மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை

[மைக்ரோசாஃப்டின் பாஷா இந்தியா வலையகத்தில் வெளியான பேட்டி]

கணினி பற்றிய தகவல்களை எளிமையாக மக்களிடம் எடுத்து செல்வதற்கு ஒரு வழி, அந்த தகவல்கள் அனைத்தும் அவரவருடைய தாய்மொழியில் இருக்க வேண்டும். தமிழ் மொழியைப் பொருத்தவரையில் இந்தப் பணியை பலர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தப் பணியை செய்வதில் முன்னோடியாக இருந்து வருகிறவர் மு. சிவலிங்கம் அவர்கள். 1990 ஆம் ஆண்டு முதலே கணினி பற்றி செய்திகளை தமிழில் பத்திரிக்கைகளிலும், நாளேடுகளிலும் எழுதி தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்று இன்று வரையில் சிறப்பாக தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். இவரது தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. மேலும், கலைச்சொல்லாக்க பணிகளையும் செய்து வருகிறார். இவரை ஒரு காலைப் பொழுதில் சந்தித்ததில் தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அவரிடம்...

உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேடசந்தூர், படித்து முடித்தவுடன் தொலைபேசி துறையில் வேலை கிடைத்து சென்னைக்கு வரும் வாய்ப்பு அமைந்தது. இன்று வரை அதில் பணிபுரிந்து கொண்டே கணினியை பற்றி எளிதாக தெரிந்து கொள்ள தமிழ் வழியாக பல புத்தகங்களும், பத்திரிக்கைகளில் கட்டுரைகளையும் எழுதி வருகிறேன். மேலும், முதுகலை சட்டம் (எம்எல்), பின் தொலைதூர கல்வியில் எம்ஏ தமிழ், எம்பிஏ, எம்சிஏ போன்ற பட்டங்களும் பெற்றுள்ளேன்.

இவ்வாறு பல துறைகளை பற்றி பயின்றாலும் கணினித்துறையி்ல் உங்களுக்கு பரீட்சயம் எவ்வாறு ஏற்பட்டது?

முன்பு தினமலர் நாளேட்டில் வேலைவாய்ப்பு மலர் என்ற இலவச இணைப்பு வந்தது. அதனை உருவாக்கும் பணியில் சில நண்பர்களுடன் சேர்ந்து நானும் பகுதி நேரமாக பணிபுரிந்தேன். அப்போது ஒரு முறை கணினியைப் பற்றி ஒரு கட்டுரையை தமிழில் எழுதினேன். அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. எனவே, மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது டாஸ் இயக்கத்தளமே இருந்தது. எங்கள் அலுவலகத்தில் கணினி இருந்ததால் அதில் அலுவலக பணிகள் தவிர, மற்ற நேரங்களில் ஒவ்வொரு டாஸ் கட்டளைகளை கொடுத்து பல புதிய உத்திகளை எல்லாம் நானே சொந்தமாக கற்றுக்கொண்டேன். ஏனெனில், அன்றைய காலகட்டத்தில் இதற்காக புத்தகங்கள் எதுவும் இல்லை. இவ்வாறு சொந்தமாக கற்ற விஷயங்களை தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு எழுதி வந்தேன். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், இது தமிழ் சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

நீங்கள் தொடர்ந்து தமிழில் கணினி சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறீர்கள். அவை எல்லாம் ஆங்கில மொழி பெயர்ப்பா அல்லது சொந்தமாகவே எழுதுகிறீர்களா?

பலர் ஆங்கில மொழி பெயர்ப்பு என நினைக்கிறார்கள். "சி" மொழியை தமிழ் கம்ப்யூட்டர் என்ற பத்திரிக்கைக்குத் தொடராக எழுதி வந்தேன். அதில் நான் பயன்படுத்திய உத்தி மொழி பெயர்ப்பு அல்ல. ஒவ்வொரு நிரலாக்கங்களையும் கணினியில் இயக்கி அவற்றின் தீர்வுகளையே கொடுத்துள்ளேன். அதே போல டிபேஸ் வழியாக "சி" என்ற புத்தகத்தில் பல உதாரணங்கள் சொந்தமாகவே என்னால் செய்யப்பட்டு எழுதப்பட்டதாகும். இந்த உதாரணங்களை வேறு எந்த புத்தகத்திலும் பார்க்க முடியாது. நான் தமிழில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பலர் கேட்டார்கள். அந்த அளவுக்கு எளிமையாக இருக்கும் வகையில் எழுதியிருந்தேன்.

இது தவிர வேறு பணிகள் என்னென்ன செய்திருக்கிறீர்கள்?

நான் 1990 ஆம் ஆண்டே கணினி வாங்கிவிட்டேன். எல்லோருக்கும் நான் சொல்லுவது என்னவென்றால், ஒவ்வொரு வீட்டிலும் டிவி, ஃபிரிஜ் போன்று கணினியும் இடம்பெற்றிருக்க வேண்டும். 1995 முதல் 2002 வரை எங்கள் தொலைத்தொடர்பு துறையில் மண்டல தொலைத்தொடர்பு பயிற்சி மையத்தில் கணினி விரிவுரையாளராக பகுதி நேரமாக பணி செய்தேன். இது அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கான பயிற்சியாகும். பின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி பயிற்சி மையத்தில் "சி" வகுப்பு எடுத்தேன். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்திற்கு அரசு பாடநூல் எழுதியுள்ளேன்.

தமிழில் கணினி கலைச்சொற்கள் தரப்படுத்தப்படாமல் இருந்தது. அதனை தரப்படுத்தும் பணிக்கு தமிழக அரசின் சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் நானும் ஒருவன். அதன் முதல் கட்டமாக கணினியில் பொதுவாக பயன்படுத்தப்படும் சுமார் 8000 வார்த்தைகளை தரப்படுத்தினோம்.

கலைச்சொல்லாக்கம் என்று சொன்னீர்கள். இதில் எவ்வாறு ஈடுபாடு வந்தது?

நான் இளங்கலை சட்டம் பயிலும் போது பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தது. ஆனால் தேர்வு மட்டும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். தமிழில் எழுதினால் மற்ற எல்லா தாள்களையும் தமிழிலேயே எழுத வேண்டு்ம். எனவே, எல்லோரும் ஆங்கிலத்திலேயே தான் எழுதுவார்கள். நான் தமிழில் எழுத ஆரம்பித்தேன். அவ்வாறு தமிழில் எழுதும் போது அதில் வரும் சில சட்ட நுணுக்கமான வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்த்து அடைப்புக்குறிக்குள் அதற்கான ஆங்கில வார்த்தையும் எழுதி விடுவேன். எல்லா தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் கிடைத்தது. தமிழில் நல்ல வளம் இருந்ததால், கணினி தொடர்பான கட்டுரைகள் எழுதும் போதும் அவற்றின் கலைச்சொற்களை உருவாக்கும் போது மிகவும் உதவியாக இருந்தது.

உங்கள் கலைசொல்லாக்க அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்

முதலில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கலைச்சொல்லாக்கம் என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். இப்போது, நான் நல்ல மொழிபெயர்ப்பாளன், தமிழ் மொழி நன்கு அறிந்தவன் என்பதற்காக எனக்கு தெரியாத ஒரு துறையிலுள்ள சொற்களை மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது. கலைச்சொற்களை உருவாக்க வேண்டிய துறையைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, கணினியில் Bus என்ற வார்த்தைக்கு ஒருவர் பேருந்து என்று மொழிபெயர்ந்திருந்தார். அதே போல, Network என்பதற்கு வலைவேலை என்று கூட சிலர் மொழிபெயர்த்திருந்தனர். எனவே, இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தை அந்தந்த துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால், குறிப்பிட்ட துறையில் தேர்ச்சி பெற்றும், மொழி வளமும் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த துறையில் ஈடுபட வேண்டும்.

நான் உருவாக்கிய கலைச்சொற்கள் என்று எடுத்து கொண்டால், Browse என்பதற்கு உலாவுதல், Network என்பதற்கு பிணையம் போன்ற சொற்களை குறிப்பிடலாம். இன்னும் பல உள்ளன. மேலும், இன்னொரு விஷயம் 1999 ஆண்டு முதல் நடைபெறும் ஒவ்வொரு தமிழ் இணைய மாநாட்டிலும் கலைச்சொல்லாக்கம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம்பெற்று ஏற்கப்பட்டு வருகிறது.

நீங்கள் எழுதிய புத்தகங்கள் என்னென்ன?

டிபேஸ் வழியாக "சி", கம்ப்யூட்டர் இயக்க முறைகள், மின்னஞ்சல், டாஸ் கையேடு, IQ தேர்வுகள் எழுதுவது எப்படி? ஆகிய புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சிஷார்ப் புத்தகம் அச்சில் உள்ளது, "சி" மொழியின் சிறப்பு தன்மைகள் என்ற புத்தகமும், மொழிகளின் அரசி சி++ என்ற புத்தகமும் விரைவில் வரவிருக்கிறது. மேலும், எனது கட்டுரைகள் மனோரமா இயர் புக்கில் 1997 முதல் இன்று வரை வெளிவந்துள்ளது. இடையில் 2004ல் மட்டும் எழுதவில்லை. மனோரமாவை பொருத்தவரையில் பெரும்பாலும், ஒரு முறை எழுதிய எழுத்தாளரை மீண்டும் எழுத அனுமதிப்பதில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

உங்கள் அனுபவத்திலிருந்து இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

திறமை இருந்தால் வாய்ப்புகள் தானே தேடி வரும். எனவே, எந்த துறையில் நமக்கு திறமை இருக்கிறதோ அதில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால், நாம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் வாய்ப்புகள் தேடி வரும். நன்றி.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்