மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

களம்சார்ந்த கலைச்சொல்லாக்கம்

[2012-ஆம் ஆண்டு டிசம்பர் 28-30 தேதிகளில் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரை]

தமிழக அரசு 2000-ஆம் ஆண்டில், பல்வேறு துறைகளுக்காகப் பதினான்கு கலைச்சொல் பணிக்குழுக்களை அமைத்தது. தகவல் தொழில்நுட்பத்துக்காக முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அமைந்த பணிக்குழு, கலைச்சொல்லாக்க உத்திகளை வகுத்துக் கொடுத்தது. அதில் 8-வது உத்தியாக, ஒரே ஆங்கிலச் சொல் வேறு வேறு இடங்களில், வேறு வேறு பொருளில் பயன்படுத்தப்படும்போது, இடம் பொருள் ஏவல் அறிந்து, தமிழில் வேறு வேறு கலைச்சொற்களை உருவாக்க வேண்டும் ஓர் ஆங்கிலக் கலைச்சொல் வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படலாம். அதன் பொருளறிந்து, கவனமாகத் தமிழ்க் கலைச்சொல்லை உருவாக்க வேண்டும். எனவே, கலைச்சொல்லாக்கத்துக்குத் தமிழறிவு மட்டுமின்றித் துறைசார்ந்த அறிவு மிகவும் இன்றியமையாதது ஆகிறது. ஆங்கிலமும், தமிழும் தெரிந்துவிட்டால் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான தமிழ்க் கலைச்சொல்லை உருவக்கிவிட முடியாது. இயற்பியல், வேதியியல், கணிதம், மருத்துவம், பொறியியல், கணிப்பொறியியல், இன்னும் இதுபோன்று பல்வேறு துறைகளிலும் புழங்கும் ஆங்கிலக் கலைசொல்லுக்குப் பொருத்தமான தமிழ்க் கலைச்சொல்லை உருவாக்க அந்தந்தத் துறைசார்ந்த அறிவு அவசியமாகிறது.

Bus, Driver, Conductor ஆகிய மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். தமிழில் இச்சொற்கள் முறையே பேருந்து, ஓட்டுநர், நடத்துநர் என்று வழங்கப்படுவதை அறிவோம். சுவையான தகவல் என்னவெனில், இந்த மூன்று சொற்களுமே கணிப்பொறி இயலில் இடம்பெற்றுள்ளன. கணிப்பொறியியல் அறிவு இல்லாத ஒருவர், கணிப்பொறி அறிவியலுக்கான கலைச்சொல் அகராதி ஒன்றைத் தயாரிக்கிறார், அல்லது கணிப்பொறித் துறையில் ஒரு நூலை மொழிபெயர்க்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் Bus என்ற சொல்லுக்குப் பேருந்து என்றும், Driver என்ற சொல்லுக்கு ஓட்டுநர் என்றும், Conductor என்ற சொல்லுக்கு நடத்துநர் என்றும் குறிப்பிட்டிருப்பார். அதைப் படிக்க நேருகின்ற கணிப்பொறி அறிவியலாளர்கள் குலுங்கிச் சிரிப்பர். இது ஏதோ நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்ட செய்தியன்று. இதுபோன்ற கலைச்சொற்கள் கொண்ட கணிப்பொறியியல் அகராதிகள் வெளிவந்துள்ளன என்பதை வருத்தத்தோடு இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

மின்னணுத் துறையில் இரு வயரில் அமைந்த மின் இணைப்பை Channel, Circuit, Line என்று குறிப்பிடுவர். இரு முனைகளுக்கு இடையே தகவல் பயணம் செய்யும் இணைப்பை Path, Link என்றுகூடக் குறிப்பிடுவதுண்டு. இச்சொற்கள் தமிழில் பாதை, தடம், இணைப்பு, தொடுப்பு என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் தகவல் பிட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பயணிக்கும். Bus என்பது 8, 16, 32 வயர்களின் இணைப்பில் அமைந்த தகவல் பரிமாற்றத் தடமாகும். ஒரே நேரத்தில் 8, 16, 32 பிட்டுகள் இணையாகப் பயணிக்கும். Bus என்பது அகலமான தகவல் பரிமாற்றப் பாதையைக் குறிக்கிறது. எனவே, Bus என்பதைப் பாட்டை என்கிறோம்.

கணிப்பொறியோடு இயைந்து செயல்படும், விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), அச்சுப்பொறி (Printer), வருடி (Scanner), வரைவி (Plotter) போன்ற புறச்சாதனங்கள் பல உள்ளன. கணிப்பொறியானது, இந்தப் புறச்சாதனங்களோடு தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டுமெனில், அவற்றின் மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த மொழிபெயர்ப்புக்கு, அதாவது கணிப்பொறிக்கும் புறச்சாதனத்துக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு, Device Driver என்னும் நிரல் உதவுகிறது. சுருக்கமாக Driver என்பர். புறச்சாதனத்தை இயக்க உதவும் நிரல் என்பதால் Driver என்ற சொல்லுக்குக் கணிப்பொறியியலில் இயக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான உலோகங்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன. அவற்றுள் எளிதில் கடத்துபவையும் உண்டு. அரிதில் கடத்துபவையும் உண்டு. ஆங்கிலத்தில், அவற்றை முறையே, Good Conductor, Bad Conductor என்று குறிப்பிடுகின்றனர். எனவே, Conductor என்னும் சொல் கடத்தி என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. கணிபொறிக்கான மின்னணுச் சாதனங்கள் தயாரிக்க Semi-conductor பயன்படுகிறது. அதனை குறைக்கடத்தி அல்லது அரைக்கடத்தி என்று குறிப்பிடுகின்றனர்.

ஆக, கணிப்பொறித் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் Bus, Driver, Conductor ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு முறையே, பாட்டை, இயக்கி, கடத்தி என்பது போன்ற தமிழ்க் கலைச்சொற்களையே பயன்படுத்துவர். பேருந்து, ஓட்டுநர், நடத்துநர் என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க மாட்டார்கள். இதுபோன்று இன்னும் பல சொற்களைக் குறிப்பிடலாம். கணிப்பொறியியலில் விருப்பத் தேர்வுகளை உள்ளடக்கிய பட்டியல் அல்லது பட்டியைக் குறிக்கின்ற Menu என்ற சொல்லுக்கு உணவு விலைப் பட்டியல் என்று எழுதப்பட்ட கணிப்பொறிப் பாடப் புத்தகமும் வெளிவந்துள்ளது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்.

சாதாரண ஆங்கிலம்-தமிழ் அகராதியில் Line என்றால் கோடு என்றுதான் பொருளிருக்கும். ஆனால், தகவல்தொடர்பியல் அகராதியில் Line என்றால் இணைப்பு என்றும், தடம் என்றும் பொருள் கூறப்பட்டிருக்கும். அதேபோல்தான், argument என்ற சொல்லின் நேரடிப் பொருள் வாதம் அல்லது விவாதம். ஆனால், கணிப்பொறி இயலில் arguments என்னும் சொல், ஒரு செயல்கூறுவுக்கு (Function) அனுப்பப்படும் உருபுகளைக் குறிப்பதால் செயலுருபுகள் என்கின்றனர். இதுபோல ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆக, கணிப்பொறித் துறைசார்ந்த கலைச்சொல்லாக்கம், அத்துறைசார்ந்த புலமை இல்லையேல் நகைப்புக்கு இலக்காகும் என்பது கண்கூடு.

குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், ஒரே துறையிலேயே ஒரு குறிப்பிட்ட சொல் வெவ்வேறு துறைப்பிரிவுகளில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இன்னும் ஆழமாகச் சென்று பார்த்தால், ஒரே துறைப்பிரிவில்கூட ஒரு சொல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்க முடியும்.

Key என்னும் சொல்லுக்குச் சாவி, திறவுகோல் என்று பொருள் கூறுகிறோம். ஆனால், Answer Key, Key Stone, Key Industry, Key Source, Key Map ஆகிய சொற்களுக்கு முறையே விடைக் குறிப்பு, நடுகல், அடிப்படைத் தொழில், முதன்மை மூலம், கைப்படம் எனப் பொருள் கூறப்படுகிறது. இசையியலில் Keyboard, Key Note என்று இரு சொற்கள் புழக்கத்தில் உள்ளன. இவற்றை அத்துறையினர் முறையே, இசைப்பலகை, தொடங்கு சுரம் என்று வெவ்வேறு சொற்களில் குறிப்பிடுகின்றனர். ஒருசொல் வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு விதமாகவும், ஒரே துறையில்கூட வெவ்வேறு களங்களில் வெவ்வேறு விதமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு Key என்னும் சொல் சரியான எடுத்துக்காட்டாகும்.

கணிப்பொறித் துறைசார்ந்த கலைச்சொல்லாக்கத்துக்கு, அத்துறைசார்ந்த புலமை போதும் என்பது பாதி உண்மைதான். சி, சி++, சி#, ஜாவா போன்ற கணிப்பொறி நிரலாக்க மொழிகள் (Programming Languages) பற்றிய பாடங்களையும், நூல்களையும் எழுத முனைந்தபோதுதான், என்னால் இந்தப் பாதி உண்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கணிப்பொறி நிரலாக்கத்தில் பயன்படும் ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்க மேம்போக்கான கணிப்பொறி அறிவு மட்டும் போதாது, கணிப்பொறி நிரலாக்கம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை உணர முடிந்தது. பொறியியல் கல்லூரிகளில் கணிப்பொறித் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்ற, பிணையத் தொழில்நுட்பம் (Network Technology) பற்றிய ஒரு முழுமையான பாடநூலைத் தமிழில் எழுதியபோது, குறிப்பிட்ட புலம் அல்லது களம்சார்ந்த கலைச்சொல்லாக்கத்துக்கு, அந்தந்தப் புலம்சார்ந்த அறிவு (Field Knowledge) அல்லது களம்சார்ந்த அறிவு (Domain Knowledge) எவ்வளவு இன்றியமையாதது என்பதை அனுபவ பூர்வமாக உணர முடிந்தது.

கணிப்பொறி இயலில், Bus, Drive, Driver, Argument, Operator, Compile, Platform, Exception, Switch, Key, Polling போன்ற பல்வேறு சொற்கள் வழக்கமான பொருளில் இல்லாமல், வேறான பொருளைக் குறிக்குமாறு பயன்படுத்தப்படுகின்றன. Key, Socket, Gateway, Distribution, Interface போன்ற சொற்கள், கணிப்பொறி இயலிலேயே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சொற்களுக்குத் தமிழில் கலைச்சொற்களை உருவாக்கும்போது துறைசார்ந்த அறிவோடு, குறிப்பிட்ட களம்சார்ந்த புலமையும் தேவைப்படுகிறது என்பதை நிறுவுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் Key என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். கணிப்பொறியியலில், Keyboard என்னும் சாதனத்தை விசைப்பலகை என்கிறோம். Tab Key, Shift Key, Ctrl Key, Alt Key, Insert Key ஆகியவற்றை முறையே தத்தல் விசை, நகர்வு விசை, கட்டுப்பாட்டு விசை, மாற்று விசை, செருகு விசை என்று சொல்கிறோம். Key Press என்பதை விசையழுத்தம் என்கிறோம். அதாவது, Key என்ற சொல்லுக்கு ஈடாக விசை என்னும் சொல்லையே பயன்படுத்துகிறோம். கணிப்பொறிப் பிணையங்களைப் பற்றிப் படிக்கும்போது, Secret Key, Public Key, Private Key போன்ற சொற்களை எதிர் கொள்கிறோம். தகவலை இரகசியமாக வைத்துப் பூட்டுவது, திறப்பது என்ற பொருளிலேயே இங்கு Key என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. எனவே, விசை என்ற சொல் அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை. சாவி எனப் பொருள்படும் திறவி என்னும் தூய தமிழ்ச்சொல் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆகவே, Public Key, Private Key ஆகிய சொற்களைப் பொதுத்திறவி, தனித்திறவி என அழைக்கலாம். Key Distribution, Key Management ஆகியவற்றைத் திறவி வினியோகம், திறவி மேலாண்மை எனலாம்.

Socket என்னும் சொல்லைப் பிணையத் தொழில்நுட்பத்தில், பிணைய வன்பொருள்கள், பிணைய மென்பொருள்கள் ஆகிய இரண்டைப் பற்றிப் பேசும்போதும் எதிர் கொள்கிறோம். வன்பொருள்களில், இரண்டு மின்சார அல்லது மின்னணு சாதனங்களை இணைக்கும்போது, பெரும்பாலும் ஒன்றின் நுழைப்பகுதியை இன்னொன்றின் துளைப்பகுதியில் பொருத்துகிறோம். இவற்றில் துளைப்பகுதியை Socket என்கிறோம். ஒரு சாதனம் அல்லது கம்பிவடத்தின் முனைப்பகுதி நுழைந்து பொருந்துகின்ற வாய்ப்பகுதி என்பதால், Socket என்பதைத் தமிழில் பொருத்துவாய் என்கிறோம். ஆனால், பிணையத்தில் தகவல் பரிமாற்றம் தொடங்குவதற்கு முன், இரு முனைகளிலுமுள்ள சாதனங்கள், சரியாகச் சொல்வதெனில், இரு முனைகளிலுமுள்ள கணிப்பொறிகளில் செயல்படும் பயன்பாட்டு நிரல்கள், தமக்கிடையே தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் முன்பு, ஒரு தருக்கநிலை இணைப்பை (logical connection) ஏற்படுத்திக் கொள்கின்றன. அந்தத் தருக்க இணைப்பின் இருபுறமுமுள்ள, கருத்தியலான (abstract) முனைகளே Socket எனப்படுகின்றன. பருநிலை இணைப்பில் (physical connection) பயன்படுத்தப்படும் பொருத்துவாய் என்னும் சொல்லை, தருக்கநிலை இணைப்பில் (logical connection) கருத்தியலான முனைகளுக்குப் பயன்படுத்துவது அவ்வளவு பொருத்தமாக இல்லை. என்னுடைய நூலில் நான் இணைப்புமுனை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். ஆனாலும், இன்னும் சிறந்தவொரு பொருத்தமான சொல்லைக் கண்டறிய வேண்டும் என்று கருதுகிறேன்.

இதுபோலவே, Gateway என்னும் சொல்லைப் பிணையத் தொழில்நுட்பத்தில், பிணைய வன்பொருள்கள், பிணைய மென்பொருள்கள் ஆகிய இரண்டைப் பற்றிப் பேசும்போதும் எதிர் கொள்கிறோம். Gateway என்னும் சொல் நுழைவாயில் என்னும் பொருளைத் தருகிறது. இரண்டு பிணையங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடைபெறப் பல்வேறு சாதனங்கள் பயன்படுகின்றன. ஒத்தவகைப் பிணையங்களுக்கு இடையே, அனுப்பப்படும் தகவலைச் சரியான பாதையில் திசைவிக்க Router என்னும் சாதனம் பயன்படுகிறது. எனவே, அதனைத் திசைவி என்கிறோம். முற்றிலும் வேறுபட்ட பிணையங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்துக்கு Gateway பயன்படுகிறது. இது ஒரு சிறப்புவகைத் திசைவி ஆகும். அதனை, நுழைவாயில் என நேரடிப் பொருளில் அழைக்காமல், ஒரு சாதனத்தைக் குறிப்பதற்கு ஏற்றவாறு, திசைவி என்ற சொல்லுக்கு இசைந்தவாறு, நுழைவி என்ற சொல்லால் குறிக்கிறோம். ஆனால், அதேவேளையில், பிணைய மென்பொருளான நெறிமுறைகளைப் பற்றிப் படிக்கும்போது, இரண்டு தன்னாட்சிப் பிணைய முறைமைகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில், Border Gateway Protocol, Interior Gateway Protocol, Exterior Gateway Protocol என்றெல்லாம் படிக்கிறோம். இவற்றில் Gateway என்ற சொல் ஒரு சாதனத்தைச் சுட்டவில்லை. சாதனத்தின் கருத்தியலான தன்மையையே சுட்டுகிறது. எனவே, இங்கே நுழைவி என்ற சொல்லைவிட நுழைவாயில் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கிறது. Border Gateway Protocol என்பதை எல்லை நுழைவாயில் நெறிமுறை என்று குறிப்பிடுவதே அதன் பொருளைத் துல்லியமாக வெளிப்படுத்துவதாய் உள்ளது.

Distribution என்னும் சொல் கணிப்பொறியியலில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. Distributed Systems, Distributed Database, Distributed Services என்றெல்லாம் பேசப்படுகிறது. இங்கெல்லாம் Distribution என்பதற்குப் பொதுவாகப் பகிர்மானம் என்றே பொருள் கொள்கிறோம். பகிர்மான முறைமைகள் அல்லது பகிர்ந்தமை முறைமைகள், பகிர்ந்தமை தரவுத்தளம், பகிர்ந்தமை சேவைகள் என்று குறிப்பிடுகிறோம். இங்கெல்லாம் பகிர்மானம் என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்ட பகிர்ந்தமை என்னும் சொல் பொருத்தமாகவே இருக்கிறது.

பிணையப் பாதுகாப்பு பற்றிப் படிக்கும்போது, ஒரு நிறுவனத்தின் எதிரிகள் அந்நிறுவனப் பிணையத்தின்மீது தொடுக்கும் பல்வேறு வகையான தாக்குதல்கள் பற்றிப் படிக்கிறோம். அவற்றுள், சேவை-மறுப்புத் தாக்குதல் (Denial of Service Attack) என்பது ஒருவகையான தாக்குதல் ஆகும். சுருக்கமாக, டிஓஎஸ் தாக்குதல் என்று கூறுவர். பிணையங்களில் நுகர்வி (Client), வழங்கி (Server) கணிப்பொறிகளுக்கு இடையே, பொதுவாக, கோரிக்கை-பதிலுரை என்ற வடிவிலேயே தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. ஒரு நிறுவனத்தின் பிணையத்தைத் தாக்க நினைப்போர், அந்நிறுவன வழங்கிக்குப் போலியான கோரிக்கைகளைப் பல்லாயிரக் கணக்கில் அடுத்தடுத்துத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பர். வழங்கியானது, அத்தனை கோரிக்கைகளுக்கும் பதிலுரை வழங்க முடியாமல் திக்குமுக்காடும். அந்த நேரத்தில் வழக்கமான பயனர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குப் பதிலுரை அனுப்ப முடியாமல் வழங்கி திணறிப் போகும். உண்மையான பயனர்களுக்கு நியாயமான சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்படும். அவர்களுக்கு வழக்கமான சேவைகள் மறுக்கப்படுவதால் இது சேவை-மறுப்புத் தாக்குதல் ஆயிற்று.

சில வேளைகளில் இந்தத் தாக்குதலை எதிரிகள் கடுமை ஆக்குவர். ஒரு கணிப்பொறியிலிருந்து ஒருவர் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, எதிரிக் குழுவைச் சேர்ந்த பலநூறு பேர், உலகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும், முன்பே திட்டமிட்டபடி, ஒரே நேரத்தில் சேவை மறுப்புத் தாக்குதலைத் தொடுப்பர். இவ்வாறு பல முனைகளிலிருந்து தொடுக்கப்படும் சேவை மறுப்புத் தாக்குதல் ஆங்கிலத்தில் Distributed Denial of Service Attack (DDoS) எனப்படுகிறது. இதைத் தமிழில் எப்படிச் சொல்வது? பகிர்ந்தமை சேவை மறுப்புத் தாக்குதல் எனலாமா? அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை அல்லவா? பல்முனைச் சேவை-மறுப்புத் தாக்குதல் என்று கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆங்கிலச் சொல்தொடரில் உள்ளடங்கியுள்ள பொருளும் தெளிவாகப் புலப்படும்.

எனவே, தகவல் தொழில்நுட்பப் பணிக்குழு வகுத்துத் தந்த கலைச்சொல்லாக்க உத்தியின்படி, ஆங்கிலக் கலைச்சொல்லின் நேரடியான மொழிபெயர்ப்பாக இல்லாமல், அது உணர்த்துகின்ற உண்மையான பொருளைத் துல்லியமாக வெளிக்கொணருமாறு, இடம், பொருள், ஏவல் அறிந்து, தமிழ்க் கலைச்சொல்லை உருவாக்குவதே சிறந்த நடைமுறையாக இருக்கும். அவ்வாறு, உண்மைமையான பொருளை வெளிக்கொணருமாறு கலைச்சொற்களை உருவாக்கக் களம்சார்ந்த புலமை (Domain Knowledge) கட்டாயத் தேவை என்பது, இதுகாறும் நாம் பார்த்த எடுத்துக்காட்டுகளின் மூலம் எளிதில் புலனாகும்.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்