந்து போக வாய்ப்புண்டு. ஒரு வகையில் அது வணிக வளர்ச்சியைப் பாதிக்கவே செய்யும்.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்