மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

கணிப்பொறி: சாதித்தவையும் சாத்தியப்பாடுகளும்

[மனோரமா தமிழ் இயர்புக் 2008-இல் வெளியான கட்டுரை]

மனித நாகரிக வரலாற்றில் தீயின் கண்டுபிடிப்பு திருப்புமுனை ஆனது. சக்கரத்தின் கண்டுபிடிப்பு சமூக வாழ்க்கையைச் சற்றே புரட்டிப் போட்டது. நீராவி, தொழிற்புரட்சிக்கு வித்திட்டது. மின்சாரம், அறிவியல் புரட்சிக்கு அடித்தளம் இட்டது. கணிப்பொறியின் கண்டுபிடிப்போ மனிதகுல வரலாற்றில் ஒரு புதுயுகத்துக்குப் பூபாளம் மீட்டியுள்ளது. தகவல் யுகத்தின் (Information Era) தலைவாசல் திறக்கப்பட்டுள்ளது.

கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் காலத்தை மீறிய வளர்ச்சி மனித வாழ்க்கைக்கு ஒரு புதிய பொருள்விளக்கத்தை அளித்துள்ளது. மனித குலத்தின் இலட்சியங்களுக்கும் இலக்குகளுக்கும் புதிய எல்லைகளைக் காட்டியுள்ளது. ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையத்தின் வரவு அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை அப்படியே புரட்டிப் போட்டுள்ளது. விரல் நுனியில் தகவல்கள் - விரல்சொடுக்கும் நேரத்தில் தகவல் பரிமாற்றம். பூமிக் கோளத்தில் நாடுகளின் எல்லைகள் மறைந்து போயின. கடல்களின் பரப்பு காணாமல் போனது. தொலைவு என்பது தொலைந்து போனது. உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிப் போனது.

கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் வரலாற்றில் ஏற்பட்ட முக்கிய வளர்ச்சிப் போக்குகளை அறிந்துகொண்டு, கணிப்பொறியும் இணையமும் இன்றுவரை சாதித்தவற்றைப் புரட்டிப் பார்ப்போம். இனி வருங்காலத்தில் என்னவெல்லாம் சாத்தியப்படும் என்பதையும் அறிந்து கொள்வோம்.

 கணிப்பொறி வரலாறு

உலகின் முதல் கணிப்பொறி ‘மார்க்-1’ எனலாம். 1944-ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்துக்காக ஹார்வார்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஹோவார்டு உருவாக்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1946-இல் பென்சில்வேனியப் பல்கலைக் கழக மின்பொறியியல் பேராசிரியர்கள் பிரஸ்பெர் எக்கெர்ட், ஜான் மவுக்ளி இருவரும் சேர்ந்து ‘எனியாக்’ (ENIAC - Electronic Numerical Interpreter And Calculator) என்னும் கணிப்பொறியை உருவாக்கினர். 1949-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ‘எட்சாக்’ (EDSAC - Electronic Delayed Storage Automatic Computer) என்னும் கணிப்பொறியும், அதனைத் தொடர்ந்து மூர் கல்லூரியில் ’எட்வாக்’ (EDVAC - Electronic Discrete Variable Automatic Computer) என்னும் கணிப்பொறியும் உருவாயின. அதுவரையில் கணிப்பொறி என்பது ஆய்வுக் கூடங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் ஓர் ஆராய்ச்சிப் பொருளாகவே இருந்து வந்தது.

முதன்முதலாக 1951-ஆம் ஆண்டில்தான் கணிப்பொறி என்பது விற்பனைப் பொருளாக உற்பத்தி செய்யப்பட்டது. ‘எனியாக்’ கணிப்பொறியை வடிவமைத்த அதே பேராசிரியர்கள் வடிவமைத்து, ரேமிங்டன் ரேண்டு நிறுவனம் தயாரித்த ‘யுனிவாக் 1’ (UNIVAC 1: Universal Automatic Computer 1) கணிப்பொறியை அமெரிக்க அரசு விலைக்கு வாங்கி, மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தியது. அதன்பின் ‘ஐபிஎம்-650’ என்னும் கணிப்பொறி விற்பனைக்கு வந்து மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இதுவரையில் உருவாக்கப்பட்ட கணிப்பொறிகள் அனைத்தும் ‘முதல் தலைமுறைக் கணிப்பொறிகள்’ (1944-1955) என்று பாகுபடுத்தப்படுகின்றன. இவற்றை வடிவமைப்பதில் முக்கிய உறுப்பாக ‘வெற்றிடக் குழல்கள்’ (Vacuum Tubes) எனப்படும் வால்வுகள் பயன்படுத்தப்பட்டன.

ஐபிஎம்-70, யுனிவாக் பி-5000, ஜிஇ-635 போன்ற ‘இரண்டாம் தலைமுறைக் கணிப்பொறிகளில்’ (1956-1963) பெரிய பெரிய வெற்றிடக் குழல்களுக்குப் பதிலாக மிகச்சிறிய ‘மின்மப் பெருக்கிகள்’ (Transisters) பயன்படுத்தப்பட்டன. இக்கால கட்டத்தில்தான் ஃபோர்ட்ரான், கோபால் போன்ற கணிப்பொறி மொழிகள் உருவாக்கப்பட்டன. எண்ணற்ற மின்மப் பெருக்கிகள் ஒருங்கிணைக்கப் பட்ட மின்சுற்றுகள் (Integrated Circuits - IC) உட்பொதிக்கப்பட்ட சிலிக்கான் சில்லுகள் மின்னணுத் துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தன. ஐபிஎம் 360/370, ஸ்பெக்ட்ரா-70 போன்ற ‘மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறிகள்’ (1964-1971) ஐசிக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. இவற்றில் முதன்முறையாக விசைப்பலகை (Keyboard), திரையகம் (Monitor), இயக்க முறைமை (Operating System) ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

1971-ஆம் ஆண்டில் நுண்செயலியின் (Microprocessor) கண்டுபிடிப்பு கணிப்பொறி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆயிரக்கணக்கான ஐசிக்கள் உட்பொதிக்கப்பட்ட நுண்செயலியானது, கணிப்பொறியின் மையச் செயலகம் (Central Processing Unit), நினைவகம் (Memory), உள்ளீட்டு-வெளியீட்டுக் கட்டுப்பாடு (Input-Output Control) ஆகிய அனைத்தையும் ஒரே சிலிக்கான் சில்லுவில் உள்ளடக்கியதாக இருந்தது. நுண்செயலியை அடிப்படையாகக் கொண்ட கணிப்பொறிகள் ‘நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகள்’ (1972-இன்றுவரை) என்று அழைக்கப்படுகின்றன.

நூற்றுக்கணக்கான நுண்செயலிகளைக் கொண்ட, ஒரே நேரத்தில் பல செயலாக்கங்களை நிகழ்த்தும் ‘இணைச் செயலாக்கத்’ (Parallel Processing) திறன்கொண்ட கணிப்பொறி அமைப்புகளை ஒருசாராரும், ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) கொண்ட கணிப்பொறி அமைப்புகளை ஒரு சாராரும் ‘ஐந்தாம் தலைமுறைக் கணிப்பொறிகள்’ என்றழைக்கின்றனர். என்றாலும் இன்றுவரை அவையும் நுண்செயலியையே முக்கிய உறுப்பாகக் கொண்டு இயங்குவதால் இன்னும் ஐந்தாம் தலைமுறை உருவாகவில்லை என்பது அறிஞர் பலரின் கருத்து.

 கணிப்பொறிப் புரட்சி

1981-ஆம் ஆண்டு கணிப்பொறி வரலாற்றில் ஐபிஎம், இன்டெல், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் ஒரு புரட்சியைத் தொடங்கி வைத்தன. ஒரு மேசைமீது வைத்துக் கொள்ளக்கூடிய சிறிய, விலைமலிவான, திறன்மிக்க ’சொந்தக் கணிப்பொறிகளை’ (Personal Computers - PC) ஐபிஎம் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இன்டெல் நிறுவனத்தின் நுண்செயலியைக் கொண்ட ஐபிஎம் பிசிக்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘டாஸ்’ (DOS) இயக்க முறைமையில் செயல்பட்டன. பெரிய நிறுவனங்களும் வல்லுநர்களும் மட்டுமே பயன்படுத்தி வந்த கணிப்பொறி என்னும் கருவியை ஒரு சாதாரண மனிதன் சொந்தமாய் வாங்கி வீட்டில் பயன்படுத்தும் நிலை உருவானது.

சி, சி++ போன்ற வலிமைமிக்க கணிப்பொறி நிரலாக்க மொழிகள் (Computer Programming Languages) உருவாக்கப்பட்டன. அவற்றின் துணைகொண்டு சிறுசிறு நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு மென்பொருள் தொகுப்புகள் (Software Packages) உருவாக்கப்பட்டன. சிறுவர்கள், பெரியவர்கள் பொழுதுபோக்காகவும் அறிவுபூர்வமாகவும் விளையாடுவதற்கான கணிப்பொறி விளையாட்டுகளும் உருவாக்கப்பட்டன. அடுத்த கட்டமாய் வரைகலை அடிப்படையிலான பயனர் இடைமுகம் (GUI - Graphical User Interface) உருவாக்கப்பட்டது. கணிப்பொறியில் பணியாற்றக் கட்டளைகள நினைவு வைத்துக் கொள்ளத் தேவையில்லை. திரையில் தோன்றும் குறும்படச் சின்னங்களை (Icons) சுட்டியால் (Mouse) சொடுக்கினால் போதும். கணிப்பொறிப் புலமை அதிகம் இல்லாதோர் உட்பட அனைத்துத் தரப்பினரும் விரும்பிப் பயன்படுத்தும் ஒரு மின்னணு எந்திரமாய் கணிப்பொறி செல்வாக்குப் பெற்றது.

சொந்தக் கணிப்பொறியான மேசைக் கணிப்பொறி (Desktop), மடிக் கணிப்பொறி (Laptop), கையேட்டுக் கணிப்பொறி (Notebook), உள்ளங்கைக் கணிப்பொறி (Palmtop) எனப் பல்வேறு அவதாரங்களை எடுத்தது. இன்றைக்குச் செல்பேசியே (Cellphone) கணிப்பொறியாகவும் செயல்படுகிறது. செல்லுமிடங் களுக்கெல்லாம் கணிப்பொறியைச் சட்டைப் பையில் வைத்து எடுத்துச் செல்ல முடிகிறது.

 நுண்செயலி வளர்ச்சி

கணிப்பொறியின் மையச் செயலகமாய் (Cental Processing Unit) விளங்குவது ‘மைக்ரோபிராசசர்’ எனப்படும் ‘நுண்செயலி’ ஆகும். சுருக்கமாகச் ‘செயலி’ (Processor) என்பர். கணிப்பொறியில் தகவல்கள் அனைத்தும் குறைந்த, அதிக மின்னழுத்தத்தைக் குறியீடாக உணர்த்தும் 0.1 ஆகிய பிட்டுகளின் (bit - கணிப்பொறியியல் தகவல் அளவீட்டில் மீச்சிறு அளவீடு) கோவையாகவே கையாளப்படுகிறது. ஒரு செயலி ஒரே நேரத்தில் எத்தனை பிட்டுகளை எழுத/படிக்க முடியும் என்பது அதன் திறனைக் குறிக்கும். செயலியின் செயல்வேகம் ஹெர்ட்ஸில் (Hertz) அளவிடப்படுகிறது. ஒரு செயலி உள்ளடக்கியுள்ள மின்மப் பெருக்கிகளின் (Transisters) எண்ணிக்கை அதன் செயல்திறனுக்கு உதவுகிறது. தயாரிப்புத் தொழில்நுட்பம் என்பது மைக்ரோ மீட்டர் (ணு - ஒரு மீட்டரில் பத்து இலட்சத்தில் ஒரு பங்கு) அல்லது நானோ மீட்டரில் (nm - ஒரு மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு) குறிப்பிடப் படுகிறது. 1971-ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனம் ‘இன்டெல் 4004’ என்னும் முதல் செயலியை உருவாக்கியது. இது ஒருநேரத்தில் நான்கு பிட்டுகளையே எழுத/படிக்க முடியும். 108 கிலோ ஹெர்ட்ஸில் செயல்பட்டது. 2300 மின்மப் பெருக்கிகளை உள்ளடக்கியது. 10ணு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது.

இன்டெல் நிறுவனம் தொடர்ந்து நுண்செயலியை மேம்படுத்தி வெளியிட்டு வருகிறது. இன்டெல் தவிரப் பிற நிறுவனங்களும் நுண்செயலித் தயாரிப்பில் பெரும் பங்காற்றியுள்ளன. ராக்வெல், டொஷீபா, டெக்ஸாஸ், மோட்டோரோலோ, ஹிடாச்சி, ஜிலாக், சிரிக்ஸ், ஏஎம்டி, நிக்ஸ்ஜென், ஐபிஎம் ஆகிய நிறுவனங்கள் அவற்றுள் சில.

இன்டெல் நிறுவனத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான கார்டன் மூர் 1965-இல் ‘ஒவ்வோர் இரண்டு ஆண்டுகளிலும் ஒற்றைச் சில்லுவில் உள்ளடக்கும் மின்மப் பெருக்கிகளின் எண்ணிக்கை இரு மடங்காகும்’ எனத் தொலைநோக்குப் பார்வையோடு கூறினார். இதனை ‘மூர் விதி’ எனக் கூறுவர். இன்றுவரை மூர் விதி பொய்யாகவில்லை. நாளுக்கு நாள் நுண்செயலியின் உருவ அளவும் விலையும் குறைந்து, வேகமும் திறனும் அதிகரித்து வருகிறது. எடுத்துக் காட்டாக, இன்டெல் நிறுவனம் இதுநாள்வரை தயாரித்து வெளியிட்டுள்ள நுண்செயலிகளின் வேகத்தையும் திறனையும் அட்டவணையில் காண்க:

இன்டெல் நுண்செயலிகளின் வளர்ச்சிப் போக்கு

செயலி		அளவு	செயல்	 மின்மப்	தொழில்	அறிமுக
பெயர்		பிட்டில்	வேகம்	 பெருக்கிகள்	நுட்பம்	ஆண்டு

4004		4-பிட்	108 KHz	 2,300		10µ	1971	
8008		8-பிட்	500 KHz	 3,500		10µ	1972	
8080		8-பிட்	2 MHz	 4,500		10µ	1974	
8086		16-பிட்	5 MHz	 29,000	6µ	1978	
8088		16-பிட்	5 MHz	 29,000	3µ	1979	
80286		16-பிட்	6 MHz	 1,34,000	3µ	1982	
80386		32-பிட்	16 MHz	 2,75,000	1.5µ	1985	
80486		32-பிட்	25 MHz	 12,00,000	1µ	1989	
பென்டியம்	32-பிட்	66 MHz	 31,00,000	0.8µ	1993	
பென்டியம் புரோ	32-பிட்	200 MHz	 55,00,000	0.6µ	1995	
பென்டியம்-II	32-பிட்	300 MHz	 75,00,000	0.25µ	1997	
பென்டியம்-III	32-பிட்	500 MHz	 95,00,000	0.18µ	1999	
பென்டியம்-4	32-பிட்	1.5 GHz	 4,20,00,000	0.18µ	2000	
பென்டியம்-எம்	32-பிட்	1.7 GHz	 5,50,00,000	90nm	2002	
இட்டானியம்-2	64-பிட்	1 GHz	 22,00,00,000	0.13µ	2002	
பென்டியம்-டி	32-பிட்	3.2 GHz	 29,10,00,000	65nm	2005	
கோர் 2 டுயோ	32-பிட்	2.93 GHz 29,10,00,000	65nm	2006	
டூயல்-கோர்
இட்டானியம்-2	64-பிட்	1.66 GHz 172,00,00,000	90nm	2006	
கோர் 2 குவாடு	32-பிட்	2.66 GHz 58,20,00,000	65nm	2007	
கோர் 2 குவாடு
எக்ஸ்ட்ரீம்	32-பிட்	>3 GHz	 82,00,00,000	45nm	2007

 மென்பொருள் வளர்ச்சி

கணிப்பொறியின் முக்கிய வன்பொருளான நுண்செயலியின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் கணிப்பொறியை இயக்குகின்ற மென்பொருள்களும் அதிவேக வளர்ச்சியைக் கண்டன. கணிப்பொறியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள் ‘இயக்க முறைமை’ (Operating System) எனப்படும். கணிப்பொறியில் பயன்படுத்தப்பட்ட முதல் இயக்க முறைமை, சிபி/எம் (CP/M - Control Program for Microprocessor) எனலாம். அடுத்ததாக, ஐபிஎம் பிசிக்களில் ‘டாஸ்’ இயக்க முறைமை பயன்படுத்தப்பட்டது. பத்துப் பதினைந்து கட்டளைகளை நினைவு வைத்துக் கொண்டால் போதும். கணிப்பொறியில் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். கணிப்பொறியின் பயன்பாடு சாதாரண மக்களையும் சென்றடைய டாஸ் இயக்க முறைமையின் எளிமையும் ஒரு காரணம் எனலாம்.

அக்கால கட்டத்தில் திறன்மிக்க பெருமுக (Mainframe) மற்றும் குறுங் (Mini) கணிப்பொறிகளில் ‘யூனிக்ஸ்’ இயக்க முறைமை பயன்பட்டு வந்தது. ஒரு கணிப்பொறியில் ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கானோர் பணிபுரிய இது வழிவகுத்தது. அடுத்து, வரைகலைப் பயனர் இடைமுகம் கொண்ட ‘ஆப்பிள் மெக்கின்டோஷ்’ இயக்க முறைமை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. அதனையொட்டி உருவாக்கப்பட்ட ‘மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்’ இயக்க முறைமை கணிப்பொறிப் பரவலுக்கான இரண்டாம் கட்டப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

1995-ஆம் ஆண்டில் ‘விண்டோஸ் 95’ வெளியிடப்பட்டது. உலகில் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மேசைக் கணிப்பொறிகளில் விண்டோஸ் இயக்க முறைமையே ஆதிக்கம் செலுத்தியது. நிறுவவும் பயன்படுத்தவும் எளிது, ஏராளமான பயன்பாட்டு நிரல்கள் உள்ளிணைக்கப்பட்டது, விலை குறைவு, விலைகொடுத்து வாங்காமல் நகலெடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது ஆகியவையே விண்டோஸ் செல்வாக்குப் பெறக் காரணங்கள் எனலாம். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொடர்ந்து விண்டோஸ் இயக்க முறைமையை மேம்படுத்தி வெளியிட்டு வருகிறது. விண்டோஸ் 95-ஐத் தொடர்ந்து விண்டோஸ் 98, விண்டோஸ் எம்இ, விண்டோஸ் என்டி, விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பீ ஆகிய பதிப்புகளை வெளியிட்டது. 2007-ஆம் ஆண்டில் ‘விண்டோஸ் விஸ்டா’ வெளியாகியுள்ளது.

‘டாஸ்’ இயக்க முறைமை காலந்தொட்டே அலுவலகப் பயன்பாடுகளுக்கென ஆவணங்களைக் கையாள சொல்செயலி (Word Processor), நிதியியல் கணக்கீடுகளுக்கு விரிதாள் (Spreadsheet), தரவுச் சேமிப்பு மற்றும் செயலாக்கத்துக்குத் தரவுத்தளம் (Database) - ஆகிய மென்பொருள் தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. விண்டோஸ் வருகைக்குப்பின் அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ‘அலுவலகக் கூட்டுத் தொகுப்பு’ (Office Suite) என்ற பெயரில் வெளியிடப்பட்டன. லோட்டஸ் ஸ்மார்ட்சூட், கோரல் வேர்டு பெர்ஃபெக்ட், ஸ்டார் ஆஃபீஸ், ஓப்பன் ஆஃபீஸ், மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் போன்றவை அவற்றுள் சில. இவற்றுள் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸை உலக அளவில் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகின்றனர்.

மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ், வேர்டு (சொல்செயலி), எக்செல் (விரிதாள்), அக்செஸ் (தரவுத்தளம்), பவர்பாயின்ட் (முன்வைப்பு - Presentation), அவுட்லுக் (மின்னஞ்சல்) ஆகிய மென்பொருள்களை உள்ளடக்கியுள்ளது. ‘மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2007’ அண்மைக்காலப் பதிப்பாகும். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், அரசு அலுவலகங்கள், சிறிய பெரிய நிறுவனங்கள், தொழிலகங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கணிப்பொறியின் பரவலுக்கு அலுவலகப் பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புகள் முக்கிய காரணமாய் அமைந்தன.

மூதாதையினரின் அறிவுச் செல்வங்கள் எவ்வாறு மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுவாக இருக்கின்றனவோ அதுபோல ‘மென்பொருள்’ என்பதும் அனைவருக்கும் பொதுவானது. மென்பொருளை உருவாக்கியவர்கள் அதனைச் சொந்தம் கொண்டாடக் கூடாது. விலைக்கு விற்கக் கூடாது. மூலக் குறிமுறையை (Source Code) இரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடாது. எவர் வேண்டுமானாலும் அவர் விருப்பப்படி அதனை மாற்றியமைத்துப் பயன்படுத்தும் உரிமை இருக்க வேண்டும். இத்தகைய கருத்துடையோர் ஓர் இயக்கமாகவே உருவாயினர். மென்பொருள் துறையில் மைக்ரோசாஃப்டின் ஆதிக்கத்தை விரும்பாதோரும் இந்த இயக்கத்தை ஆதரித்தனர். முதலில் ஜிஎன்யு (GNU - GNU Not Unix) என்ற பெயரில் இவ்வியக்கம் தொடங்கப்பட்டது. அக்காலத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த யூனிக்ஸ் இயக்க முறைமைக்கு மாற்றாக ஓர் இயக்க முறைமையை உருவாக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்தது.

1990-களின் தொடக்கத்தில் ல¦னஸ் டோர்வால்டு ‘ல¦னக்ஸ்’ இயக்க முறைமைக்கான உட்கருவை உருவாக்கினார். உலகெங்கிலுமுள்ள மென்பொருள் வல்லுநர்கள் பலரின் பங்களிப்பில் ‘ல¦னக்ஸ்’ இயக்க முறைமை முழுமை பெற்றது. அது யூனிக்ஸ் இயக்க முறைமையின் இன்னொரு வடிவமாகவே விளங்கியது. இதனை விலைகொடுத்து வாங்காமல் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். எவருடைய அனுமதியும் இல்லாமல் இதன் மூலக் குறிமுறையை திருத்தி, மாற்றி, மேம்படுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடக்கத்தில் அனுபவம் மிக்க கணிப்பொறி வல்லுநர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இப்போது இதன் செயல்பாடும், இடைமுகமும் விண்டோஸ் போலவே உள்ளதால் சாதாரண மக்களும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது விண்டோஸைவிடப் பாதுகாப்பு மற்றும் நிலையுறுதி மிக்கது எனக் கருதப்படுகிறது.

லினக்ஸ் இயக்க முறைமை போன்றே ‘திறந்தநிலைக் குறிமுறை மென்பொருள்’ (Open Source Software) வகையில் அலுவலகக் கூட்டுத் தொகுப்புகளும் வெளிடப்பட்டுள்ளன. அவற்றுள், ‘ஸ்டார் ஆஃபீஸ்’, ‘ஓப்பன் ஆஃபீஸ்’ ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இவை விண்டோஸ், ல¦னக்ஸ் ஆகிய இரண்டு இயக்க முறைமைகளிலுமே செயல்படக் கூடியவை என்பதால் இவற்றைப் பலரும் விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர்.

 கணிப்பொறி நிரலாக்க மொழிகளின் வளர்ச்சி

நாம் இடும் பணிகளைக் கணிப்பொறியின் வன்பொருள்களே செய்து முடிக்கின்றன. எனவே நமது பணிகளைச் செய்து முடிக்க, அவற்றுக்குப் புரியும் மொழியில் ஆணை இடவேண்டும். கணிப்பொறியின் வன்பொருளுக்குப் புரிந்த ஒரே மொழி மின்சாரம் மட்டுமே. நுண்செயலியில் உள்ள மின்மப் பெருக்கிகள் மின்னழுத்தத்தின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. எனவே குறைந்த/அதிக மின்னழுத்தத்தைக் குறிக்கும் 0, 1 குறியீடுகளால் ஆன எந்திர மொழி (Machine Language) பயன்படுத்தப்பட்டது. எந்திர மொழியை ‘இரும மொழி’ (Binary Language) என்றும் அழைப்பர்.

கணிப்பொறிக்குத் தரவேண்டிய கட்டளைகள் அனைத்தையும் இரும மொழியில் உணர்த்துவது எளிதன்று. எனவே ஒவ்வொரு நுண்செயலியிலும் செயல்படுத்தக் கூடிய ஆணைகள் ‘நினைவிக் குறிமுறைகளால்’ (mnemonic codes) வடிவமைக்கப்பட்டன. அத்தகைய ஆணைகளின் தொகுதி (Instruction Set) ‘சில்லு மொழி’ (Assembly Language) எனப்பட்டது. சில்லுமொழி ஆணைகளை எந்திர மொழியில் மாற்றித்தர சில்லுமொழி பெயர்ப்பி (Assembler) பயன்படுத் தப்பட்டது. நீண்ட நிரல்களை சில்லுமொழியில் எழுதுவது கடினம். எனவே, அடுத்த கட்டமாக, ஆங்கில மொழிச் சொற்களையும் சொல்தொடர்களையும் கட்டளை வடிவங்களாகக் கொண்ட உயர்நிலை மொழிகள் (High Leval Languages) உருவாக்கப்பட்டன. இவற்றைக் கணிப்பொறி நிரலாக்க மொழிகள் (Computer Programming Language) என்றும் கூறுவர். இவற்றின் கட்டளைகளை எந்திர மொழியில் மாற்றித்தர ஆணைபெயர்ப்பி (Interpreter), நிரல்பெயர்ப்பி (Compiler) என்னும் மொழிபெயர்ப்பிகள் பயன்படுத்தப்பட்டன.

கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சிப் போக்கில் நிரலாக்க மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொடக்க காலத்தில் குறிப்பிட்ட பணிக்கான சிறப்புப்பயன் (Special Purpose) மொழிகளே உருவாக்கப்பட்டன. அவ்வாறு கணித, அறிவியல், பொறியியல் பயன்பாடுகளுக்கென 1954-இல் உருவாக்கப்பட்ட ‘ஃபோர்ட்ரான்’ மொழியை முதல் நிரலாக்க மொழி எனலாம். அடுத்து, வணிகப் பயன்பாடுகளுக்கென ‘கோபால்’ மொழி உருவாக்கப்பட்டது (1960). 1964-இல் உருவாக்கப்பட்ட ‘பேசிக்’ ஒரு பொதுப்பயன் (General Purpose) மொழியாகும். இவையனைத்தும் கட்டமைப்பிலா மொழிகள் (Non-Structural Languages) எனப்பட்டன. நீண்ட நிரலாயினும் ஒற்றை நிரலாகவே எழுத வேண்டும்.

நீண்ட நிரல்களை சிறுசிறு செயல்முறைகளாகவும் (Procedures) செயல்கூறுகளாகவும் (Functions) தனித்தனியே எழுதி ஒன்றுசேர்க்கும் கட்டமைப்பு மொழிகள் (Structural Languages) அடுத்து உருவாயின. அவற்றுள் முதலாவது ‘பாஸ்கல்’ மொழியாகும் (1970). அடுத்து, 1972-இல் டென்னிஸ் ரிட்சி அவர்களால் உருவாக்கப்பட்ட சி-மொழி மொழிகளிலேயே சிறந்ததெனக் கருதப்படுகிறது. பொதுவாகக் கணிப்பொறி மொழிகள் காலப்போக்கில் செல்வாக்கு இழந்து விடுவதுண்டு. ஆனால், உருவான காலந்தொட்டு இன்றுவரை சீரிளமைத் திறன்குன்றாமல் செல்வாக்குடன் சி-மொழி திகழ்கிறது. அதன்பிறகு செல்வாக்குப் பெற்ற அனைத்து மொழிகளும் சி-மொழியின் வாரிசுகளே. இயக்க முறைமைகளும், பயன்பாட்டுத் தொகுப்புகளும், புதிய மொழிகளின் ஆணைபெயர்ப்பிகளும், நிரல்பெயர்ப்பிகளும் சி-மொழியில் உருவாக்கப்பட்டுள்ளன.

கணிப்பொறிப் பயன்பாடுகள் விரிவடைந்தன. நடைமுறை வாழ்க்கையில் காணும் பொருள்களை அவற்றின் பண்பியல்புகளோடு கணிப்பொறி நிரலில் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது ‘பொருள்நோக்கு நிரலாக்க மொழிகள்’ (Object Oriented Programming Languages) உருவாக்கப்பட்டன. சி-மொழியை மேம்படுத்தி 1983-இல் ஜேர்ன் ஸ்ட்ரௌஸ்ட்ரப் உருவாக்கிய சி++ மொழி சிறந்த ‘ஊப்’ (OOP) மொழியாக அறியப்படுகிறது.

இணையத்தின் வளர்ச்சி காரணமாக இணையப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஓர் ஊப் மொழியின் தேவை உணரப்பட்டது. இத்தேவையை நிறைவு செய்ய ஜேம்ஸ் காஸ்லிங்கும் அவரது நண்பர்களும் 1991-இல் சி, சி++ மொழிகளை அடிப்படையாகக் கொண்டு ‘ஜாவா’ மொழியை உருவாக்கினர். இன்றைக்கும் இணையற்ற இணைய மொழியாக ஜாவா திகழ்கிறது. எந்த இயக்க முறைமையிலும் ஜாவா நிரல் செயல்படும் என்பதால் ஜாவாவை ‘பணித்தளம் சாரா மொழி’ (Platform Independent Language) என்பர்.

ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு திறன் கொண்டது. எனவே ஒரு பயன்பாட்டு மென்பொருளின் பல்வேறு கூறுகளை வெவ்வேறு மொழிகளில் எழுதி ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் ஒரு பணித்தளம் தேவை. இத்தகைய ‘மொழிசாராப் பணித்தளத்தை’ (Language Independent Platform) மைக்ரோ சாஃப்ட் வடிவமைத்தது. அதுவே .நெட் (.NET) தொழில்நுட்பம் ஆகும். .நெட்டின் முக்கிய அங்கமாக விளங்குவது ஆண்டர்ஸ் ஹெஜல்ஸ்பெர்க் 2000-தில் உருவாக்கிய சி# மொழியாகும். நவீன நிரலாக்கம் ஒரு பயன்பாட்டு மென்பொருளை பல்வேறு பொருள்கூறுகளின் (Components) ஒருங்கிணைப்பாகக் கருதுகிறது. பொருள்கூறுகளை ஒன்றையொன்று சாராமல் தனித்தனியே உருவாக்கி, பரிசோதித்து ஒருங்கிணைத்து ஒரு பயன்பாட்டை உருவாக்கலாம். இத்தகைய திறன்வாய்ந்த மொழி ‘பொருள்கூறு நோக்கிலான நிரலாக்க மொழி’ (Component Oriented Programming Language) ஆகும். இவ்வகையில் முதலாவது மொழியாக சி# கருதப்படுகிறது.

மனிதன் செய்யக்கூடிய எந்தவொரு பணியையும் கணிப்பொறியில் ஒரு மென்பொருள் மூலம் சாதித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது. அத்தகைய நம்பிக்கையை நவீன நிரலாக்க மொழிகள் வழங்கியுள்ளன.

 கணிப்பொறிப் பிணையங்களின் வளர்ச்சி

கணிப்பொறி வரலாற்றில் மற்றுமொரு திருப்புமுனையாக கணிப்பொறிப் பிணையங்களைக் (Computer Networks) கூறலாம். தனித்தனியே செயல்படும் இரண்டுக்கு மேற்பட்ட கணிப்பொறிகளை ஒன்றிணைத்து அவற்றுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள ‘பிணையத் தொழில்நுட்பம்’ (Network Technology) வழிவகுக்கிறது.

· ஒரு வீட்டில் உள்ள கணிப்பொறிகளையும் பிற மின்னணு சாதனங்களையும் பிணைத்து அவற்றுக்கிடையே தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் அமைப்பு முறை ‘தனிப்பரப்புப் பிணையம்’ (Personal Area Network - PAN) எனப்படுகிறது.

· ஒரு கட்டடத்தில் அமைந்துள்ள ஓர் அலுவலகத்தின் வெவ்வேறு பணிப்பிரிவுகளில் செயல்படும் கணிப்பொறிகளைப் பிணைத்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு ‘குறும்பரப்புப் பிணையம்’ (Local Area Network - LAN) எனப்படும்.

· ஒரு மாநகரில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் கிளைகளில் செயல்படும் கணிப்பொறிகளைப் பிணைத்து உருவாக்கும் அமைப்பு ‘மாநகர்ப் பிணையம்’ (Metro Area Network - MAN) ஆகும்.

· நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள அலுவலகங்களின் கணிப்பொறிகளைப் பிணைத்து உருவாக்கும் அமைப்பு ‘விரிபரப்புப் பிணையம்’ (Wide Area Network - WAN) எனப்படுகிறது. ஒவ்வொரு நகரத்தின் அலுவலகத்திலும் ஒரு குறும்பரப்புப் பிணையம் அமைந்திருக்க வாய்ப்புண்டு. ஆக, விரிபரப்புப் பிணையம் என்பது பல குறும்பரப்புப் பிணையங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ‘பிணையங்களின் பிணையமாக’ (Network of Networks) இருக்கும். நாடெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான கணிப்பொறிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை விரிபரப்புப் பிணையம் சாத்தியமாக்குகிறது.

பிணையத் தொழில்நுட்பம், அலுவலகப் பணிகளில், நிறுவனச் செயல்பாடு களில், அரசு நடைமுறைகளில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பிணையங்களில் கணிப்பொறிகள் கம்பிகள் (Wires) வடங்கள் (Cables) மூலமாக, பிணைவி (Hub), தொடர்பி (Switch) போன்ற சாதனங்களில் பிணைக்கப்பட்டு, இணைவி (Bridge), திசைவி (Router), நுழைவி (Gateway) போன்ற சாதனங்களின் வழியாகத் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றன. தற்போது கம்பி/வடங்கள் மூலம் பிணைக்கப்படாத வயரில்லாப் பிணையத் தொழில்நுட்பங்கள் (Wireless Network Technologies) நாள்தோறும் பரிணாம வளர்ச்சி பெற்று வருகின்றன. மேலே கண்ட நான்குவகைப் பிணையங்களுக்குமான புதிய புதிய வயரில்லாத் தொழில்நுட்பங்கள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில:

· வயரில்லா பேன் (Wireless PAN): இவற்றில் இர்டா, புளூடூத், வயர்லெஸ் யுஎஸ்பி, அல்ட்ரா வைடுபேண்டு, ஜிக்பி போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

· வயரில்லா லேன் (Wireless LAN): இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் வைஃபி (Wi-Fi) என்றழைக்கப்படுகிறது.

· வயரில்லா மேன் (Wireless MAN): இதற்கான தொழில்நுட்பம் வைமேக்ஸ் (WiMax) எனப்படுகிறது.

· வயரில்லா வேன் (Wireless WAN): வைமேக்ஸின் மேம்பட்ட வடிவங்கள் இப்பிணையங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

வீட்டில் எந்த மூலையில் இருந்துகொண்டும் செல்பேசி, கையகக் கணிப்பொறி, மடிக்கணிப்பொறி மூலம் வீட்டுக் கணிப்பொறியைத் தொடர்பு கொள்ளவும், அதன்மூலமாக இணையத்தை அணுகவும் முடியும். அலுவலகத்தில் எந்த மூலையில் இருந்துகொண்டும் மடிக்கணிப்பொறி மூலமாக அலுவலகப் பிணையத்தில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். ஓட்டலில், ரயில் நிலையத்தில், விமான நிலையத்தில் தங்கிச் செல்லும்போது இணையத்தையும் அதன்வழியே தம் நிறுவனப் பிணையங்களோடு தொடர்பு கொள்ளவும் வயரில்லாப் பிணையத் தொழில்நுட்பங்கள் வாய்ப்பளித்துள்ளன.

 இணையத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

உலகமெங்கும் அமைந்துள்ள பல்வேறு பிணையங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் விரிபரப்புப் பிணையமே இணையம் (Internet) ஆகும். உலகின் எந்த மூலையில் உள்ளவரும் தமது சொந்தக் கணிப்பொறியிலிருந்து இப்பிணையத்தை அணுகித் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்பது இணையத்தின் சிறப்புக் கூறாகும். கணிப்பொறித் தொழில் நுட்ப வரலாற்றில் உச்சகட்டத் திருப்புமுனையாக இணையத்தின் தோற்றத்தைக் கூறலாம்.

மனித வாழ்க்கையைப் பற்றிய பயமே பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி கோலியுள்ளது என்று கூறினால் மிகையாகாது. இணையத்துக்கான வித்து அச்சத்தின் அடிப்படையில் போடப்பட்டது என்பது வியப்பான செய்தியே. 1957-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் ‘ஸ்புட்னிக்’ என்னும் ஆளில்லா செயற்கைக்கோளை விண்ணில் பறக்கவிட்டு விந்தை புரிந்தது. இது தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு முன்னோடியாக இருக்கலாம் என்னும் அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. எதிர் நடவடிக்கையாக ‘ஆர்ப்பா’ (ARPA - Advanced Research Project Agency) என்னும் அமைப்பை நிறுவினர்.

நாளடைவில் இராணுவப் பாதுகாப்புத் துறையில் தகவல் தொடர்புக்குக் கணிப்பொறியைப் பயன்படுத்தும் முயற்சிகளை ஆர்ப்பா மேற்கொண்டது. ஒரு புதுவகையான கணிப்பொறிப் பிணையத்தை அமைக்க ஆர்ப்பா ஆர்வம் காட்டியது. போர் மூண்டு, எதிரிகளின் குண்டு வீச்சில் பிணையத்தின் ஒருபகுதி சிதைந்து போனாலும் மீதிப் பகுதி எவ்விதச் சிக்கலுமின்றி செயல்பட வேண்டும். அமெரிக்காவில் 1969-இல் நான்கு கணுக்களுடன் (Nodes) இத்தகைய பிணையம் நிறுவப்பட்டது. அது ‘ஆர்ப்பாநெட்’ என அழைக்கப்பட்டது. அரசுத் துறைகள், பல்கலைக் கழகங்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள் தம் பிணையங்களை ஆர்ப்பாநெட்டில் இணைத்துக் கொண்டன. மிகவும் சக்தி வாய்ந்த கணிப்பொறிகளையும், பிணையங்களையும் அமைத்துச் செயல்பட்டு வந்த சமூகக் குழுக்களும் தத்தம் பிணையங்களை ஆர்ப்பாநெட்டில் இணைத்துக் கொண்டன.

இணைய வளர்ச்சியில் இரண்டாம் கட்டமாக, அறிவியல் ஆய்வுக்கென அமெரிக்க அரசின் நேஷனல் சயின்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவிய ‘என்எஃப்எஸ்நெட்’ என்னும் மிகப்பரந்த விரிபரப்புப் பிணையம் ஆர்ப்பா நெட்டின் இடத்தைப் பிடித்தது. ஆர்ப்பாநெட்டில் இணைக்கப்பட்டிருந்த பிணையங்கள் என்எஃப்எஸ்நெட்டுக்கு மாறின. ஆர்ப்பாநெட் மெல்ல மறைந்தது. அரசும் இராணுவமும் அரசு சார்ந்த நிறுவனங்களும் ஆய்வியல் அறிஞர்களும் மட்டுமே பயன்படுத்தி வந்த விரிபரப்புப் பிணையத்தைப் பொது மக்களும் உலாவரும் இணையமாக உருமாற்றிய பெருமை என்எஃப்எஸ் நெட்டையே சாரும்.

இணைய வளர்ச்சியில் மூன்றாவது கட்டம், ‘வேர்ல்டு வைடு வெப்’ என அழைக்கப்பட்ட ‘வைய விரிவலை’ என்னும் பிணையம் இணையத்தோடு இணைக்கப்பட்டதாகும். வைய விரிவலை என்பது மீவுரைத் தொழில்நுட்பத்தின் (Hyper Text Technology) அடிப்படையில் உருவாக்கப்பட்ட, மீத்தொடுப்புகள் (Hyper Links) கொண்ட மீவுரை ஆவணங்கள் ஏராளமாகச் சேமிக்கப்பட்டுள்ள மாபெரும் பிணையமாகும். இணையத்தில் மீவுரை ஆவணத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது, அதில் மீத்தொடுப்பு இணைக்கப்பட்ட ஒரு சொல்லையோ, படத்தையோ சுட்டியால் சொடுக்கினால், அதோடு தொடர்புடைய வேறோர் ஆவணம் நம் கண்முன்னே விரியும். அந்த வேறோர் ஆவணம் உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள கணிப்பொறியில் சேமிக்கப்பட்டிருக்கலாம். உரை வடிவில் மட்டுமே தகவல் பரிமாற்றம் சாத்தியமாயிருந்த இணையத்தில், வரைகலை (Graphics), கேட்பொலி (Audio), நிகழ்படம் (Video), அசைவூட்டம் (Animation) அடங்கிய பல்லூடகத் (Multimedia) தகவல் பரிமாற்றத்துக்கு வைய விரிவலை வழிவகுத்தது. இணையத்தின் ஓர் அங்கமாக வைய விரிவலை இருந்த நிலை மாறி இன்றைக்கு வைய விரிவலையே இணையம் ஆகிவிட்டது.

இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் வலையகம் (Website) எனப்படும் தகவல் சேமிப்பிலுள்ள வலைப் பக்கங்களை (Web Pages) நமது கணிப்பொறியில் பதிவிறக்கிப் படித்தறிய ‘இணைய உலாவி’ (Internet Browser) என்னும் மென்பொருள் பயன்படுகிறது. இணையத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைத் தேடித்தரும் பணியை ‘தேடு பொறிகள்’ (Search Engines) என்னும் நிரல்கள் செய்கின்றன. குறிப்பிட்ட ஆவணத்தைத் தேடிப்பெற ‘யூஆர்எல்’ (URL - Universal Resource Locator) எனப்படும் முகவரி முறை பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு முன் கணிப்பொறியை நமது பணிகளில் உதவிடும் ஒரு சாதனமாகத்தான் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இணையத்தின் வருகை கணிப்பொறியின் இலக்கணத்தையே மாற்றிவிட்டது. மனித வாழ்க்கைக்கு உதவிடும் சாதனமாய் இருந்த நிலை மாறி, மனித வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்த கருவியாக ஆகிவிட்டது. நாம் இதுவரை பின்பற்றி வந்த பண்பாட்டு நடைமுறைகள், சிந்தனைகள், மரபுகள், பழக்க வழக்கங்கள் இவை அனைத்தை யும் அப்படியே புரட்டிப் போடும் வல்லமை பெற்றதாய் இணையம் விளங்குகிறது.

வேலைபார்த்துச் சம்பாதிக்க அலுவலகம், தொலைவில் உள்ள உறவினருடன் பேசத் தொலைபேசி, கல்வி கற்கப் பள்ளி / கல்லூரி, அறிவைப் பெருக்க நூலகம், கடிதம் அனுப்ப அஞ்சல் நிலையம், பணம் சேமிக்க/எடுக்க வங்கி, பயணச்சீட்டு பதிவுசெய்ய ரயில்நிலையம், பொழுது போக்க விளையாட்டு, பாட்டுக் கேட்க வானொலி, படம் பார்க்கத் தொலைக்காட்சி, நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள பத்திரிகைகள், விவாதிக்கக் கருத்தரங்குகள், பொருள்கள் வாங்கக் கடைகள், ஆலோசனைக்கும் ஆறுதலுக்கும் ஆருயிர் நண்பன், அரட்டையடிக்க மன்றங்கள் - இவையனைத்தும் மனித வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கங்கள். வீட்டிலுள்ள உங்கள் கணிப்பொறியை இணையத்தில் இணைத்துக் கொண்டால், இருந்த இடத்திலேயே இவையனைத்தும் கிடைத்து விடும் என்பது நம்ப முடியாத உண்மை.

இணையத்தைக் கேடான நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல், அதற்குப் பலியாகிக் கெட்டுப் போதல் போன்ற எதிர்ம விளைவுகளும் இருக்கவே செய்கின்றன. ஒட்டுமொத்தச் சமூக அமைப்பு உன்னத நிலை அடையும்வரை எத்தகைய அறிவியல் முன்னேற்றத்திலும் இத்தகைய புல்லுருவிகள் ஊடுருவுவதைத் தடுக்க இயலாது. கணிப்பொறியும், கணிப்பொறிப் பிணையமும், இணையமும் வழங்கியுள்ள வசதிகள், சாதனைகள் சிலவற்றைக் காண்போம்.

 தாளில்லா அலுவலகம் (Paperless Office)

அலுவலகம் என்றாலே தாள்களும் தாள்கோப்புகளும் பெரிய பேரேடுகளும்தாம் நமக்கு நினைவுக்கு வரும். தாளில்லா அலுவலகத்தைக் கற்பனை செய்து பார்க்கவே இயலாது. ஆனால் இன்றைக்குப் பல்வேறு அலுவலகங்களில் கணிப்பொறியும், சொல்செயலி, விரிதாள், தரவுத்தளம் ஆகிய மென்பொருள்கள் அடங்கிய அலுவலகப் பயன்பாட்டுக் கூட்டுத் தொகுப்பும் தாள்களையும், தாள்கோப்புகளையும் ஒழித்துக் கட்டியுள்ளன. அலுவலகத்தின் அனைத்துத் தகவல்களும், கணக்கு வழக்குகளும் பெரிய பெரிய அலமாரிகளில் தாள்கோப்புகளில் இருப்பதற்குப் பதிலாக மின்காந்த வட்டுகளில் கோப்புறைகளில் (Folders) கணிப்பொறிக் கோப்புகளாகச் சேமிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கோப்புகளை ஒரு பணிப்பிரிவிலிருந்து இன்னொரு பணிப்பிரிவுக்கு, அல்லது வேறோர் அலுவலகத்துக்கு அல்லது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியிருக்கும். கணிப்பொறியிலிருந்து அச்செடுத்து அனுப்பி வைப்பதா? மேலதிகாரி ஒரு கோப்பினைப் பார்க்க விரும்புகிறார். அவருக்கும் இதேபோல் அச்செடுத்து, ஒரு தாள்கோப்பினை உருவாக்கித் தருவதா? இச்¢சிக்கலைக் கணிப்பொறிப் பிணையம் தீர்த்து வைத்துள்ளது.

ஓர் அலுவலகத்தின் பல்வேறு பணிப்பிரிவுகளிலுள்ள கணிப்பொறிகளும் மற்றும் மேலதிகாரிகளின் கணிப்பொறிகளும் ஒரு கணிப்பொறிப் பிணையத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். அலுவலகத் தகவல்கள் அனைத்தும் மையப்படுத்தப் படுத்த தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு பயனர் பெயரும் (User Name) கடவுச்சொல்லும் (Password) வழங்கப் பட்டிருக்கும். அவற்றைப் பயன்படுத்தி அவரவர் தமக்குத் தேவையான கோப்புகளை அணுக முடியும். ஒரு கோப்பினைக் கீழதிகாரி பார்த்த பிறகே மேலதிகாரி பார்ப்பார் என்கிற கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியும். கோப்புகளின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கணிப்பொறித் தகவல் தொடர்பு வழியாகவே தெரிவிக்க முடியும்.

எத்தனையோ பெரிய வங்கிகளின் கிளைகள் தாளில்லா அலுவலகங்களாக மாறிவிட்டன. காசோலைகள் (Cheques), கேட்பு வரைவோலைகள் (Demand Drafts) மட்டுமே தாள்வடிவில் கையாளப்படுகின்றன. குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், பணம் கொடுப்பவர், பணம் பெறுபவர் இருவருக்கும் ‘இணைய வங்கிச் சேவை’ (Internet Banking) வசதி இருக்குமெனில், காசோலை, வரைவோலை எதுவும் தேவையில்லை. ‘மின்னணுப் பணப் பரிமாற்றம்’ (Electronic Fund Transfer) மூலமே பணத்தை அனுப்பிவிட முடியும். பற்று அட்டை (Debit Card), கடன் அட்டை (Credit Card) ஆகியவை பணம் என்கிற தாளையும் தேவையற்றதாக்கி விட்டன. இதையெல்லாம் கணிப்பொறிப் பிணையங்களே சாத்தியமாக்கியுள்ளன.

 ஆளில்லா அலுவலகம் (Officialless Office)

இரயில் நிலையங்களில் ‘விசாரணை’ என்ற அறிவிப்புப் பலகையுடன் அலுவலர் அமர்ந்திருப்பார். எந்த வண்டி எப்போது வரும், எவ்வளவு நேரம் தாமதம், காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டு விட்டதா, குறிப்பிட்ட வண்டியில் இடம் இருக்கிறதா என்பது போன்ற விவரங்களைப் பயணிகளுக்குக் கூறிக்கொண்டிருப்பார். ஆனால் இப்போது பல பெரிய இரயில் நிலையங்களில் இந்தத் தகவல்களைக் கணிப்பொறியே தருகின்றது. வரவிருக்கும் ஒரு இரயில் இப்போது எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது எனத் துல்லியமாக கணிப்பொறித் திரையில் தெரியும். பயணச்சீட்டு மற்றும் இட இருப்பு பற்றிய விவரங்களைத் ‘தொடுதிரை’ (Touch Screen) கணிப்பொறியில் நாமே அறிந்துகொள்ள முடியும்.

வங்கியில் பணம் எடுக்க வேண்டுமெனில் விண்ணப்பத்தாளையும், கணக்குப் புத்தகத்தையும் காசாளரிடம் தரவேண்டும். அவர் ஒரு பதிவேட்டில் குறித்துக் கொண்டு பணத்தைத் தருவார். நாம் தந்த விண்ணப்பத்தாள் இன்னோர் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் பேரேட்டில் உங்கள் கணக்கில் பற்று எழுதுவார். ஆனால் இப்போதெல்லாம் ஆங்காங்கே உள்ள ‘தானியங்குக் காசாளி எந்திரத்தில்’ (ATM) பற்று அட்டை பயன்படுத்திப் பணம் எடுத்துக் கொள்கிறோம். தாள்களும், கணக்குப் புத்தகங்களும், பேரேடுகளும் இல்லை; பணம் தரும், பதிவு செய்யும் அலுவலர்களும் இல்லை. ஆக, ஆளில்லா அலுவலகம் அதாவது அலுவலர் இல்லா அலுவலகம் இன்றைக்குச் சாத்தியம் ஆகிவிட்டது.

 அலுவலகம் இல்லா அலுவலகம் (Officeless Office)

அலுவலகம் இல்லா அலுவலகம் என்பது வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையைச் செய்துகொள்வதைக் குறிக்கிறது. வீட்டில் வழக்கமான சமையல் வேலைகளைப் பார்த்துக் கொண்டு, குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு, அவ்வப்போது இணையத்தில் இணைந்த கணிப்பொறி முன் அமர்ந்து, உங்கள் அலுவலக வேலையை முடித்து விடலாம். மாதந்தோறும் சம்பளம் வந்துவிடும். உங்கள் வீடுதான் அலுவலகம். இதை அலுவலகம் இல்லா அலுவலகம் என அழைக்கலாம் அல்லவா? இன்றைக்கு மென்பொருள் துறையில் பலர் இதுபோலப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துக்காக இந்தியாவில் இருந்துகொண்டே பணியாற்ற முடியும்.

ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனம். ஆவணங்களை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்த்துத் தருவது இவர்கள் வேலை. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அதாவது மொழிபெயர்ப்பாளர்கள் உலகின் பலநாடுகளில் இருக்கின்றனர். ஆனால் இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் எந்த நாட்டிலும் இல்லை. மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலிருந்தபடியேதான் பணியாற்றுகின்றனர். மொழிபெயர்க்க வேண்டிய ஆவணத்தை இணையம்வழி பதிவிறக்கம் (Download) செய்துகொள்வர். மொழிபெயர்த்த ஆவணத்தை இணையம் வழியாகவே பதிவேற்றம் (Upload) செய்துவிடுவர். இவர்களுடைய மாதச் சம்பளம் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். இந்த நிறுவனத்தின் தலைமையகம் எந்த நாட்டில் இருக்கிறது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது. தலைமையகம் என ஓர் அலுவலகம் உண்டா, இல்லை அதில் பணிபுரிபவர்களும் வீட்டிலிருந்தபடியே தான் பணிபுரிகிறார்களா என்பதும் தெரியாது. அலுவலகம் என்ற ஒன்று இல்லாமலே இந்த நிறுவனத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றங்களை இணையம் வழியாக வீட்டிலிருந்தபடியே செய்துகொள்ள முடிகிறது. தொலைபேசிக் கட்டணம், மின்கட்டணம், வீட்டுவரி போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே செலுத்தலாம். பேருந்து, இரயில், விமானப் பயணத்துக்கான பயணச் சீட்டுகளை வீட்டிலிருந்த படியே பதிவு செய்யலாம். குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் பயணச்சீட்டை நாமே அச்சிட்டுக் கொள்ள முடியும். வருமான வரிக் கணக்கை வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்கலாம். இவையெல்லாமே ஓர் அலுவலகத்தில் அலுவலர்கள் இருந்து செய்ய வேண்டிய வேலைகள்தாம். ஆனால் அலுவலரும் இல்லாமல் அலுவலகமும் இல்லாமல் வேலை நடந்து முடிந்துவிடுகிறது.

வங்கியில் பணப் பரிமாற்றங்கள், இரயில்வே பயணச் சீட்டு முன்பதிவு போன்ற பணிகளில் முந்தைய நடைமுறைகளில் கால விரயம், கணக்கு வழக்கில் பிழைகள், முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் இருந்தன. கணிப்பொறி வழியாக நடைபெறும் தானியங்குச் செயல்பாடுகளில் விற்று வரவுக் கணக்கு வழக்குகள் உடனுக்குடன் துல்லியமாக எவ்விதப் பிழையுமின்றி செய்து முடிக்கப் படுகின்றன. குளறுபடிகளும் முறைகேடுகளும் நடப்பதற்கு வழியில்லை.

 இணையம்வழித் தகவல் தொடர்பு

மரபுவழித் தகவல் தொடர்பு அஞ்சல், தந்தி, தொலைபேசி மூலம் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு இணையம் வழியான தகவல் தொடர்பு இவற்றின் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.

இணையத்தின் பெரும்பயன்களில் மிகவும் முக்கியமானது ‘மின்னஞ்சல்’ (E-mail). உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்க்கும் கட்டணம் எதுவுமின்றி மடல் அனுப்பலாம். சில வினாடிகளில் போய்ச் சேர்ந்துவிடும். இரவு-பகல் எந்த நேரமும் அனுப்பலாம். விடுமுறை நாட்கள் கிடையாது. அனுப்பிய மடல் சென்று சேர்ந்ததா, மடலைப் பெற்றவர் திறந்து படித்தாரா என்பதை அறிந்துகொள்ள முடியும். முகவரிதாரர் அவருடைய வீட்டில் இருக்கும் போதுதான் கடிதம் பெறமுடியும் என்பதில்லை. தனக்கு வரும் கடிதங்களை எந்த நாட்டில் இருந்து கொண்டும் பார்வையிடலாம். மடலுக்கான பதிலை உட்கார்ந்த இடத்திலிருந்தே அனுப்பலாம். ஒரு கடிதத்தை ஒரே நேரத்தில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். நமக்கு வந்த மடலை இன்னொருவர் பார்வைக்குத் திருப்பியனுப்பலாம். சிலரிடமிருந்து கடிதம் வராமல் தடுக்கலாம். மடல்களுக்கு நம் தலையீடின்றி தானாகவே பதில் அனுப்பச் செய்யலாம்.

மின்னஞ்சலுக்கு அடுத்தபடியாக ‘உடனடிச் செய்தியாளி’ (Instant Messenger) மூலம் செய்திப் பரிமாற்றம் செய்வது செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. தகவல் பரிமாறிக் கொள்ளும் இருவரும் அவரவர் கணிப்பொறிகளை இணையத்தில் இணைத்துக் கொண்டு, உடனடிச் செய்தியாளி மென்பொருளை இயக்கினால் போதும். இருவரும் உரை வடிவில் உரையாடிக் கொள்ளலாம். தொலைபேசியின் உதவியின்றியே ஒலிவாங்கி, ஒலிபெருக்கி உதவியுடன் இருவரும் உரையாடிக் கொள்ளலாம். கணிப்பொறியில் கேமராவை இணைத்துக் கொண்டு கணிப்பொறித் திரையில் உரையாடுபவரின் உருவத்தைக் காணலாம். இரண்டுக்கு மேற்பட்டோர் கலந்துரையாடல் நிகழ்த்தும் வசதியும், உடனுக்குடன் படங்கள், கோப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் வசதிகளும் தற்போது வந்துவிட்டன.

இணையத்தில் இணைக்கப்பட்ட உங்கள் கணிப்பொறி வழியாக உலகில் எந்த நாட்டில் உள்ளவரின் தொலைபேசிக்கும் தொடர்பு கொள்ளலாம். வழக்கமான தொலைபேசியில் வெளிநாட்டு அழைப்புக்கு ஆகும் செலவைவிட இணையம் வழித் தொலைபேசி அழைப்புக்குக் குறைந்த செலவே ஆகும். கணிப்பொறி இல்லாமல் சாதாரணத் தொலைபேசி போலவே இணையம் வழியாகப் பேசிக் கொள்ளும் ‘இணையத் தொலைபேசியும்’ (Internet Telephone) நடைமுறைக்கு வந்துவிட்டது. இதனை ‘வாய்ப்’ (VoIP - Voice over Internet Protocol) தொலைபேசி என்றும் கூறுவர்.

 இணையம்வழிக் கல்வி

கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பயன்படக் கூடிய ஏராளமான தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன என்பது பழைய செய்தி. இணையத்தின் மூலமே கல்வி பயின்று பட்டம் பெற முடியும் என்பது புதிய செய்தி. இணையத்தில் மட்டுமே செயல்படும் ‘மெய்நிகர் பல்கலைக் கழகங்கள்’ (Virtual Universities) நடைமுறைக்கு வந்துவிட்டன. வகுப்புக்குப் பெயரைப் பதிவது, பயிற்சிக் கட்டணம் செலுத்துவது, பாடங்களைப் பெறுவது, மெய்நிகர் வகுப்பறையில் (Virtual Classroom) பாடம் கேட்பது, ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவது, பயிற்சிக் குறிப்புகளை (Assignments) அனுப்புவது, தேர்வுக்கு விண்ணப்பிப்பது, தேர்வினை எழுதுவது, தேர்வு முடிவ அறிவது, சான்றிதழ் பெறுவது - இவையனைத்தையும் வீட்டிலிருந்தபடியே கணிப்பொறி மூலமாகச் செய்து முடிக்க முடியும். இந்தியா தவிரப் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் பயில விரும்புவோர்க்கு இணையம் வழியாகவே பாடம் நடத்தி, தேர்வு வைத்துப் பட்டம் வழங்கும் ‘தமிழ் இணையப் பல்கலைக் கழகம்’ ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் தன் வீட்டிலிருந்து கொண்டே இணையம் வழியாகச் சீனாவில், ஜப்பானில் உள்ள ஒரு மாணவனுக்கு தனிக் கல்விப் பயிற்சி (Tution) நடத்துகிறார் என்பது நம்ப முடியாத கற்பனைச் செய்தி அல்ல. நடைமுறை உண்மை.

 மின்வணிகம் (E-Commerce)

இணையத்தின் பரவலுக்கு முன்பே வணிக நடவடிகைகள் விரிபரப்பு பிணையங்கள் வழியாக நடைபெற்று வந்த போதும், இணையம்வழி வணிகம் நடைபெறத் தொடங்கிய பிறகே மின்வணிகம் வளர்ச்சி பெற்றது எனலாம். மின்வணிக நடவடிக்கையைப் பொதுவாக நான்கு வகையாகப் பிரிப்பர்:

· ஒரு வணிக நிறுவனம் தன் கிளைகளுடனும் சார்பு நிறுவனங்களுடனும் நடத்திக் கொள்ளும் உள்-தகவல் பரிமாற்றம் (Business Internal).

· இரண்டு வணிக நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களும் பணப் பரிமாற்றங்களும் (Business to Business - B2B).

· வணிக நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் இடையே பொருள்களை விற்பது, வாங்குவது தொடர்பாக நடைபெறும் தகவல் மற்றும் பணப் பரிமாற்றங்கள் (Business to Consumer - B2C).

· நுகர்வோர் தமக்குள்ளே நடத்திக் கொள்ளும் ஏல விற்பனை போன்ற வணிக நடவடிக்கைகள் (Consumer to Consumer - C2C). ஒரு நிறுவனம் தன் உற்பத்திப் பொருள்களுக்காக விளம்பரம் செய்வது தொடங்கி, மக்களின் பார்வைக்குக் கடை பரப்பி வைப்பது, வாடிக்கையாளர் பொருள்களைப் பார்வையிட்டுத் தேவையான பொருட்களுக்கு விலைக்குறிப்புப் (Quotation) பெறுதல், வாங்க விரும்பும் பொருள்களுக்குக் கொள்முதல் கோரிக்கையை (Purchase Order) முன்வைப்பது, அவற்றுக்குரிய விலையைச் செலுத்துவது, பணம் செலுத்தியதற்கான ரசீது பெறுவது, பொருட்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டதற்கான விநியோகச் சீட்டைப் (Delivery Challan) பெறுதல் ஆகிய அனைத்து வணிக நடவடிக்கைகளும் இணையம் வழியாகவே நடந்து முடிந்து விடுகின்றன. பொருள் மட்டும் ஆள், வாகனம் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். வீட்டிலிருந்தபடியே உங்களுக்குத் தேவையான பொருளை வாங்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிடத் தக்க செய்தி என்னவெனில், சில விற்பனைப் பொருள்களை இணையம் வழியாகவே இறக்குமதி செய்துகொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, இசைப்பாடல்கள், நிகழ்படங்கள், ஓவியங்கள், நூல்கள், மென்பொருள்கள், சட்ட, மருத்துவ, குடும்ப ஆலோசனைகள் ஆகியவற்றை இணையம் வழியாகவே உரிய விலை செலுத்தி, உடனுக்குடன் பதிவிறக்கிக் கொள்ள முடியும். ஆக, நூற்றுக்கு நூறு வணிக நடவடிக்கைகள் இணையம் வழியாகவே நடைபெற முடியும் என்பதை இன்றைய மின்வணிகம் மெய்ப்பித்துள்ளது.

 புறத்திறனீட்டம் (Outsourcing)

கணிப்பொறித் தொழில்நுட்பமும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பமும் இணைந்து ‘தகவல் தொழில்நுட்பம்’ (Information Technology - IT) உருவாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை அனைத்துத் தொழில்துறை களிலும் காண முடிகிறது. இதன் காரணமாய் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT Enabled Services - ITES) பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன. ஐடீஈஎஸ் சேவைகளுள் சில:

· அழைப்புதவி மையங்கள் (Call Centres): வாடிக்கையாளர்களோடு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கான உதவி மையங்கள்.

· பின்னணி அலுவலகச் செயல்பாடுகள் (Back Office Operations): ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குப் பின்புலமாக விளங்கும் தகவல் உள்ளீடு, தகவல் வடிவ மாற்றங்கள், நிதி மற்றும் கணக்குவைப்பு, மனிதவளச் சேவைகளை உள்ளடக்கியது.

· ஆவணமாக்கம் / மொழிபெயர்ப்பு (Documentation / Translation): குரல்வடிவ மருத்துவக் குறிப்புகளை எழுத்து வடிவ ஆவணங்களாய்க் கணிப்பொறியில் சேமித்தல், மருத்துவ அறிக்கைகளிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுத்து, தரவுத்தளத்தில் சேமித்தல், வணிக ஆவணங்களை மொழிபெயர்த்தல்.

· உள்ளடக்க உருவாக்கம் (Content Development): வலையகச் சேவைகள், பொறியியல் வடிவமைப்பு, பல்லூடக உள்ளடக்க உருவாக்கம்.

· பிணைய ஆலோசனை / மேலாண்மை (Network Consultancy / Management): பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள உயிர்நாடியான கணிப்பொறிப் பிணையங்களின் பாதுகாப்புக்கான ஆலோசனைகள் மற்றும் மேலாண்மை.

ஒரு பெரிய நிறுவனம் தன்னுடைய அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் தன்னுடைய பணியாளர்களைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்ள இயலாது. இயலும் எனினும் அதற்காக அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும். சில குறிப்பிட்ட தொழில்நுட்பத் திறன் அல்லது அகக் கட்டமைப்பு தன்னிடம் இல்லாமல் போகலாம். எனவே நிறுவனப் பணிகள் சிலவற்றை அப்பணிகளில் அனுபவம் மிக்க வேறு நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்கின்றன. இதனை ‘வணிகச் செயலாக்கப் புறத்திறனீட்டம்’ (Business Process Outsourcing) என்றழைக்கின்றனர். பெரும்பாலான ஐடீஈஎஸ் சேவைகள் இதில் அடங்குகின்றன.

புறத்திறனீட்ட வணிக நடைமுறைகளின் வளர்ச்சியால் பெரிதும் பயனடைந்துள்ள நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஐடீஈஎஸ் ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. வேலைவாய்ப்பைத் தேடி இந்திய இளைஞர்கள் வெளிநாடு சென்ற நிலை மாறி, வெளிநாட்டு வேலைகள் இந்திய இளைஞர்களைத் தேடி இந்தியாவுக்கு வந்தவண்ணம் உள்ளன. ஆண்டு தோறும் புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆங்கிலம் பேசத் தெரிந்த படித்த இளைஞர்கள் அதிகம் என்பது இதற்கான முக்கிய காரணமாகும். ஐடீ சேவைகள், ஐடீஈஎஸ் சேவைகள் மூலமாக இந்தியாவின் வருமானம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட எத்தனையோ நன்மைகளுள் உலக அரங்கில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா ஒரு முன்னணி நாடாகும் வாய்ப்பு ஏற்பட்டதும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டதும் முக்கியமானவையாகும்.

 வலைப்பதிவுகள் (Blogs)

இணையத்தில் உலாவரும் மக்கள் தமக்குள்ளே கலந்துரையாடவும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன:

· செய்திக் குழுக்கள் (News Groups)
· அஞ்சல் குழுக்கள் (Mailing Lists)
· இணைய அரட்டை (Internet Chat)

இணையம் தொடங்கிய நாள்தொட்டே இவை இலவச சேவைகளாக இணையத்தில் நிலவி வருகின்றன. நாடு, மொழி, மதம், இனம், சாதி கடந்து கருத்துகளின் அடிப்படையில் புதிய சமூகக் குழுக்கள் உருவாக இவை உதவுகின்றன. இந்த வகையில் இப்போதைய புதிய வரவு ‘வலைப்பதிவு’ (Blog - Web log என்பதன் சுருக்கம்) எனப்படும் கருத்துப் பதிவு வழிமுறை யாகும். இணையத்தின் ஏனைய இலவச சேவைகளைப் போலவே பல முன்னணி இணையச் சேவைத் தளங்கள் வலைப்பதிவுச் சேவையையும் இலவசமாக வழங்கி வருகின்றன.

வலைவாசி ஒருவர் குறிப்பிட்ட கருத்தோட்டத்துக்கென ஒரு வலைப்பதி வகத்தை உருவாக்கித் தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார். அக்கருத்துகளைப் படிக்கும் பிற வலையுலா வாசிகள் தமது ஒத்த அல்லது மாற்றுக் கருத்துகளை அப்பதிவகத்தில் பதிவு செய்கின்றனர். கருத்துப் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெறும். கருத்துப் பரிமாற்றத்தில் நாள்தோறும் புதிய புதிய உறுப்பினர்கள் பங்கு கொள்வர். இன்றைக்கு இணையத்தில் காணப்படும் பெரும்பாலான வலைப்பதிவுகள் விளையாட்டாக, பொழுதுபோக்காக அமைந்துள்ள போதிலும் மிகச்சிறந்த கருத்துக் குவியல்களும் காணக் கிடைக்கின்றன.

 வருங்காலச் சாத்தியப்பாடுகள்

வருங்காலத்தில் கணிப்பொறித் தொழில்நுட்பமும், இணையச் சேவைகளும் மனித சமூகத்தை, சமூக வாழ்க்கையை, வாழ்க்கைக் கண்ணோட்டத்தை, பண்பாட்டுச் சிந்தனைகளை, மனித உறவுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் சாத்தியக் கூறுகள் தெளிவாகத் தெரிகின்றன. கணிப்பொறித் தொழில்நுட்பம் அனைத்து அறிவியல் துறைகளிலும், தொழில்துறைகளிலும், அன்றாட வாழ்க்கை நடைமுறைகளிலும் ஊடுருவிக் கிடப்பதைக் காண்கிறோம். வருங்காலச் சாத்தியப்பாடுகளை முழுக்கவும் பட்டியலிட ஒரு தனி நூலே எழுத வேண்டியிருக்கும். சில குறிப்பிட்ட துறைகளை மட்டும் சுட்டிக் காட்ட முயல்வோம்.

வெப் 2.0 (Web 2.0)

வருங்காலத்தில் வைய விரிவலையின் மேம்பட்ட புதிய பரிமாணத்தைக் குறிக்கிறது. தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றத்தை அல்ல, வலைச் சேவைகளின் உள்ளடக்கத்தில் நோக்கத்தில் ஏற்பட விருக்கும் மாற்றத்தைக் குறிக்கிறது. மனித சமூகங்கள் தமக்குள்ளே மேலும் மேலும் நெருங்கி ஊடாடி, உறவாடிக் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுக்கும் சேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படும். வலைப்பதிவுகள் இப்போதைக் காட்டிலும் செல்வாக்குப் பெறும். புதிய சிந்தனைகளோடு கூடிய சமூகக் குழுக்கள் உருவாக வழிவகுக்கும்.

தொலை மருத்துவம் (Telemedicine)

நோயாளியும் அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை. வெவ்வேறு நாடுகளில்கூட இருக்கலாம். மருத்துவர் நோயாளியின் எக்ஸ்ரே மற்றும் வேறு பரிசோதனை விவரங்களைத் தான் இருக்கும் இடத்திலிருந்தே இணையம் வழியாகக் கணிப்பொறியில் கண்டு ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவார். இத்தகைய ஆலோசனை இருவகையில் வழங்கப்படலாம். ஆபத்து காலங்களில் உயிருக்குப் போராடும் ஒருவருக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நிகழ்நிலை (Online) மருத்துவ ஆலோசனை. ஒருவரின் முந்தைய மருத்துவ வரலாற்றையும் தற்போதைய நிலைமையையும் நிதானமாக ஆய்வு செய்து வழங்கப்படும் மருத்துவ ஆலோசனை. இணையம் வழி கிடைக்கும் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் அறுவைச் சிகிச்சையைக்கூட மேற்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவில் உலகம் முழுவதிலுமுள்ள மிகச் சிறந்த மருத்துவர் பலரின் அறிவையும் அனுபவத்தையும் இணையம் வழியாக ஓரிடத்தில் பெற்றுவிட முடியும். மருத்துவ வசதி இல்லாத கிராமப் பகுதி நோயாளிகளுக்குக்கூடத் தொலை மருத்துவம் மூலம் குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய முடியும். மருத்துவத் துறையில் வருங்காலத்தில் இணையம் எண்ணிப் பார்க்க முடியாத மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

மின்-அரசாண்மை (E-Governance)

அரசாங்க நடைமுறைகள், நடவடிக்கைகள் அனைத்தும் இணையம் வழியாகக் கணிப்பொறி மூலம் நிறைவேற்றப் படுவதையே மின்-அரசாண்மை என்கிறோம். இந்தியாவில் பல மாநில அரசுகள் ஏற்கெனவே இத் திசைவழியில் காலடி எடுத்து வைத்துள்ளன. அரசின் ஆணைகள், திட்டங்கள், அறிவிப்புகள், அரசிதழ் அறிவிக்கைகள் (Gezette Notifications), ஒப்பந்தப் புள்ளிகள் அனைத்தும் உடனுக்குடன் இணையத்தில் வெளியிடப்படும். பட்டா உட்பட நில ஆவணங்கள் அனைத்தும் கணிப்பொறியில் சேமிக்கப்படும். பத்திரப் பதிவுகள் கணிப்பொறியிலேயே நடைபெறும். மாநிலமெங்கும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நீதி மன்றங்கள், காவல் நிலையங்கள், போக்குவத்து அலுவலங்கள் கணிப்பொறிப் பிணையங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படும். பொதுமக்களுக்குத் தேவையான படிவங்கள், விண்ணப்பங்கள் இணையத்தில் கிடைக்கும். கோரிக்கை மனுக்களை இணையம் வழியாகவே அனுப்பி வைக்க முடியும். அதன்மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்ன என்பதை இணையம்வழி அறிந்து கொள்ள முடியும். சமுதாய இணைய மையங்கள் மூலம் இது சாத்தியப்படும். மின்-அரசாண்மையில் தகவல் பரிமாற்றம் விரைவாக நடைபெறும். சிவப்பு நாடாத்துவம் (Red Tapism) முற்றிலும் ஒழிக்கப்படும். இடைத்தரகர்கள் இல்லாமல் போவர். ஊழலும் முறைகேடுகளும் பெருமளவு குறைந்துபோகும்.

உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology)

மிக வேகமாய் வளர்ச்சியடைந்து அதிக முக்கியத்துவம் பெற்றுவரும் தொழில்நுட்பம் இது. உயிரியல், மரபணுவியல், மூலக்கூறு உயிரியல், உயிரி வேதியல், வேதிப் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் சங்கமித்தில் உருவான தொழில்நுட்பம் இது. வேளாண்மை, பயிரியல், கால்நடை, உணவியல், மருத்துவம், சூழலியல் போன்ற துறைகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மருந்தியல் துறையில் மாபெரும் தாக்கத்தை வருங்காலத்தில் ஏற்படுத்தும். நோயெதிர்ப்பு மற்றும் நோய் முன்தடுப்பு மருந்துகள் தயாரிப்பில் இத்தொழில்நுட்பம் பெருமளவு உதவும். விளைபொருட்களை உணவு அல்லாத பிற பொருட்கள் தயாரிக்கும் நுட்பங்கள் உருவாகும். உயிரி எரிவாயு (Bio-fuel) உற்பத்தி செய்யப்படும். உயிரியல் ஆயுதங்கள் (Biological Weapons) தயாரிக்கும் அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

தொழிலக நடவடிக்கைகளினால் வெளியேறும் நச்சுப் பொருள்களைச் செயலிழக்கச் செய்யும் வேதிப் பொருள்களை உருவாக்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க இவ்வாய்வுகள் பெரிதும் உதவும். வேளாண்மைத் துறையில் பூச்சிக் கொல்லி மருந்துக்குப் பதிலாகப் பூச்சிக் கொல்லித் தாவரம் ஒன்றை உருவாக்க முடியும் என்று நம்புகின்றனர்.

உயிரித் தொழில்நுட்பத்துக்கு உதவும் உற்ற துறையாக ‘உயிரித் தகவலியல்’ (Bio-informatics) வளர்ந்து வருகிறது. உயிரியல் பொருள்களை மூலக்கூறுகளாகப் பகுத்தாய்ந்து, மூலக்கூறுகள் பற்றிய பேரளவு தகவல்களைச் சேகரித்துக் கணிப்பொறியில் சேமித்து, தகவலியல் நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை ஒழுங்கமைத்துப் பகுத்தாய்ந்து புரிந்துகொள்ள உதவுவது உயிரித் தகவலியல் ஆகும். வருங்காலத்தில் இதன் பங்களிப்புக் கணிசமாய் இருக்கும்.

நானோ தொழில்நுட்பம் (Nano Technology)

இன்று தொழிநுட்பத் துறையில் மிகச் சூடான தலைப்பு ‘நானோ தொழில்நுட்பம்’. பொருள்களை அணு, மூலக்கூறு அளவில் அணுகும்போது அவற்றை 1 முதல் 100 நானோ மீட்டர் அளவில் புரிந்து கொள்வதும் கட்டுப்படுத்துவதுமே நானோ தொழில்நுட்பம் எனப்படுகிறது. ஆக, அனைத்து அறிவியல், தொழில்நுட்பத் துறைகளிலும் நானோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்க முடியும். ஏற்கெனவே, மூலக்கூறுகளின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு பாலிமர்களைத் தயாரிப்பதிலும், கணிப்பொறிச் சில்லுகளை வடிவமைப்பதிலும் நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வெற்றி கண்டுள்ளது.

கணிப்பொறித் துறையைப் பொறுத்த மட்டில், நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மடித்து வைத்துக் கொள்ளக் கூடிய மிக மெல்லிய காட்சித் திரைகளை உருவாக்க முடியும். நுண்செயலித் தயாரிப்பில் சிலிக்கானுக்குப் பதிலாக வேறு பொருள்களில் மிகக் குறைந்த மின்சாரமே தேவைப்படும் அதிவேகச் சில்லுகளை உருவாக்க முடியும். கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படும் அதிவேக நிலையா நினைவகங்களுக்குப் (RAM - Volatile Memory) பதிலாக, அதே வேகத்தில் செயல்படக் கூடிய அழியா நினைவகச் (Non-volatile Memory) சில்லுகளைத் தயாரிக்க முடியும்.

கணிப்பொறிச் சில்லுக்குள் ஒளிவடிவக் குறிகைகளைக் (Optical Signals) கையாண்டு கணிப்பொறியின் செயல்வேகத்தை அதிகரிக்க முடியும். குவான்டம் எந்திரவியலின் துணையுடன், நானோ தொழில்நுட்ப வல்லுநர்கள் ‘குவான்டம் கணிப்பொறிகளை’ உருவாக்க முயன்று வருகின்றனர். அவற்றில் பிட்டுகள், பைட்டுகளுக்குப் பதிலாகக் ‘கியூபிட்’ (qubit) எனப்படும் குவான்டம் பிட்டுகள் பயன்படுத்தபடும். குவான்டம் கணிப்பொறிகளால் மிகச் சிக்கலான கணக்கீடுகளை மிகக் குறந்த நேரத்தில் செய்து முடிக்க முடியும்.

வைஃபி, வைமாக்ஸ் (Wi-Fi, WiMAX)

இவை ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்டன என்றாலும் வருங்காலத்தில் இவற்றின் முழுப் பரிமாணத்தையும் காணப் போகிறோம். தற்போது உச்சகட்ட வளர்ச்சி நிலையில் உள்ள செல்பேசி தொழில்நுட்பமும் வைஃபி, வைமாக்ஸ் ஆகிய வயரில்லாப் பிணையத் தொழில்நுட்பங்களும் சங்கமிக்கும். இவற்றின் தகவல் தொடர்பு ஊடகங்கள் ஒன்றாகிப் போகும். நகரத்தில் எந்த இடத்தில் இருந்துகொண்டும் மடிக்கணிப்பொறி அல்லது கையகக் கணிப்பொறியிலிருந்து இணையத்தைத் தொடர்புகொண்டு அனைத்து இணையச் சேவைகளையும் நுகர முடியும். காரில், பேருந்தில், ரயிலில், விமானத்தில் பயணிக்கும் போதே உங்கள் மடிக் கணிப்பொறியில் இணையத்தைத் தொடர்பு கொண்டு, மின்னஞ்சல் பார்க்கலாம். தகவல் தேடலாம். உங்கள் அலுவலக அல்லது வீட்டுக் கணிப்பொறியைத் தொடர்பு கொள்ளலாம்.

சூட்டிகை அட்டைகள் (Smart Cards)

குடிமக்கள் ஒவ்வொருவரும் குடும்ப அட்டை, அலுவலக அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரிக்கணக்கு அட்டை, கடன் அட்டை, பற்று அட்டை என ஏராளமான அட்டைகளை வைத்திருக்க வேண்டியுள்ளது. வருங்காலத்தில் ஓவ்வொருவரும் ஒரேயொரு ‘சூட்டிகை அட்டை’ வைத்துக் கொண்டால் போதும். அதனுள் ஒரு நுண்சில்லு (Microchip) பொருத்தப்பட்டிருக்கும். உடைமையாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அதில் பதிவாகியிருக்கும். அட்டை தொலைந்து போனாலும் வேறெவரும் அதனைப் பயன்படுத்த முடியாது. குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், இவ்வட்டையைப் பண அட்டையாக அல்ல பணமாகவே பயன்படுத்த முடியும்.

இணையம் வழியாக வங்கிக் கணக்கிலிருந்து சூட்டிகை அட்டையில் பண மதிப்பை ஏற்றிக்கொள்ள முடியும். அட்டை மூலம் பணம் செலுத்த முடியும். பெரும்பாலான பணப் பரிமாற்றங்களில் பண நோட்டுகளையும் நாணயங்களையும் கையாள்வது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும். உலகம் முழுவதிலும் இந்த மின்பணத்தைக் (e-cash) கையாள முடியும். ரூபாய், டாலர், பவுண்டு, ரூபிள், யென் என்கிற வேறுபாடெல்லாம் அற்றுப் போகும். சூட்டிகை அட்டையில் உள்ள பணமதிப்பு ‘டிவியூ’ (DVU - Digital Value Units) எனப்படும். அந்தந்த நாட்டு நாணயத்துக்கேற்ப டிவியூவின் மதிப்புத் தானாகவே மாற்றிக் கொள்ளப்படும்.

சமூகச் சிந்தனைகள்: இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வரதட்சிணைத் திருமணங்கள் குறைந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கின்றனர். மென்பொருள் துறையில் பணிபுரியும் பெண்கள் மென்பொருள் துறையில் பணிபுரியும் ஆண்களையே மணக்க விரும்புகின்றனர். கைநிறையச் சம்பளம் பெறுவதால் இவர்களுக்கு வேறு எதிர்பார்ப்புகள் எதுவும் கிடையாது. இவர்களுக்கிடையே காதல் திருமணங்களும் கலப்புத் திருமணங்களும் அதிகரித்துள்ளன. இவர்களது திருமணத்தில் வரதட்சணை முக்கிய பங்கு வகிப்பதில்லை என்று அறியப் பட்டுள்ளது. இத்தகைய திருமணங்களின் எண்ணிக்கை குறைவானதுதான் என்றாலும் மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றத்துக்குத் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஒரு காரணமாய் இருந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இணையத்தை மின்வெளி (Cyber Space) என்கின்றனர். நாடுகளின் எல்லைகளைக் கடந்து ஒரு புதிய மின்-நாடு (E-State) உருவாகி வருகிறது. வலைவாசிகள் (Netizens) என்னும் புதிய குடிமக்கள் உருவாகியுள்ளனர். மின்-சமூகம் (E-Community), மின்-பண்பாடு (E-Culture) என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர். அதற்கென, புதிய மின்வெளிச் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. உலகெங்கும் இணையம் வியாபிக்கும்போது மக்கள் மின் - வாழ்க்கையை (E-Life) வாழ்ந்து கொண்டிருப்பர். வாழ்க்கைமுறை மாறும்போது மனிதர்களின் சிந்தனையோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படும். சாதி, மதம், நாடு, இனம், மொழி இவையனைத்தையும் கடந்த புதியதோர் உலக சமூகம் எதிர்காலத்தில் உருவாக இணையம் வழிவகுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்