|
|||||||||
|
அன்புடையீர்! வருக! வணக்கம்! கம்ப்யூட்டர் பயிலும் கல்லூரி மாணவர்க்கும், கம்ப்யூட்டர் நெட்வொர்க் பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படும் அரிய நூல் எளிய தமிழில்!
பக்கங்கள்: 960 - விலை: ரூ. 550 கடந்த இரண்டு ஆண்டுகளாக, நெட்வொர்க் தொழில்நுட்பம் பற்றிய ஒரு முழுமையான நூல் எழுதும் பணியில் ஈடுப்பட்டிருந்த காரணத்தால் என் வலையகத்தைப் புதுப்பிக்காமல் இருந்துவிட்டேன். நீண்ட இடைவெளிதான். வாசகர்கள் மன்னிப்பார்களாக! என்னுடைய நெட்வொர்க் தொழில்நுட்பம் நூல் வெளிவந்துவிட்டது! ![]()
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2012 டிசம்பர் 28-30 தேதிகளில் நடைபெற்ற, 11-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில், இந்த நூல் வெளியிடப்பட்டது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ அவர்கள் வெளியிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் ஆர். மீனாட்சிசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார். நூலைப்பற்றி இந்த நூல், கம்ப்யூட்டர் நெட்வொர்க் தொழில்நுட்பம் பற்றி, எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், எளிய தமிழில் எழுதப்பட்ட ஒரு முழுமையான நூல். தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள், நவீனக் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேறுவதற்கு, ஆங்கிலம் ஒரு தடைக்கல்லாக அமைந்துவிடக் கூடாது என்கிற நோக்கில், தமிழில் எழுதப்பட்டுள்ள தரமான நூல். எந்தவோர் ஆங்கில நூலிலும் இல்லாத அளவுக்கு விரிவாகவும், விளக்கமாகவும், எளிமையாகவும், முழுமையாகவும், உலகத் தரத்துடன் எழுதப்பட்டுள்ள உயர்கல்விப் பாடநூல். அதுமட்டுமின்றி, எத்தகைய கடினமான அறிவியல் தொழில்நுட்பக் கருத்தாக்கங்களையும், ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழில், எளிமையாகப் புரியும் வண்ணம் எடுத்துக்கூற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் நூல். இந்த நூல், அப்ளிகேஷன் லேயர், டிரான்ஸ்போர்ட் லேயர், நெட்வொர்க் லேயர், டேட்டா-லிங்க் லேயர், ஃபிசிக்கல் லேயர் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றியும் அவற்றில் செயல்படும் புரொட்டக்கால்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. டீசிபீ/ஐபீ பற்றி வேறெந்த நூல்களிலும் இல்லாத அளவுக்கு விளக்கமான பாடங்கள் உள்ளன. சிசிஎன்ஏ தேர்வுக்குத் தேவைப்படும் அளவுக்கு, ஐபீ-வி4, ஐபீ-வி6 புரொட்டக்கால்கள், அவற்றின் முகவரி அமைப்புகள் பற்றிய விவரங்களைத் தருகிறது. வயர்லெஸ் நெட்வொர்க்குகள், புளூடூத், வைஃபி, வைமாக்ஸ், வயர்லெஸ் பிராட்பேண்ட், வர்ச்சுவல் லேன் ஆகிய தொழில்நுட்பங்களை விரிவாக விளக்குகிறது. 2-ஜி, 3-ஜி, 4-ஜி மொபைல் தகவல்தொடர்புத் தொழில்நுட்பங்கள், மொபைல் ஐபீ பற்றிய பாடங்களையும் கொண்டுள்ளது. மல்ட்டிமீடியா நெட்வொர்க்குகள் பற்றித் தனியாக ஓர் அத்தியாயத்தில் ஏழு பாடங்கள் அமைந்துள்ளன. கிரிப்டோகிராஃபி, டிஜிட்டல் சிக்னேச்சர், ஆதன்டிகேஷன் புரொட்டக்கால்கள், ஐபீ-செக், எஸ்எஸ்எல், ஃபயர்வால் இவைபோன்ற நெட்வொர்க் பாதுகாப்பு பற்றிய அனைத்து நுட்பங்களையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. நெட்வொர்க் மேலாண்மை பற்றிய பாடங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த நூல், பி.இ. கணிப்பொறியியல் அல்லது பி.டெக். தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் வகுத்துள்ள பாடத்திட்டத்தின்படி, கம்ப்யூட்டர் நெட்வொர்க் தாளுக்குரிய அனைத்துப் பாடங்களையும் முழுமையாகக் கொண்டுள்ளது. கிரிப்டோகிராஃபியும் நெட்வொர்க் பாதுகாப்பும், மொபைல் தகவல்தொடர்பு ஆகிய தாள்களுக்குரிய பெரும்பாலான பாடங்களையும் இந்த நூல் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, எஃப்டீபீ, எஸ்எம்டீபீ, டிஎன்எஸ், ஹெச்டீடீபீ, டீசிபீ/ஐபீ ஆகிய புரொட்டக்கால்களைப் பயன்படுத்திப் பல்வேறு நெட்வொர்க் அப்ளிகேஷன்களை உருவாக்கி, நடைமுறையில் செயல்படுத்தி வருகின்ற, நெட்வொர்க் புரோகிராமர்களுக்குப் பயன்படும் கட்டளைகளும், பதிலுரைகளும், பிழைசுட்டும் குறிமுறைகளும் விரிவாக இந்த நூலில் தரப்பட்டுள்ளன. ஆங்கில மொழியில் வெளிவந்துள்ள பொதுவான நெட்வொர்க் பாட நூல்களில் இத்தகைய தகவல்களைக் காண முடியாது. இந்த நூல், பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில், பயிற்சியகங்களில் கம்ப்யூட்டர் நெட்வொர்க் பயிலும் மாணவர்களுக்குப் பாட நூலாகவும் (Text Book), கற்றுத்தரும் ஆசிரியர்களுக்குக் குறிப்பு நூலாகவும் (Reference Book) பயன்படும். ஆசிரியர், மாணவர்கள் மட்டுமின்றி, ஆர்வமுள்ள எவரும் இந்த நூலைப் படித்து, கம்ப்யூட்டர் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை. நூலைப் பற்றிக் கல்வியாளர்களின் கருத்து மாணவர்களுக்கு மட்டுமல்லாது, பாமரனுக்கும் புரியும் வண்ணம் பல எடுத்துக்காட்டுகளுடன் எழுதியிருப்பதும் இந்நூலின் சிறப்பாகும். A Complete Reference on Computer Networks என்று தலைப்பில் கூறியிருப்பதை இந்நூல் மெய்ப்பித்திருக்கிறது. திரு. மு. சிவலிங்கம் அவர்கள், கணினிக் கலைச்சொல் அகராதி உருவாக்கியதில் முக்கியப் பணியாற்றியவர். தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்காக, கணினி பற்றிய பாடங்களை எழுதியவர். கணினி தொடர்பான பருவ இதழ்களில் பல்லாண்டுகளாக எழுதித் தமிழ்நாடெங்கும் அறிமுகமானவர். பலரின் பாராட்டையும் பரிசையும் பெற்றவர். அத்தகைய சிறப்புகளும், வல்லமையும் பெற்ற ஒருவர் இத்தகைய அரியதொரு நூலை எழுதியிருப்பது போற்றத் தகுந்த ஒரு செயலாகும். அதற்காக அவரை வாழ்த்தி வணங்குகிறேன். இந்நூல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமைந்து, அவர்களின் அறிவுத் தேடலுக்குத் துணையாக இருக்கும் என்பது திண்ணம்.
முனைவர் ப. அர. நக்கீரன், இந்த நூல் மிகவும் எளிய தமிழ் நடையில் எவரும் படித்துப் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. பிணையம் - ஒரு முன்னோட்டம் என்னும் முதல் அத்தியாயத்தில், நெட்வொர்க் பற்றிய பொதுவான விவரங்கள் அனைத்தையும் தொகுத்து வழங்கியுள்ளார். நெட்வொர்க் லேயர்களையும், அவற்றில் செயல்படும் புரொட்டக்கால்களையும் ஆழமாகத் தெளிவாக எழுதியுள்ளார். டீசிபீ/ஐபீ, ஐபீ-வி6 பற்றிய பாடங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் நவீனத் தொழில்நுட்பங்களான புளூடூத், வயர்லெஸ் பிராட்பேண்ட், வர்ச்சுவல் லேன், செல்பேசித் தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். மல்ட்டிமீடியா நெட்வொர்க்குகள் பற்றித் தனியாக ஓர் அத்தியாயத்தில் விளக்கியுள்ளார். கிரிப்டோகிராஃபி, டிஜிட்டல் கையொப்பங்கள், ஐபீ-செக், ஃபயர்வால் போன்ற நெட்வொர்க் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் போதுமான அளவுக்கு விளக்கமாக எழுதியுள்ளார். கடைசி அத்தியாயம் நெட்வொர்க் மேலாண்மை பற்றிச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. ஆக, இந்நூல் நெட்வொர்க் தொழில்நுட்பம் பற்றிய ஒரு முழுமையான நூலாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டுமின்றி, நெட்வொர்க் தொழில்நுட்பம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் படித்து எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம், நூலாசிரியர் திரு. மு.சிவலிங்கம் இந்த அரிய நூலைப் படைத்துள்ளார். அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே என் அவா. அவரின் பணிதொடர வாழ்த்துகள்!
முனைவர் வெ. சங்கர நாராயணன், நூலைப் பற்றி ஒரு வாசகரின் கருத்து திரு. மு.சிவலிங்கம் அவர்கள் சினேகலதா என்ற புனைப்பெயரில், தமிழ்க் கம்ப்யூட்டர் இதழில், டி’பேஸ் வழியாக சி-மொழி, சி-மொழியின் சிறப்புத் தன்மைகள், மொழிகளின் அரசி சி++, வருங்கால மொழி சி#, நெட்வொர்க் தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில், ஆழமான கருத்துருக்களை (Concepts) எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், மிக எளிய தமிழ்நடையில், நடைமுறை வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகளுடன், வேறெந்த ஆங்கிலமொழிப் புத்தகங்களில்கூட இல்லாத அளவுக்கு எழுதியுள்ளார். அவற்றைப் படித்து, சிக்கலான கருத்துருக்களையும் மிக எளிதில் புரிந்து கொண்டு, பல மாணவர்களும், என்னுடன் பணிபுரிந்த சில சக பேராசிரியர்களும், முன்னணிப் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் வெற்றியடைந்து, வேலைவாய்ப்புப் பெற்று, இன்றைக்கு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். திரு. மு.சிவலிங்கம் அவர்கள் தான் கற்றுத் தேர்ந்த நவீனக் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களைத் தன் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல், தான் பிறந்த தமிழ்மண்ணின் மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில், எந்த முறையில் எடுத்துரைத்தால் அவர்களுக்குப் புரியும் என்று சிந்தித்து, தமிழ் மக்களுக்குத் தமிழில் அறிமுகப்படுத்தியவர். இந்த நூலை முழுமையான ஒரு பாடப் புத்தகம் (Text Book) போலவும், நல்லதொரு குறிப்புப் புத்தகமாகவும் (Reference Book) ஆங்கில நூல்களையும் விஞ்சும் அளவுக்கு மிகவும் சிறப்பாகப் படைத்துள்ளார். திரு. மு.சிவலிங்கம் அவர்கள் எழுதியுள்ள இந்த நூல், தமிழ்பேசும் மக்கள் சமுதாயம் முழுமைக்கும் பயன்படும் என்னும் கருத்தை, அவரின் எழுத்துகளால் பயனடைந்த வாசகன் என்ற முறையில் இங்குப் பதிவு செய்ய விழைகின்றேன்.
எஸ். தினகரன், |
|
|||||||
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|