மு.சிவலிங்கம் வலையகம்

சி-மொழிப் பாடங்கள்
 

பாடம்-3
சி நிரலைச் செயல்படுத்தல்

சி-மொழியில் ஒரு நிரலை எழுதிச் செயல்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம். சி-மொழியில் ஜோர்டெக்-சி, போர்லாண்டு-சி, மைக்ரோசாஃப்ட்-சி, டர்போ-சி என்று எத்தனையோ வகைகளும், ஒவ்வொன்றிலும் பல்வேறு பதிப்புகளும் உள்ளன. இவை எல்லாம் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கிய சி-மொழிக்கான கம்ப்பைலர்கள். இவையனைத்தும் ரிட்சி உருவாக்கிய அடிப்படையான சி-மொழியின் இலக்கணப்படி அமைந்தவை.

நாம் எழுதும் சி-மொழி நிரலை ஏதேனும் ஒரு கம்ப்பைலரில் கம்ப்பைல் செய்து பிறகுதான் இயக்கிப் பார்க்க முடியும். கம்ப்பைலர்களில் பின்பற்றப்படும் வழிமுறைகளில் மிகச்சிறு வேறுபாடுகள் இருக்க முடியும். நமது பாடங்களைப் பொறுத்தவரை டர்போ-சி (Turbo C) கம்ப்பைலரை அடிப்படையாகக் கொண்டே நிரல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருத்துருக்களும் விளக்கப்பட்டுள்ளன. ஒன்றில் நல்ல அனுபவம் பெற்று விட்டால், மற்றதில் பணிபுரிவது எளிதாகவே இருக்கும்.

 நிரலை எழுதிச் சேமித்தல்

டர்போ சி-யின் ஃபைல்கள் TC என்னும் டைரக்டரியில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த டைரக்டரியில் இருந்துகொண்டு,

C : \TC>TC WELCOME

என்று கட்டளை கொடுங்கள். திரையில் டர்போ சி-யின் ஒருங்கிணைந்த புரோகிராம் உருவாக்க சூழலின் (Integrated Development Environment) மெனுவும் புரோகிராம் எடிட்டரும் தோன்றும்.

டர்போ சி-யின் எடிட்டரில் கீழ்க்காணும் புரோகிராமை தட்டச்சு செய்யுங்கள்:

/* Program No.1.1 */
/* WELCOME.C */
#include < stdio.h >
main()
{
      printf("Welcome to C!");
}

சிறிய எழுத்து, பெரிய எழுத்து, அடைப்புக் குறிகள், அரைப்புள்ளி ஆகியவற்றை எதையும் மாற்றாமல் மறக்காமல் அப்படியே தட்டச்சு செய்யுங்கள். ஏன் என்று பிறகு விளக்கமாகப் பார்ப்போம். நிரலைத் தட்டச்சிட்டு முடித்த பிறகு F2 விசையை அழுத்துங்கள். உங்கள் நிரல் WELCOME.C என்ற பெயரில் நிலைவட்டில் சேமிக்கப்பட்டுவிடும். C என்ற வகைப்பெயரை ((Extension) டர்போ-சி தானாகவே கோப்பின் பெயரில் ஒட்ட வைத்துக்கொள்ளும்.

 நிரலைக் கம்ப்பைல் செய்து செயல்படுத்தல்

கோப்புச் சேமிக்கப்பட்ட பின்னும் டீசி எடிட்டர் திரை மறையாமல் அப்படியே இருக்கும். இப்போது F9 விசையை அழுத்துங்கள். திரைக்குள் ஒரு குட்டித்திரை தோன்றும். கம்ப்பைலிங், லிங்க்கிங் ஆகிய இரண்டு வேலைகளும் கடகடவென்று நடந்து முடியும். WELCOME.EXE என்ற கோப்பு உருவாகி விடும். Success என்ற செய்தி திரையில் தெரியும். Press any key என்ற செய்தி மின்னிக் கொண்டிருக்கும். நீங்கள் Alt+F கீகளை ஒருசேர அழுத்துங்கள். மேலே முதல் வரியிலுள்ள மெனுத் தேர்வுகளில் File என்பதில் உள்ள துணைமெனுப் பட்டியல் திரையில் தோன்றும். இப்போது O (ஓ) என்னும் எழுத்தைத் தட்டுங்கள். அது ’ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஷெல்லைக்’ (OS Shell) குறிக்கிறது.

அதாவது, நீங்கள் தற்காலிகமாக டீசி பணிப் பரப்பைவிட்டு நீங்கி, டாஸ் பணிப் பரப்பிற்கு வந்திருக்கிறீர்கள் என்று பொருள். திரையில் மைக்ரோசாஃப்டின் பதிப்புச் செய்தியும், C:\TC> என்ற டாஸ் சின்னமும் தோன்றும். இப்போது,

C : \ TC > WELCOME

என்று கட்டளை கொடுங்கள். சுத்தமான திரையின் மத்தியில்,

Welcome to C!

என்ற வாசகம் தோன்றும். அருகில் C : \TC> என்னும் டாஸ் சின்னம் இருக்கும். இப்போது EXIT என்ற கட்டளை கொடுங்கள். மீண்டும் டீசி எடிட்டரில் உங்கள் நிரல் தோன்றும். ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், செய்யலாம். முன்பு சொன்னது போலவே F2 விசையை அழுத்தி நிரலைச் சேமிக்கலாம். F9 மூலம் .EXE கோப்பினை உருவாக்கலாம். Alt+F+O மூலம் ஓஎஸ் ஷெல்லுக்கு வந்து நிரலைச் செயல்படுத்தலாம்.

 மாற்று வழிமுறை

சி-மொழி நிரலை இயக்கிப் பார்க்க இன்னொரு வழிமுறையும் உள்ளது. நிரலை எழுதி முடித்தவுடன் Ctrl மற்றும் F9 கீகளை ஒருசேர அழுத்துங்கள். நிரல் கம்ப்பைல் ஆகி, லிங்க் ஆகி, .EXE கோப்பு உருவாகி முடிந்துவிடும். ஆனால் உடனே ஐடிஇ-க்கே திரும்பிவிடும். நிரலின் வெளியீட்டைப் பார்க்க வேண்டுமானால் Alt+F5 விசைகளை அழுத்த வேண்டும். டாஸ் திரையில் வெளியீடு தெரியும். என்டர் விசையைத் தட்டினால் மீண்டும் ஐடிஇ-க்கே திரும்பலாம். பலரும் இந்த முறையையே பின்பற்றுகிறார்கள். ஆனால், சில சி-மொழி நிரல்களை இந்த முறையில் இயக்கிப் பார்க்க முடியாது. எனவே, F9 அழுத்திக் கம்ப்பைல் / லிங்க் செய்தபின், Alt+F+O அழுத்தி, டாஸ் சூழலுக்கு வந்து, நிரலை இயக்கிப் பார்க்கும் முறையே சிறந்த முறையாகும்.

டீசி எடிட்டரில் இருக்கும்போது Alt+F விசைகளை ஒருசேர அழுத்தி, துணைமெனு வந்த பிறகு L என்ற எழுத்தை அழுத்தி, ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள ஒரு நிரலின் பெயரை உள்ளிட்டு, அதனை எடிட்டரில் வரவழைக்கலாம். L-க்குப் பதில் N கீயை அழுத்திப் புதிய நிரலை எழுதலாம். எழுதி முடித்துச் சேமிக்கும் முன்பாகப் புதிய நிரலுக்குப் பெயர் கொடுக்கலாம்.

டீசி பணிப் பரப்பை அதாவது டீசி ஐடிஇ-யை விட்டு வெளியே வருவதற்கு Alt +F விசைகளை ஒரு சேர அழுத்திப் பின் Q விசையைத் தட்டுங்கள். திரையில் C:\TC> தோன்றும். விண்டோஸிலிருந்து TC-க்குச் சென்றிருப்பின் மீண்டும் விண்டோஸ் முகப்புக்கு வந்து விடலாம். இப்போது டீசியைவிட்டு நிரந்தரமாக வெளியே வந்துவிட்டீர்கள்.

 வேறு எடிட்டரைப் பயன்படுத்தல்

சி-மொழி நிரலை நோட்பேடு போன்ற வேறு எந்த எடிட்டரில் வேண்டுமானாலும் எழுதலாம். வேறு எடிட்டரில் எழுதும்போது .C என்ற வகைப்பெயர் கொடுத்து, WELCOME.C என்று நிரல் கோப்பினை உருவாக்குங்கள். பிறகு, TC டைரக்டரிக்கு வந்து,

C:\TC>TCC WELCOME

என்று கட்டளை கொடுங்கள். ஒரே நொடியில் நிரல் கம்ப்பைல், லிங்க் செய்யப்பட்டு, WELCOME.EXE என்ற கோப்பு உருவாகிவிடும். ஆனால், டீசி ஐடிஇ-யில் நிரல் எழுதிக் கம்ப்பைல் செய்யும்போது, நிரலில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்துவதற்கு ஐடிஇ-யின் சில தனிச்சிறப்பான வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்